டைவர்ஸ்கார்ட்: விவாகரத்துக்கான ஒரு பிரத்யேக செயலி

விவாகரத்து பெறுவதற்கு சட்ட உதவி கோருபவர்களுக்கு ஒரு மொபைல் செயலி உதவி செய்கிறது.

அதிரிக்கும் விவாகரத்து

இந்தியாவில், விவாகரத்து வழக்குகள் அதிகரித்தாலும், அது குறித்த பொதுக் கருத்து மிக மோசமாகதான் உள்ளது. இதனை உணர்ந்த மும்பையில் உள்ள ஒரு வழக்கறிஞர், விவாகரத்துக்காக பிரத்யேகமான ஒரு செயலியை உருவாக்கி உள்ளார்.

`DivorceKart` என்று பெயரிடப்பட்ட இந்த செயலி கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ப்ளேஸ்டோர்களில் கிடைக்கிறது.

இந்த செயலியை இலவசமாக தரவிறக்கம் செய்து, விவாகரத்து குறித்த நமது சட்ட சந்தேகங்களை கேட்கலாம், தகுதியான வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த செயலிக்கான கருவை உருவாக்கியவர் விவாகரத்து வழக்குகளில் பெயர்பெற்ற வந்தனா ஷா எனும் வழக்கறிஞர். சிறு வயதிலேயே விவாகரத்து பெற்றவர்.

"நான் வெறும் ரூபாய் 750 பணத்துடன் வீட்டிலிருந்து வெளியேறினேன். நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பவர்கள் என்னைப் போல கஷ்டப்படக்கூடாது என்பதற்காகதான் இந்த `டைவர்ஸ்கார்ட்` செயலியை உருவாக்கி உள்ளேன்." என்கிறார் வந்தனா.

ஷாவிடம் 15 பேர் இந்த செயலிக்காக பணிபுரிகிறார்கள். இவர்கள் இரவு பகலாக செயலியின் மூலம் மக்கள் அளிக்கும் கேள்விகளுக்கு பதில் கூறி வருகிறார்கள்.

இந்த செயலி விவாகரத்து கோருபவர்களுக்கு ஆலோசனையையும், உதவிக் குழுக்களை தொடர்புகொள்ள உதவியையும் வழங்கி வருகிறது.

"டைவர்ஸ்கார்ட் செயலி நீதிமன்றத்தை அணுகுபவர்களுக்கான தகவலை மட்டும்தான் வழங்குகிறது. நாங்கள் விவாகரத்தை ஊக்குவிக்கவில்லை," என்கிறார் வந்தனா.

மேலும் அவர், "இன்றைய சமூகத்தில் விவாகரத்து என்பது அதிகம் செலவு பிடிக்கும் செயலாக மாறிவிட்டது. சாதாரண ஒரு வழக்கறிஞரே இதற்காக சுமார் 90,000 ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை ஆலோசனை வழங்குவதற்கு பெறுகிறார்.

அதுமட்டுமல்ல. வழக்கும் பல ஆண்டுகள் நடக்கிறது. எங்களுடைய இந்த செயலி, விவாகரத்து குறித்த ஒருவரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறது. அத்தோடு, விவகாரத்து சட்டங்கள் குறித்த சட்டத் தகவல்களை தினமும் புதுபிக்கிறது. குறிப்பாக ஆலோசனை பெறுகிறவர்கள் குறித்த தகவல்களைப் பாதுகாக்கிறது." என்கிறார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த செயலி மூலம் எங்களை அணுகுபவர்களில் 60 சதவிகிதம் பேர் ஆண்கள்.

"பின்புதான் எனக்கு புரிந்தது, ஆண்களுக்கு இது தொடர்பாக பேசுவதற்கு யாருமில்லை. அவர்களுக்கு இது குறித்துப் பேச, தங்கள் சந்தேகங்களைக் கேட்க ஒரு தளம் தேவைப்படுகிறது. அதனால், இந்த செயலியை அணுகுகிறார்கள் என்று."

இந்தியாவுக்கு இந்த செயலி எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்ற கேள்விக்கு, 'தவிர்க்க முடியாத அளவிற்கு' என்கிறார் வந்தனா.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பாக 20 வழக்குகள் இருந்தன. ஆனால் இப்போது 70. விவாகரத்துக்காக நீதிமன்றத்தை அணுகுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் `டைவர்ஸ்கார்ட்` போன்ற செயலி அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :