இந்த பேச்சுவார்த்தைக்கான பெருமை டிரம்ப்பையே சேரும்: தென் கொரிய அதிபர்

மூன் ஜே -இன் படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரியா மற்றும் வட கொரியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதற்கான பெருமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையே சேரும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன் கூறியுள்ளார்.

இதற்கு நன்றிபாராட்ட விரும்புவதாகவும் மூன் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை, தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா தன் அணியை அனுப்பும் என்று அறிவிக்க காரணமாக அமைந்தது.

ஒரு வாரத்திற்கு முன்பு டிரம்ப், இந்த பேச்சுவார்த்தைக்கு தாம்தான் காரணம் என்று ட்வீட் செய்திருந்தார்.

"உறுதியான, வலுவான மற்றும் வட கொரியாவுக்கு எதிராக மொத்த வலிமையையும் காட்ட மனமுவந்து செயல்பட்டதன் மூலம் இந்த பேச்சுவார்த்தை சாத்தியமாகி இருக்கிறது," என்று கூறி இருந்தார்.

புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மூன், "கொரிய நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தைக்கான பெருமை அனைத்தும் அதிபர் டிரம்ப்பையே சேரும் என்று நினைக்கிறேன்."

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரி சன் க்வான் (வலது) தலைமையிலான வடகொரியத் தூதுக்குழு சோ மியங்-க்யான் தலைமையிலான தென்கொரியத் தூதுக்குழுவை செவ்வாய்க்கிழமை சந்தித்தது.

அமெரிக்கா முன்னெடுத்த பொருளாதாரத் தடை மற்றும் அவை கொடுத்த அழுத்தங்கள் இந்த பேச்சுவார்த்தைக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

புதன்கிழமை, வட கொரியாவின் ஒரே ஒரு பிரதிநிதி சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு தலைமையகத்துக்கு வருகை தந்து, 2018 ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கெடுப்பதற்கான ஒப்பந்ததை முறைப்படுத்தினார்.

தென் கொரிய அதிபர் மூன் கடினமான ராஜதந்திர பாதையில் செல்கிறார். அவர் வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் விரும்புகிறார். அதே நேரம் தனது கூட்டாளியான அமெரிக்காவையும் எரிச்சலூட்டிவிடக் கூடாது, பொருளாதார தடைகளையும் மீறிவிட கூடாது என்று செயல்படுகிறார் என்று சோலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

கொரிய நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையை வரவேற்றுள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம், "கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தையும், உறுதியற்றத் தன்மையையும் இந்த பேச்சுவார்த்தை குறைக்கும்." என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :