காஷ்மீர்: பெல்லட் குண்டு தாக்குதலுக்குப் பின் அவரது மருத்துவ கனவு என்ன ஆனது?

இன்ஷா முஸ்தாக்

பட மூலாதாரம், Abid Bhat

அவர் பெயர் இன்ஷா முஸ்தாக். அவருக்கு 16 வயது. அவருக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. `இருந்தது` ஆம் இறந்த காலம்தான். அந்தக் கனவு ஒரு பெல்லட் குண்டில் சிதைந்து போனது.

இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 2016ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இந்திய ராணுவம் பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இன்ஷா முஸ்தாக் தனது பார்வையை முழுமையாக இழந்தார். இதனால் அவர் தனது மருத்துவக் கனவுகளைக் கைவிட்டு, இசையைத் தேர்ந்தெடுத்தார்.

இப்போது பத்தாம் வகுப்பு தேர்வில் வியத்தகு வெற்றி பெற்றுள்ளார் இன்ஷா. இதற்காக அவரது மொத்த கிராமமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இப்படியான தருணத்தில் இன்ஷாவையும், அவரது குடும்பத்தையும் சந்தித்து நமது பிபிசி செய்தியாளர் அபிட் பட் உரையாடினார்.

அந்த உரையாடலிலிருந்து,

கறுப்பு கண்ணாடி அணிந்திருந்த இன்ஷா உற்சாகமாக தனது உரையாடலை தொடங்கினார், "வெகு நாட்களுக்குப் பின் இப்போது நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்."

அவரது தந்தை முஸ்தாக் அஹமது லோன் இந்த உரையாடலில் பங்குக் கொள்கிறார். அவர், "இது அற்புதமன்றி வேறெதுவும் இல்லை. அவள் எதிர்கொண்ட அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து இந்த வெற்றியை எட்டி இருக்கிறாள். அவள் எங்களை பெருமையடைய செய்துவிட்டாள்," என்கிறார்.

சில நொடிகளில்...

ஜூலை 11, 2016 ஆம் ஆண்டு ஒரு பெரும் சத்தம் கேட்கிறது. ஷோபியான் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் ஜன்னலை இன்ஷா திறந்து பார்க்கிறார். அவர் ஜன்னலை திறந்த சில நொடிகளில் அவரது கண்களை பெல்லட் குண்டு தாக்குகிறது.

பட மூலாதாரம், Abid Bhat

அவர் வாழ்க்கையில் இருள் சூழ்கிறது. அடுத்த மூன்று மாதங்கள் அவர் தனது நாட்களை பார்வையை மீட்டுவிடலாம் என்ற பெரும் நம்பிக்கையில் மருத்துவமனையிலும் வீட்டிலுமாக கழிக்கிறார். ஆனால், அவளது நம்பிக்கை நிஜமாகவில்லை.

அந்த சமயத்தில் அவரிடம் பேசியபோது, விரக்தியுடன் புத்தகங்களை புரட்டியப்படியே சொன்னாள், "இப்போது என்னால் இவற்றை (புத்தகத்தின் பக்கங்களை) உணர மட்டுமே முடிகிறது."

ஆனால் இந்த துயரங்கள் எதுவும், அவர் தேர்விலிருந்து வெற்றிப் பெறுவதை தடுக்கவில்லை. நவம்பர் 2017இல் நடந்த தேர்வில், கேள்விகளை ஒருவர் படித்து காட்ட, இவர் பதிலை சொல்லி தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார்.

தேர்வு முடிவுகள் வந்த செவ்வாய்கிழமை மாலையிலிருந்து, அவரைப் பற்றி அவரது கிராமம் பேசிக் கொண்டு இருக்கிறது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். செய்தியாள்ர்கள் அவரது வீட்டை முற்றுகை இட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும், அவர் தனது எதிர்காலம் குறித்து எந்த உறுதியானமுடிவையும் எடுத்துவிடவில்லை. "நான் மருத்துவம் படிக்க விரும்பினேன். ஆனால், இது இப்போது சாத்தியமில்லை. அடுத்து என்ன என்பதையும் நான் இன்னும் முடிவு செய்யவில்லை."

பட மூலாதாரம், Getty Images

நியாயமற்ற அணுகுமுறை

இன்ஷாவின் முகத்தில் ஏற்பட்ட காயங்கள், அவரது முகத்தை சிதைத்துவிட்டது. இது உலகின் கவனத்தை ஈர்த்து, "மக்களின் போராட்டத்தை இந்தியா நியாயமற்ற முறையில் அணுகி இருக்கிறது" என்று கண்டிக்க காரணமாக அமைந்தது.

மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, ராணுவம் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியது. இந்திய ராணுவம், இந்த பெல்லட் குண்டுகள் அனைத்தும் ரப்பரால் செய்யப்பட்டவை, ஆட்களை கொல்லுகிற குண்டு இல்லை என்றது.

ஆனால், டஜன் கணக்கான மக்கள் இந்த பெல்லட் குண்டுகளால் இறந்தனர். ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பலரது விழிகள் மோசமாக காயமடைந்தது.

இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக நடந்த அந்த சண்டையில் காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்களில் இன்ஷாவும் ஒருவர்.

அந்த தாக்குதல் சம்பவம் நடந்த 2016ஆம் ஆண்டு, இன்ஷாவின் தந்தையை சந்தித்தபோது, அவர் சொன்னார், "இந்த தாக்குதலில் அவள் இறந்திருந்தாள் கூட, நான் அந்த துயரத்திலிருந்து மீண்டு வந்திருப்பேன். ஆனால், அவள் விழிகளை இழந்து இருப்பது என்னை தினம் தினம் கொல்கிறது." என்றார்.

அவளது பார்வையை சீராக்க பல சுற்று அறுவை சிகிச்சை நடந்தன. ஆனால், எதுவும் பலன் தரவில்லை. "இதனை கடந்து, நான் என் எதிர்காலத்தில் கவனம் செலுத்த தொடங்கினேன்," என்கிறார் இன்ஷா.

மேலும் அவர், "இந்த காயத்திற்கு பின், எனக்கு மனனம் செய்வதில் சிக்கல் உண்டாகியது. என் ஆசிரியர் நான்கு முறை பாடத்தின் குறிப்புகளை சொன்னாலும், என்னால் மனனம் செய்யமுடியவில்லை. சில சமயம் பாடத்தை மறந்துவிடுகிறேன்." என்கிறார்.

"அவளுக்கு காயம் ஏற்படும் முன், மனனம் செய்வதில் அவளுக்கு எந்த சிக்கலும் ஏற்பட்டதில்லை. சில சமயங்களில் அவள் இதனால் எரிச்சலடைந்து, நான் இனி படிப்பை தொடரபோவதில்லை என்று கூறி இருக்கிறாள்," என்று அவரது ஆசிரியர் முஸாஃபர் பட் விவரிக்கிறார்.

"ஆனால், அவள் இப்போது அனைத்து தடைகளையும் வென்றுவிட்டாள். அவள் சிறப்பாக தேர்வெழுதினாள். அவள் மன உறுதியுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று இருக்கிறாள்," என்கிறார்.

காஷ்மீருக்கான ரத்தம்

கடந்த 60 ஆண்டுகளாக `காஷ்மீர்` இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் மையப் புள்ளியாக இருக்கிறது. இதன் காரணமாக, அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்த நாடுகளுக்கு இடையே இரண்டு யுத்தங்களும் நடந்துள்ளன.

காணொளிக் குறிப்பு,

காஷ்மீர்

காஷ்மீர் முழுவதும் எங்களுடையது என்று இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், இரண்டு நாடுகளும் ஒரு பகுதியை மட்டும்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

காஷ்மீரில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தானே காரணமென்று இந்தியா குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், இதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :