வரி ஏய்ப்பை தடுக்க தொழில்நுட்பம்: ஜி.எஸ்.டி வரி வசூலிக்க புதிய மென்பொருள்

ஜி எஸ் டி படத்தின் காப்புரிமை Getty Images

சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரியை வசூலிப்பதற்கு கர்நாடக மாநிலம் உருவாக்கிய தொழில்நுட்பத் தீர்வுகளை பிப்ரவரி மாதத்தில் இருந்து மற்ற மாநிலங்களும் பின்பற்ற உள்ளன.

தேசிய அளவில் பா.ஜ.க, காங்கிரஸ் இடையே மோதல்கள் இருந்தாலும், காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்தின் இந்த புதிய தொழில்நுட்பம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் பயன்பாட்டுக்கு வருகிறது

பழைய வரி முறையான 'வாட்' வரியை வசூலிக்க தாம் பயன்படுத்தி வந்த இ-சுகம் என்ற மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான இ-வே பில் என்ற மென்பொருளை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் பயன்படுத்தி வருகிறது கர்நாடகம்.

"ராஜஸ்தான், குஜராத் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இந்த இ-வே பில் மென்பொருளை அமல்படுத்த தொடங்கிவிட்டன. அடுத்த மாதம் முதல், மற்ற மாநிலங்களிலும் இது பின்பற்றப்படும் என ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது" என பிபிசியிடம் பேசிய வணிக வரி ஆணையர் ஸ்ரீகர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த இ-வே பில் முறையில், "ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மற்றும் 900 போக்குவரத்து வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசீதுகள் தினசரி உருவாக்கப்படுகின்றன" என்றும் ஸ்ரீகர் தெரிவித்தார்.

வாட் வரி அமலுக்கு வரும் முன், விறபனையாளர் அல்லது தயாரிப்பவர் அல்லது உற்பத்தியாளர் மூன்று படிகளில் ரசீது வழங்க வேண்டும். இரண்டு படிகள், பொருட்களை கொண்டு சேர்க்கும் வாகன ஓட்டுனரிடம் கொடுக்க வேண்டும். மூன்றாவது நகல் வணிக வரித்துறையிடம் வியாபாரி சமர்பிக்க வேண்டும்.

நேரடியாக ரசீதினை தாக்கல் செய்யும் இந்த முறையில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி, செக் போஸ்டுகளில் வாகனங்கள் காத்திருப்பது தேவையாக இருக்கும். "வாகனங்களில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு என்ன என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வழி இல்லாமல் இருக்கும். இதனால், அதிகளவில் வரி ஏய்ப்பு நடைபெற்றது" எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வரி ஏய்ப்பை தடுக்கவே தகவல் தொழில்நுட்பத்தை வணிக வரித்துறை பயன்படுத்தியது. இ-சுகம் மென்பொருள் முறை அனைத்து தகவல்களும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதாக உள்ளது. பிகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களும் இ-சுகம் முறையை அமல்படுத்தியுள்ளன.

மேம்படுத்தப்பட்ட இ-வே பில் முறை, அனைத்து வாகனங்களும் தங்கள் விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்வதை உறுதி செய்வதோடு, அதன் ரசீதுகள் ஓட்டுனர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கவும் வழி செய்கிறது.

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்: