திருச்சியில் கழிவு நீரை நிலத்தடி நீராக்கும் 'நீர் மேலாண்மைப் பள்ளிவாசல்'

முஸ்லிம்கள் படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

திருச்சி தமிழகத்தின் மையப்பகுதி. கரை புரண்ட காவிரி, கதிர் விளைந்த டெல்டா. இவற்றையெல்லாம் தற்போது காணமுடியவில்லை. காரணம்... நிலையில்லாத சூழலியல் மாற்றங்களே.

" வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை" என்னும் சொலவடைக்கு ஏற்ப வெள்ளமாகவும் வறட்சியாகவும் புரட்டி எடுக்கும் பருவநிலை. தமிழகம் முழுக்க இது தான் இன்றைய நிலை. ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய கட்டுமானங்கள் இவையெல்லாம் "நீர் மேலாண்மை" நிமித்தமே உருவாக்கப்பட்டன.

நம் முன்னோர்கள் கையாண்ட நீரியல் தொழில்நுட்பம், நீரை சிக்கனமாக பயன்படுத்திய விதம், பகிர்ந்து கொண்டமுறை, நீர் நிலைகளை பராமரித்த பாங்கு ஆகியவை இன்றும் கவனம் பெறுகின்றன.

இதே கவனத்தோடு, இன்றைய நிலையில் நீரின் தேவையையும், நீர் மேலாண்மையையின் அவசியத்தையும் உணர்ந்த திருச்சி ஜெனரல் பஜார் பகுதிவாசிகள் தங்களது வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலில் 'விண் தந்த நீரையும், வீணாகும் நீரையும்', "நீர் மேலாண்மை" முறையைப் பயன்படுத்தி நிலத்தடி நீராக சேமித்து, வறட்சியிலும் தங்கள் இடத்தில் நிலத்தடி நீர்வளம் குறையாத நிலையை எட்டி வெற்றி கண்டுள்ளனர்.

ஜெனரல் பஜார், பென்ஷனர் தெருவில் உள்ள மஸ்ஜிதுல் ஆலியா பள்ளிவாசல் நூறாண்டுக்கும் மேலான பழமை வாய்ந்தது. இங்கு வாரத்தின் எல்லா நாட்களிலும் தொழுகை நடை பெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலானோர் தொழுகைக்கு வருவார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இப்பள்ளிவாசலில் இருந்து நாளொன்றுக்கு 1000 லிட்டர் நீரும், வெள்ளிக்கிழமைகளில் 5000 லிட்டர் நீரும் பயன்படுத்தப்பட்டு சாக்கடையில் கலக்கும். ஆனால் தற்போது ஒரு துளி நீர் கூட பள்ளி வாசலில் உள்ள சேமிப்பு தொட்டிகளை தாண்டி வெளியேறுவதில்லை. அதுமட்டுமின்றி இங்கு உபயோகத்திற்கு தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதில்லை.

காரணம், நீர் மேலாண்மை. இதன் அருகில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அல் - மத்ரஸதுல் ஆலியா நிஸ்வான் எனும் பெண்கள் தொழும் கட்டிடம் என அனைத்து கட்டடங்களை சுற்றிலும் சுமார் நான்கிற்கும் மேலான மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் மழைநீரோடு, உபயோகிக்கும் தண்ணீரும்வந்து சேரும் வண்ணம் கட்டமைப்பு வசதியினை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் தொட்டிகளில் சேரும் நீரானது மறு சுழற்சி முறையில் நிலத்தடி நீராகிறது. கடந்த ஆண்டு திருச்சியில் கடும் வறட்சி நிலவிய போதும் இங்குள்ள ஆழ்துளை கிணறுகளில் மட்டும் நீர் வற்றாதது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இது குறித்து இப்பள்ளிவாசலின் நிர்வாக குழு உறுப்பினர் அப்துல் மாலிக் கூறுகையில்: "மஸ்ஜிதுல் ஆலியா பள்ளிவாசல் மிகப் பழமை வாய்ந்தது. இப்பள்ளிவாசலில் நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுகை நடைபெறும். ஒவ்வொரு முறைக்கும் குறைந்தது 100 பேராவது தொழுகைக்கு வருவார்கள். தொழுகைக்கு முன்னர் கை, கால்கள், முகம் ஆகியவற்றை சுத்தமாக கழுவி விட்டு தான் தொழுகைக்கு செல்ல வேண்டும். இப்படி செய்கையில் ஒரு நபருக்கு குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் நீராவது செலவாகும். இப்படி செலவாகும் நீரானது சாக்கடைகளிலும், பாதாள சாக்கடையிலும் கலந்து வீணாகிறது. இதற்கு மாற்று என்ன என்று யோசித்த பொது தோன்றியது தான் மழை நீர் சேகரிப்பு தொட்டியில் வீணாகும் நீரையும் சேமித்து மறு பயன்பாடு செய்யும் நீர் மேலாண்மை முறை," என்று தெரிவித்தார்.

"இத்திட்டம் இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, கடந்த ஆண்டு இப்பகுதி முழுவதும் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் 60 அடிக்கும் கீழ் சென்றபோதும், இப்பள்ளி வாசலில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் 30 அடியிலேயே இருந்தது," என பெருமையாகச் சொல்கிறார் அப்துல் மாலிக்.

மேலும் தொடர்ந்த அவர், இத்திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்வதோடு, பாதாள சாக்கடையில் நீர் கலப்பதும் வெகுவாக குறையும். எனவே இத்திட்டத்தை மற்ற பள்ளி வாசல்களிலும் செயல்படுத்த வலியுறுத்தி வருகிறோம் என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்