உச்சநீதிமன்ற பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு வருவது சரியா?

நீதிபதிகள்

உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாக நான்கு மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி இருப்பது, நீதித்துறையில் என்ன நடக்கிறது என்ற முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது, உச்சநீதிமன்ற நிர்வாகம் மீதும் தலைமை நீதிபதி மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

இதுகுறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்றத் தலைமை நீதிபதி கற்பகவினாயகம், இப்படி நான்கு மூத்த நீதிபதிகள் சேர்ந்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு வைப்பது என்பது, மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைத்து விடும் என்றார்.

பிரச்சினைகள் என்பது எல்லா நீதிமன்றங்களிலும் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நிர்வாகக் கோளாறுகள் குறித்து விவாதிக்க அல்லது தீர்வு காண, முழு நீதிமன்றத்தை கூட்டி அங்கு முறையிட வேண்டும். உச்சநீதிமன்றம் எனும் பட்சத்தில் 31 நீதிபதிகளையும் கூட்டி இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முயற்சித்திருக்க வேண்டும்" என்று நீதிபதி கற்பகவினாயகம் தெரிவித்தார்.

மேலும், நீதித்துறையின் உள்விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களிடம் அல்லது மக்களிடம் முறையிடுவதை அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட கற்பகவினாயகம், நீதித்துறை என்பது ஒரு தன்னிச்சையான அமைப்பு என்றும் அதன் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

"இந்த நடவடிக்கையால் நீதித்துறையில் அரசாங்கம் தலையிடும் நிலை வந்துவிடும். இது ஆரோக்கியமான முறையல்ல. இதனால் உச்சநீதிமன்றத்தின் புனிதத் தன்மையில் களங்கம் ஏற்பட்டு விட கூடாது" என்றார் அவர்.

படத்தின் காப்புரிமை DDNEWS
Image caption தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளிடம் இருந்தும் கையெழுத்து பெற்று, முறையாக முழு நீதிமன்றத்தை கூட்டியிருக்கலாம். அல்லது இதையே பொதுநல வழக்காகக் கூட அவர்கள் தொடர்ந்திருக்கலாம் என்றும் பிபிசியிடம் பேசிய கற்பகவினாயகம் தெரிவித்தார்.

இந்நிலையில், உண்மையிலேயே உச்சநீதிமன்றத்தில் நிர்வாகக் கோளாறுகள் உள்ளதா என கேட்டதற்கு "ஒரு பார்வையில் பிரச்சினை உள்ளது. ஆனால் ஒரு பார்வையில் இல்லை" என்றார்.

"உச்சநீதிமன்றத்தின் அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதிதான் எடுக்க முடியும். அவர்தான் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுத்தர முடியும். அங்கு தீர்வில்லை என்பதற்காக மக்கள் முன் இதனை கொண்டு செல்வது சரியான முறையாகாது. இந்த பிரச்சனையை வெளியில் தெரியாமல் பார்த்திருக்க வேண்டும்."

படத்தின் காப்புரிமை PTI
Image caption செல்லமேஸ்வர்

நீதிபதிகள் தேர்வு முறையில்தான் வெளிப்படைத்தன்மை வேண்டுமே தவிர இந்த மாதிரியான விவகாரங்களில் ஒருவரை காட்டிக் கொடுப்பது என்பது வெளிப்படைத்தன்மை ஆகாது. இந்த 4 பேரின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை என்று கூறிய நீதிபதி கற்பகவினாயகம், இதனால் மக்கள் உச்சநீதிமன்றம் மீது வைத்துள்ள மரியாதை பாதிக்கும் என்றார்.

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்