இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக 4 மூத்த நீதிபதிகள் போர்க்கொடி

உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் டெல்லியில் நீதிபதி செல்லமேஸ்வர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்

பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு உள்பட பல சர்ச்சைகளை அவர்கள் தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கவலையையும் ஆட்சேபத்தையும் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு முன்னதாகவே கொண்டு சென்றும் கவனிக்கப்படவில்லை என்றும், இன்று காலையும் அவரிடம் இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டும் அது கவனிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் புகார் கூறினார்கள்.

தலைமை நீதிபதிக்கு அவர்கள் ஏற்கெனவே எழுதிய ஏழு பக்க கடிதத்தில், தலைமை நீதிபதி எந்த வழக்குகளை எந்த அமர்வு கையாள்வது என்று ஒதுக்கீடு செய்து, நீதிமன்ற நடைமுறைகள் குளறுபடியின்றி நடைபெறுவதை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தவர் என்றாலும், உச்ச அதிகாரம் படைத்தவர் அல்ல என்றும், மற்றவர்களுக்கு சமமானவர்தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதில், நீதிபதி கர்ணன் விவகாரம் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை DDnews
Image caption தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய வழக்குகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவை தலைமை நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுவது உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைத்திருப்பதாக தங்கள் கடிதத்தில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு வழக்கை விசாரிக்கும் அமர்வில் யார் இடம் பெறுவது, எந்த அமர்வில் பேர் இடம் பெறுவது என்பது குறித்து சரியாக முடிவெடுக்காவிட்டால், அதனால் ஏற்படும் தாக்கங்கள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption செல்லமேஸ்வர்

குறிப்பாக, சமீப காலமாக இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு, தங்களுக்கு வேண்டிய வகையில், ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தலைமை நீதிபதி மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற நிகழவுகளை வெளிப்படையாகக் கூறுவது நீதித்துறை மாண்பைக் குலைக்கும் என்றும், அதே நேரத்தில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் மாண்பைச் சிறுமைப்படுத்தியிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களது முயற்சி தோல்வியடைந்த காரணத்தால்தான், என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களிடம் தெரிவித்து, அடுத்து அவர்கள் முடிவு செய்யட்டும் என்பதற்காகத்தான் தாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்து இதை அறிவித்ததாகவும் தெரிவித்தனர்.

நீதிபதி கர்ணன் விவகாரம்

நீதிபதி கர்ணன் விவகாரம் குறித்து தங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள் , "நீதிபதி கர்ணன் விவகாரத்தில் எடுத்த முடிவின்போது, தங்களில் இரண்டு நீதிபதிகள், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நீதிபதிகள் நியமன முறையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், பதவி நீக்கம் செய்வதைத் தவிர, சீரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு செயல்முறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெிரிவித்திருந்தும், அதுகுறித்து ஏழு நீதிபதிகளும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தகைய நடைமுறைகள், தலைமை நீதிபதி முன்னிலையில் முழு நீதிமன்றமும் கூடி விவாதிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அரசியல் சட்ட அமர்வு அத்தகைய முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு

சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை குற்றவாளி என்று நிரூபணம் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் டிசம்பர் 30 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு விடுவித்தது.

Image caption மோடியுடன் அமித் ஷா

குஜராத் மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு சிறப்பு காவல் பிரிவால், கடந்த 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட என்கவுன்டர் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதன்படி சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் கொலை போலியானது என்றும், இதற்கும் அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், கடந்த 2006 ஆம் ஆண்டின் போது குஜராத் காவல் துறையினரால் மற்றொரு போலியான என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படிருந்தது.

இந்நிலையில் இந்த கொலைகளுக்கும் அமித் ஷாவுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறிய மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம், அவரை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

காங்கிரஸ் கவலை

உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் உச்சநீதிமன்றம் செயல்படும் விதம் குறித்து கவலை தெரிவித்திருப்பது கவலை அளிக்கக்கூடியது என்று காங்கிரஸ் கட்சி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி கருத்து

இந்த விஷயம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நான்கு நீதிபதிகளும் முக்கிய விஷயங்களை எழுப்பியுள்ளனர். ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று தெரிவித்துள்ளனர். இது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்று தெரிவித்தார். "நாம் புனிதமெனக் கொண்டுள்ள விழுமியங்களின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த பிரச்சினைகள் வேதனையை ஏற்படுத்தக்கூடியவை" என்று அவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நீதிபதி லோயா மரணம் பற்றி உயர்ந்தபட்ச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ராகுல் கோரினார்.

பாஜக பதில்

ராகுலுக்குப் பதில் தந்து பேசிய பாஜக-வின் சம்பித் பத்ரா, இது உச்சநீதிமன்றத்தின் உள் விவகாரம். அட்டர்னி ஜெனரல் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் எந்த அரசியலும் செய்யக்கூடாது. ஆனால், தேர்தல்களில் பலமுறை மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. இதன் மூலம் காங்கிரஸ் தம்மை அம்பலப்படுத்திக்கொண்டது என்று கூறியுள்ளார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்