“நீதிபதிகளே கலங்கி நின்றால் யாரிடம் முறையிடுவது?”

  • 13 ஜனவரி 2018
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்ற மாண்புக்கு களங்கம் ஏற்படுத்துமா?

நீதிமன்ற செயல்பாடுகளில் ஜனநாயக நெறிமுறையை நிலைநாட்ட இது உதவுமா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கருத்துக்களை தெரிவிக்க கேட்டிருந்தோம்.

நேயர்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்

ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள குலாம் மொகைதீன் என்ற நேயர், “அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில், நீதித்துறை செயல்படுவது நாட்டின் ஜனநாயக மாண்புக்கு பேராபத்தை விளைவிக்கும். ராணுவம், நீதித்துறை, காவல்துறை, தேர்தல் ஆணையம், இவைகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்துவிட்டது மத்திய அரசு” என்று தெரிவித்திருக்கிறார்.

ரெங்கசாமி குமரன் என் நேயர் இட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘நீதிபதிக்குத் தலைவணங்குவது இந்தக்காலம்‘ என்கிறார்.

சரோஜா பாலசுப்பிரமணியம் என்ற நேயர், “மக்களின் இறுதி நம்பிக்கை, ஒளிக்கீற்று உச்ச நீதிமன்றம்தான்.ஆனால் நீதிபதிகளே கலங்கி நின்றால் யாரிடம் போய் முறையிடுவது? வரவர ஜனநாயகம் போய் சர்வாதிகாரம் தலை விரித்து ஆடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption நீதிபதி செல்லமேஸ்வர்

எம். ஜார்ஜ் பீட்டர் என்ற நேயர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் ‘நீதிபதிகளே குற்றம் செய்தால் இனி யாரை நம்புவது‘ என்று தன்னுடைய விரக்தியினை பதிவிட்டுள்ளார்.

“உங்களின் மனசாட்சி மற்றும் இந்த தைரியத்திற்கு வாழ்த்துக்கள்..... என்ற பதிவிட்டுள்ளார் டேவிட் அரசு என்ற நேயர்.

முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் முறைகேடுகளை தைரியமாக 4 பேர் வெளிகொண்டுவந்துள்ளனர் என்று டுவிட்டர் பதிவிட்டுள்ளார் கனகராஜன் போஸ்.

சக்தி சரவணன் என்ற நேயரின் கருத்து இது.

”நீதிமன்றத்தின் நடுநிலையற்ற நிலையை வீதிக்கு வெளிச்சமிட்டவரின் எண்ணிக்கை நீள்வதற்குள் நீதித்துறையின் குறைகள் களையெடுக்கப்படாவிடில் வரலாற்றில் கண்ட கட்டப் பஞ்சாயத்துகள் வழக்காடு மன்றத்தில் தொடர்வதற்கு வழிவகுத்துவிடும். மக்கள் தங்களுக்கான நீதியைப் பெற நீதிமன்றத்தை நாடிடும் நிலை மாறி நீதிபதிகள் மக்களிடத்தில் முறையிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, சட்டத்தின் ஓட்டைகளால் ஆட்சியை ஆள்பவர், பணம் படைத்தவரின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது என்றுதான் பொருள் கொள்ளப்பட வேண்டியுள்ளது. இது மக்களாட்சிக்கு உகந்தது அன்று.

என். மணிகண்டன் என்ற நேயர், “இவங்க பொதுவெளில வருவதற்கு முன்னாடி குடியரசு தலைவர சந்தித்து கோரிக்கை வச்சுருக்கலாம்..! என்று ஆலோசனை கூறி டுவிட் பதிவிட்டுள்ளார்.

கைக் மொகைதீன் என்ற நேயர் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “நீதிமன்றம் அரசியல்வாதிகளுக்கு கைகட்டுவதை என்று ஆரம்பித்ததோ அன்றே தனது முக்கியத்துவம் இழந்துவிட்டது. நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் என்றைய தினம் முன்வருமோ அன்று மக்களாகிய நாங்கள் நம்புவோம். தன்னிச்சையாக நீதிமன்றம் இந்தியா முழுவதும் செயல்பட முடியுமா????? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இரா.வீரவேந்தன் என்ற நேயர் இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நியாயமானது தான் என்று 4 நீதிபதிகளுக்கு ஆதரவாக டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

4 நீதிபதிகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள முத்துசெல்வன் பிரேம், “நிச்சயமாக களங்கம் தான். நீதிபதிகளை பரிந்துரைபடி நியமனம் செய்வதை விட்டு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்கிறார்.

வேலு என்ற நேயரோ, நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதில் நான்கு நீதிபதிகள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ன நியாயமான நடவடிக்கை எடுக்க போகிறார் என பார்க்க நாடே காத்திருக்கிறது! என்கிறார்.

படத்தின் காப்புரிமை NALSA.GOV.IN
Image caption இந்திய உச்ச நீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டார் நீதிபதி தீபக் மிஸ்ரா

தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாலசுப்பிரமணியன் ஜனநாயக நாட்டில் இவ்வகை எதிர்ப்புகள் தேவையானவையே என்று தெரிவித்திருக்கிறார்.

புலிவாலாம் பாஷா என்ற நேயர், “தீர்ப்புகள் மத்திய அரசுக்கு எதிராக கூறினால் நீதிபதியானாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சக நீதிபதிகளின் குற்ற சாட்டுகள் மூலம் நாட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள்!! என்கிறார்.

“இன்றைய சூழ்நிலையில் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் பிண்ணியில் வழங்கபடுகின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இன்னிலை நீடிக்குமானால் ஜனநாயகத்திற்கு ஆபத்துதான்” என்பது ஷேக் ஜம்மு கானின் கருத்தாக உள்ளது.

இது “நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திற்கு களங்கம் உண்டாக்கும்” என்கிறார் சசி என்கிற நேயர்

இந்தியர்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் இந்த ஆட்சி அதையும் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. இது மிகவும் ஆபத்தான கட்டம் என்பதை நம் மக்கள் உணரவேண்டும் என்று பதிவிட்டுள்ளார் நேயர் ஜேஎம்ஆர் காந்தி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :