'ஜல்லிக்கட்டு காளைகளை நாங்கள் ஏன் வளர்க்கிறோம்?'

  • விக்னேஷ்.அ
  • பிபிசி தமிழ்

பொங்கல் பண்டிகை காலகட்டத்தில் அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்து வருபவை ஜல்லிக்கட்டு போட்டிகள். இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் சிலரின் நோக்கங்களை பதிவு செய்கிறது பிபிசி தமிழ்.

காளைகளுக்கு பெயர்போன இடம் காங்கேயம் அருகே உள்ளது வெள்ளக்கோயில்.

" ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் நோக்குடன் வளர்க்கப்படும் காங்கேயம் காளை ஒன்றின் மதிப்பு குறைந்தது 50 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை" இருக்கும் என்கிறார் காங்கேயம் காளைகளை வளர்க்கும் வெள்ளக்கோயிலைச் சேர்ந்த சௌந்தரராஜ்.

"இந்தக் காளைகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படாது. எனினும், ஆண்டுக்கு பல்லாயிரம் முதல் சில லட்சங்கள் வரை செலவு செய்து வளர்ப்பதன் நோக்கம் இனப்பெருக்கத்திற்கு சிறந்த காளைகளை அடையாளம் காண்பதற்காகத்தான்," என்கிறார் அவர்.

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு உள்ளிட்டவற்றில் அடக்கப்பட்டு, வீரியம் குறைந்தவையாக அடையாளம் காணப்படும் காளைகள் காயடிக்கப்பட்டு வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் என்றும் போட்டிகளில் வெல்லும் காளைகள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்தக் காரணங்களையும் மீறி, தங்கள் காளைகள் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்று பரிசுப்பொருட்களுடன் தங்கள் சொந்த கிராமத்தின் தெருக்களுக்குள் நுழையும்போது உண்டாகும் மகிழ்ச்சியும் காளை வளர்க்க ஒரு முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள அவர் தவறவில்லை.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் 21 வயதாகும் வெங்கடேஷ். இவர் வீட்டில் வளர்க்கப்படும் 40க்கும் மேற்பட்ட தேனி மலை மாடுகளில் 12 மாடுகள் ஜல்லிக்கட்டுக்கு என்றே பிரத்தேயகமாக வளர்க்கப்படுபவை.

விளம்பரங்கள் இல்லாததால் உண்டான பாதிப்பு

பிற நாட்டு மாடுகளைப் போல அதிகம் பிரபலம் இல்லாத இந்த வகை மாடுகளை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வெங்கடேஷ் அதற்கான காரணங்களையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

"தேனி மலை மாடுகள் சமீப ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டில் பெரும்பாலும் கலந்து கொண்டதில்லை. காரணம் இந்தப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தும் வழக்கமே இல்லை. இந்தப் பகுதிகளில் மஞ்சு விரட்டு நடத்துவதுதான் காலம் காலமாக வழக்கமாக இருந்தது. உள்ளூரில், கிராம அளவில் மட்டுமே மஞ்சு விரட்டு நடத்தப்பட்டு வந்ததால், பல கிராமத்தினர் சேர்ந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகளில் இவை எங்கள் முந்தைய தலைமுறையினரால் பங்கேற்கவைக்கப்படவில்லை," என்கிறார் வெங்கடேஷ்.

அதிக விளம்பரம் இல்லாமல் போனது, இப்போது இந்த மாட்டினங்கள் மீது ஒரு எதிர்மறையான தாக்கத்தை செலுத்தி வருகிறது. அது குறித்து கூறுகையில், "ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்களில் சிலர் சில குறிப்பிட்ட மாட்டினங்களையே முன்னிலைப்படுத்தினர். அதனால், அவை பிரபலம் அடைந்தது மட்டுமல்லாது, அந்த மாடுகள் பாரம்பரியமாக வளர்க்கப்பட்டுவரும் பகுதிகளில் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அவற்றை வளர்க்க விரும்பி வாங்குவதால் அவற்றின் எண்ணிக்கையும் அவற்றுக்கான பொருளாதார மதிப்பும் அதிகரித்துவிட்டன. ஆனால், தேனி மலை மாடுகளுக்கு அந்த நிலை வரவில்லை, " என்கிறார்.

'பணத்துக்காக நாங்கள் இவற்றை வளர்க்கவில்லை'

ஜல்லிக்கட்டுக்காக தயார் செய்ய ஒரு தேனி மலை மாடு இனத்தைச் சேர்ந்த காளையைத் தயார் செய்ய ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. எனினும், இந்த இனத்தின் ஒரு வளர்ந்த காளையின் மதிப்பும் அந்த அளவில்தான் உள்ளது.

"பொருளாதார பலன்களை எதிர்பார்த்து நாங்கள் இவற்றை வளர்க்கவில்லை. அப்படி நினைத்தால் எங்களால் வளர்க்கவே முடியாது. இந்த இன மாடுகளைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம். அதற்காகவே நாங்கள் செலவை பொருட்படுத்தாமல், இவற்றை வளர்த்து வருகிறோம்," என்கிறார்.

பிற காளை இனங்களைப் போல் அல்லாமல் உருவத்தில் பெரியதாக இல்லாமல் போனாலும், ஒரு நாளுக்கு சுமார் நூறு கிலோ மீட்டர் தூரம் சென்று கூட மேயும் வழக்கம் உடையவை இந்த மாடுகள் என்கின்றனர், இந்த மாடுகளை வளர்ப்பவர்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கும் மேல் மலைப் பிரதேசங்களுக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, அங்கேயே இரவுகளைக் கழித்துவிட்டுத் திரும்பும் வழக்கமும் உண்டு.

"ஜல்லிக்கட்டில் பங்கெடுக்க வைப்பது மட்டுமல்லாமல், இந்த இனத்தைப் பற்றிய முறையான ஆராய்ச்சியும், அரசின் திட்டங்களும் இவற்றை அழியாமல் காக்க உதவும்," என்கிறார் வெங்கடேஷ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :