இசைப்பொங்கல்: நாட்டுப்புற இசையால் நம்பிக்கை ஊட்டும் உமாராணி

  • 14 ஜனவரி 2018
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நாட்டுப்புற இசையின் அசத்தும் பெண்

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் தொடங்கி மூன்று நாட்கள் தமிழகத்தில் இசைத்துறையில் சாதனை படைக்கும் மூன்று பெண்களை பிபிசி தமிழ் அறிமுகம் செய்கிறது.

நாட்டுப்புற இசையைக் கற்றுக்கொள்வது ஒரு கலை என்றால்,அந்த இசையை தனது வாழ்க்கையாகக் கொண்டு வாழ்வது மற்றொரு கலை.

இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டக்கலைகள், விதவிதமான தோல்கருவிகளை வாசிப்பது என நாட்டுப்புறக் கலையின் ஒவ்வொரு பிரிவுகளிலும் நிபுணத்துவத்தை வளர்த்துவரும் உமாராணி(33) விருதுநகரில் கோடங்கி கலைக் குழுவை 17 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.

மறுக்கப்பட்ட கல்வி

பெண் குழந்தையாக இருந்த காரணத்தால் படிப்பு மறுக்கப்பட்டு, நாட்டுப்புற இசையில் ஈடுபடவும் அனுமதி மறுக்கப்பட்ட உமாராணி, அவரது குடும்பத்தில் இருந்த மூன்று பெண் பிள்ளைகளில், படிப்பதற்காக கிராமத்தைவிட்டு வெளியேறிய முதல்பெண் ஆவார். அதோடு, கலைப்பின்னணி இல்லாத அவரது குடும்பத்தில் இருந்துவந்த முதல் கலைஞர் என்ற பெருமையையும் உமாவுக்கு உண்டு.

2003ல் வளர்கல்வி இயக்கத்தில் விழிப்புணர்வு நாடகங்களை நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட உமாவுக்கு நாட்டுப்புறக்கலை மீது ஆர்வம் வந்தது. ''நான் நடித்த விழிப்புணர்வு நாடகம் பற்றிய செய்தியும் படமும் செய்தித்தாளில் வெளியானதைப் பார்த்த என் மூன்று சகோதரர்களும் படிக்கக்கூடாது என்றும் நடிக்கக் கூடாது என்று தடுத்தார்கள். பலமுறை அவர்கள் அடித்தார்கள். என்னுடைய ஆர்வம் குறையவில்லை. உறவினர் உதவியோடு 12ம் வகுப்பு படிக்கச் சென்றேன். தொடர்ந்து நாட்டுப்புற இசைமீதான ஆர்வத்தில் , வளர்கல்வி இயக்கத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டேன்,'' என்று தனது போராட்டத்தின் ஆரம்ப காலத்தைப் பற்றி பேசினார் உமா.

பில்கேட்ஸ் பௌன்டேசன் தந்த வேலை

வளர்கல்வியைத் தொடர்ந்து, 2004-2005 பில்கேட்ஸ் பௌன்டேசன் மற்றும் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாடகம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழகம் முழுவதும் கிராமங்களுக்குச் சென்று ஆணுறை அணிவது குறித்தும், எயிட்ஸ் நோய் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பதுதான் அதில் முக்கியம்.

''தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யவேண்டும். கிராமங்களில் தங்கவேண்டும் என்பதை என் குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை. கலைத்துறையில் சாதிக்கவேண்டும் என்று உறுதிகொண்டு வீட்டைவிட்டு வெளியேறினேன்,'' என கூறுகிறார் உமா.

லாரி ஓட்டுனர்கள், கல்லூரி மாணவர்கள், ஊர் சந்தையில் கூடும் மக்கள் என பலவிதமான மக்களிடம் எளிமையான முறையில் கருத்துகளை கொண்டுசேர்க்கும் விதமாக அந்த நாடகங்கள் எழுதப்பட்டன என்கிறார்.

கலைப்பயணத்தில் கற்ற பாடங்கள்

அடுத்ததாக தமிழகம் முழுவதும் சித்திரவதைக்கு எதிரான பயணம் என்ற நிகழ்வில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று வகுப்பறை வன்முறை, காவல்நிலையங்களில் நேரும் வன்முறை, குடும்பவன்முறை போன்ற பிரச்சனைகளை எவ்வாறு புகார் செய்யவேண்டும் என்பதை நடித்தும், பறை வாசித்து பாடியும் நாடகம் நடித்தும் காட்டினார்.

மதுரையில் தேவர்குளம் என்ற பகுதியில் சாதிய வன்முறை தொடர்பான ஒரு நாடகத்தில், தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரை அவரது கணவர் கண் முன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய ஒரு உண்மைச் சம்பவத்தை நடித்துக் காட்டியபோது ஒரு வயதான நபர், பாதிக்கப்பட்டவரின் பாத்திரத்தை ஏந்தியிருந்த உமாவிடம் ஆதிக்கச்சாதியை சேர்ந்த நபரை வெட்ட அருவாளை கொடுத்ததாக கூறுகிறார்.

''நாடகம் நடந்தது ஆதிக்கசாதியினர் வாழும் பகுதி. பார்வையாளர்கள் பெரும்பாலும் ஆதிக்கச்சாதியை சேர்ந்தவர்கள். ஆனால் நாடகத்தால் சாதியவன்முறையை நடித்துக்காட்டிய போது, ஒருவரின் மனம் மாறும், மனிதநேயம் தோன்றும் என்பதை உணர்த்திய நிகழ்வு அது. கலைக்குழு ஒன்றைத் தொடங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி எனக்கு உணர்த்தியது,'' என்று கூறினார் உமா.

தோல் கருவிகள் குறித்த கற்பிதங்கள்

கோடங்கி கலைக் குழுவை 2006ல் தொடங்கினார். ஆரம்பக்காலத்தில் குறைவான நபர்களைக் கொண்டிருந்ததால், தவில் கற்றுக்கொண்டு தானே நிகழ்ச்சிகளில் வாசிப்பது என்று முடிவுசெய்ததாகக் கூறுகிறார்.

நாட்டுப்புறக் கலைகளில் கருவிகள் வாசிக்கும் பெண் கலைஞர்கள் குறைவு என்றும் அதிலும் தோல்கருவிகள் வசிக்கும் பெண்கள் மிகவும் குறைவு என்றும் அதனால் எல்லா தோல் கருவிகளையும் கற்கவேண்டும் என்பதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

''தமிழக அரசின் இசைக்கல்லூரியில் பயின்ற சமயத்தில் உறுமி வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். மாதவிடாய் காலங்களில் பெண்கள் தோல் கருவிகளை வாசித்தால், அது கிழிந்துவிடும் என்று சொல்வார்கள். அதை பொய் என்று நிரூபிக்க என் செலவில் பறை வாங்கி வாசித்தேன். பறை கிழியவில்லை. சமூகத்தில் உள்ள பல கற்பிதங்களை நாமே முன்வந்து தவறென நிரூபிக்கவேண்டிய தேவை உள்ளது,'' என்றார் உமா.

உமாவிற்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரத்தை உணர்ந்துகொண்ட குடும்பத்தினர் அவருடன் இணைந்து கொண்டதாக அவரது சககலைஞர் சரண்யா குறிப்பிட்டார்.

''ஆரம்பக்காலத்தில் உமாவின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளத் தவறிய அவரது குடும்பம், எங்களைப் போன்ற கலைஞர்களையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மாறியுள்ளது,'' என்று கூறினார் அவர்.

நிகழ்ச்சிகளை நடத்துவதில் எதிர்கொண்ட தடைகள் குறித்து பேசிய உமா, " என்ன விதமான கலைநிகழ்சிகளை நடத்தப்போகிறோம் என்பதைவிட, எங்கள் குழுவில் எத்தனை பெண்கள் உள்ளனர், அவர்களின் வயது என்ன, எல்லோரும் வெள்ளையாக இருப்பார்களா என நிகழ்ச்சி புக் செய்பவர்கள் கேட்பார்கள். சில சமயம் நாங்கள் மது அருந்துவோமா என்றும் கேட்பார்கள். முதலில் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி பெற்றுவிட்டு, ஊர்த்தலைவர் மற்றும் ஊர் பெரியவர்கள் பாதுகாப்பு கொடுப்பதாக இருந்தால்தான் நிகழ்ச்சி நடத்துவோம் என்று கூறிவிடுவேன்,'' என்றார்.

பெண்கள் மட்டுமல்லாமல் திருநங்கைகளையும் அவரது குழுவில் இணைத்து வேலைசெய்து வருகிறார் உமா.

''நிகழ்ச்சி நடத்தும் சில கிராமங்களில் உடைமாற்றும் அறைகள் இல்லாவிடில், தற்காலிகமாக உடைமாற்றும் இடம் அமைக்கவேண்டும். சில நேரங்களில், நிகழ்ச்சி முடிந்தபின்னர், மதுபோதையில் இருப்பவர்கள் உடைமாற்றும் அறைக்குள் வந்துவிடுவார்கள். கண்டிப்புடன் அவர்களை கையாண்டு, என் குழுவினரை பாதுகாப்புடன் அழைத்துவரவேண்டும் என்பதே என் கவனமாக இருக்கும்,'' என தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்த தலைமுறைக்கு...

பார்வையாளர்களிடம் பெற்ற நன்மதிப்பின் காரணமாக விருதுநகர் மாவட்டத்தின் பல கிராமங்களில் கோடங்கி குழுவினரை தொடர்ந்து கிராமத் தலைவர்கள் ஊர்திருவிழாவிற்கு அழைப்பதாகக் கூறுகிறார்.

''அருவாள் ஆட்டம், குச்சிக்கால் ஆட்டம், கருப்புசாமி ஆட்டம், கரகாட்டத்தில் அறுவடை ஒயில் என இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டங்களை நடத்துவோம். நான்கு மணிநேரம் தொடர்ந்து நடத்தும் அளவுக்கு விதவிதமான ஆட்டங்களை வடிவமைத்துள்ளோம்,'' என்றார் அவர்.

தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை ஒன்றிணைக்கும் மாற்று ஊடக மையத்தின் தலைவராக இருக்கும் உமாராணி, பள்ளிக்குழந்தைகளுக்கு நாட்டுப்புறக் கலைகளை கற்றுத்தரும் வேலைகளிலும் ஈடுபட்டுவருகிறார்.

''இளம் தலைமுறையிடம் கிராமியக் கலையை கொண்டுசேர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு கலைஞருக்கும் இருப்பதாக எண்ணுகிறேன். என் முயற்சியை நான் தொடங்கிவிட்டேன்,'' என்றார் உமா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்