பானிபட் போரில் தோற்ற மராட்டியர்கள் வட இந்தியாவில் குடியேறியதன் பின்னணி என்ன?

  • 14 ஜனவரி 2018
ஹரியானா படத்தின் காப்புரிமை Facebook/CSVP

பூப்பிந்தர் போசலே மற்றும் சட்டிந்தர் பாட்டில் போன்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹரியானாவை சேர்ந்த ராட் மராட்டிய சமூகத்தினரைப் பற்றி பலர் தெரிந்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. இவர்களின் தோற்றம் குறித்த கதைபோல, இவர்களின் அடையாளம் குறித்த கதையும் சுவாரஸ்யமானது.

257 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவின் பானிபட்டிற்கு, சதாசிவராவ் பாவ் தலைமையிலான மராட்டிய ராணுவம் சென்றபோதே இவை அனைத்தும் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் மன்னரான அகமது ஷா அப்தலியுடன் சண்டையிட மராட்டியர்கள் சென்றனர். சண்டையில் மராட்டியர்கள் தோற்றனர். அன்றே 40,000-50,000 மராட்டியர்கள் கொல்லப்பட்டனர்.

''சில சிப்பாய்கள் எப்படியோ தப்பித்து, அருகில் உள்ள பகுதியில் ஒளிந்துகொண்டனர். தங்களை மராட்டியர்கள் என கூறிக்கொள்ள மிகவும் பயந்தனர். அதனால் ஒரு அண்டை ராஜ்யத்தைச் சேர்ந்த ராட் சிப்பாய்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்'' என்கிறார் ராட் மராட்டியர்களின் வேர் பற்றி 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவரும் வரலாற்றாசிரியர் வசுரராவோ மோர்.

''தங்களின் சரியான வேர் பற்றி ராட்களுக்கு தெரியவில்லை. தங்களால் முடிந்ததைப் பாதுகாக்க முயன்றனர். அவர்களின் சில மரபுகள் மகாராஷ்டிராவுடன் ஒத்திருக்கின்றன. அவர்கள் பேசும் இந்தியில் சில மராத்தி வார்த்தைகள் உள்ளன. பானிபட் சண்டைக்கு பிறகே அவர்களின் குறிப்புகள் கிடைக்கின்றன.'' என்கிறார் மோர்.

படத்தின் காப்புரிமை RAVINDRA MANJREKAR/BBC
Image caption பானிபட்டில் உள்ள போர் நினைவிடம்

அடையாள மாற்றம்

பானிபட் தொழிலதிபரான நஃபேசிங்கிற்கு 72 வயது. அவருக்கு மராத்தி தெரியாது. மகாராஷ்டிராவுக்கு வந்ததில்லை. ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த யாராவது அவரைப் பார்க்க வந்தால் உற்சாகமாகி விடுகிறார்.

''1761க்கு பிறகு அனைத்து மராட்டியர்களும் மகாராஷ்டிராவுக்குத் திரும்ப சென்றனர். அவர்களில் வெகு சிலர் குருஷேத்ரா மற்றும் கர்னல் காடுகளின் உள்ளே தங்கிவிட்டனர். எதிர்காலத்தைப் பற்றி அவர்களுக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை. அவர்கள் யார் என யாராவது கேட்டால், ராட் ராஜா பற்றி பேசுவார்கள். அதே அடையாளங்கள் தலைமுறை தலைமுறைகளாக தொடர்ந்தது. அடுத்தடுத்த தலைமுறை உண்மையான அடையாளத்தை மறந்து விட்டது'' என்கிறார் நஃபேசிங்.

''எங்கள் தோற்றம் மகாராஷ்டிராவில் உள்ளது. எங்கள் மூதாதையர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். எங்களின் தடையங்களை குஜார், ஜாட் அல்லது ராஜ்புட் இனக்குழுக்களில் கண்டுபிடிக்க முடியாது'' என்கிறார் அவர்.

''2000ஆம் வருடத்தின் போதுதான் எங்களின் உண்மையான அடையாளத்தைப் பற்றி அறிந்துகொண்டோம். முன்னாள் முன்னாள் அரசு உயரதிகாரியான விரேந்திர சிங், ராட்களின் வேர் பற்றி ஆராய தொடங்கினார். வரலாற்றாசிரியர் வசுரராவோ மோர் அவருக்கு பெரிதும் உதவினார்'' என்கிறார் நஃபேசிங்.

படத்தின் காப்புரிமை BRITISH LIBRARY

எத்தனை ராட் மராட்டியர்கள் உள்ளனர்?

வட இந்தியாவின் பானிபட், கர்னல், சோனிபட், கைதால் மற்றும் ரோஹ்தாக் பகுதிகளில் ராட் மராட்டியர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. 6-8 லட்சம் ராட் மராட்டியர்கள் ஹரியானாவில் இருப்பார்கள் என்கிறார் வசுரராவோ மோர்.

ஒரு புதிய அடையாளத்தைக் கண்டறிந்த பிறகு, ராட் சமூக குடையின் கீழ் அவர்கள் இணைகின்றனர். '' ராட் மராட்டியர்களின் வரலாறு குறித்த விழிப்புணர்வை பரப்ப ஒரு மன்றம் வைத்துள்ளோம்'' என்கிறார் சுல்தான்சிங் எனும் ராட் மராட்டியர்.

''தங்கள் அரசியல் இருப்பை நிரூபிக்க ராட் மராட்டியர்கள் முயன்று வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும் ராட் மராட்டியர்களின் விழாக்களில் கலந்துகொள்கின்றனர்'' என்கிறார் அப்பகுதியின் உள்ளூர் செய்தியாளரான மனோஜ் தாக்கா.

ராட் மராட்டியர்கள் இந்தி பேசுவார்கள், ஹரியானா உணவு சாப்பிடுகிறார்கள், தலைப்பாகை அணிந்துகொள்கிறார்கள். ஆனால், அவர்களின் குடும்ப பெயர்களில் பவார், சவான், போன்ஸ்லே, சாவந்த், கோல் தபதே, போட்லே போன்ற மராட்டிய பெயர்கள் உள்ளன.

படத்தின் காப்புரிமை NIRANJAN CHHANWAL/BBC

அண்மைய நாட்களில், ஒவ்வொரு ராட் மராட்டியர்களின் விழாக்களும் மராட்டிய மன்னர் சிவாஜியின் புகழுடனே தொடங்குகிறது.

''மகாராஜா சிவாஜியின் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். எங்கள் மக்களை ஒருங்கிணைத்து, சமூகத்திற்காகப் பணியாற்றுவோம்'' என்கிறார் சத்ரபதி சிவாஜி வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கவுரவ்.

தோற்ற நாளைக் கொண்டாடுவது ஏன்?

பானிபட் சண்டையில் மராட்டியர்கள் தோற்ற நாளான ஜனவரி 14-ம் தேதியைத் தைரிய நாளாக ராட் மராட்டியர்கள் கொண்டாடுகின்றனர். '' சண்டையில் மராட்டியர்கள் தோற்றாலும், அவர்கள் தைரியமாக சண்டையிட்டனர்'' என்கிறார் கவுரவ்.

படத்தின் காப்புரிமை GAURAV MARATHA/CSVP

மாற்றுக் கோட்பாடு

வசுரராவோ மோர் கூறியதை கேள்வி எழுப்பும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் பாண்டரங் பால்காவ், ''பானிபட் முன்றாம் சண்டையின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மராட்டியர்கள் டெல்லியைக் கைப்பற்றினர். அப்போது பானிபட், சோனிபட் ஆகியவற்றையும் கைப்பற்றினர். அதனால் சில மராட்டியர்கள் இங்கேயே தங்கினர். மராட்டிய சாம்ராஜ்ஜியம் பலவீனமாகி வடக்கு பகுதியின் கட்டுப்பாட்டை இழந்த பிறகும், சில மராட்டிய சிப்பாய்க்கள் இங்கேயே இருக்க முடிவு செய்தனர். இந்த சிப்பாய்களின் வம்சாவளிகளே ராட் மராட்டியர்கள்'' என்கிறார்.

பரம்பரையைக் கண்டுபிடிக்க டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்டதா என கேட்டபோது, அதற்கு தேவை இல்லை என்கிறார் மோர். ஆனால் அத்தகைய கேள்விகள் பற்றி ராட் மராட்டிய இளைஞர்களுக்குக் கவலை இல்லை. தங்களின் புதிய அடையாளம் பற்றி அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்