மதுபானம் தொடர்பான மங்கள சமரவீரவின் வர்த்தமானியை ஜனாதிபதி ரத்து செய்தார்

  • 14 ஜனவரி 2018
மதுபானம் படத்தின் காப்புரிமை Ryan Pierse

இலங்கையில் பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மத்துகம - அகலவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மதுபான கொள்வனவு மற்றும் மதுபானசாலைகளில் தொழில் புரிதல் தொடர்பில் இதுவரை காலம் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை ரத்து செய்யும் வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, "நான் ஊடகங்களின் ஊடாகவே அதனை அறிந்து கொண்டேன். மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் நான் ஊடகங்களிலேயே அறிந்தேன். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என நான் கேள்வியுற்றேன். கூட்டமொன்றிற்கு காரில் சென்றுக் கொண்டிருக்கும் போதே அதனை நான் கேள்வியுற்றேன். பெண்கள் மதுபானசாலைகளுக்கு சென்று மதுபான போத்தல்களை கொள்வனவு செய்ய முடியாது என சட்டம் ஒன்று இருந்தது. அந்த சட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக எனக்கு அறிய கிடைத்தது." என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெண்கள் மதுபானசாலைகளுக்கு சென்று மதுபான போத்தல்களை கொள்வனவு செய்கின்றமை தொடர்பில் அரசாங்கம் கொண்டு வருகின்ற சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இந்த பின்னணியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தான் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினரும் கலந்துரையாடியிருந்ததாகவும், புதிய வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு தான் அவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பிரகாரம், இந்த வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் ரத்து செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மதுபான பாவனையினால் இலங்கையில் வருடமொன்றுக்கு 10,000 - 15,000 பேர் வரை உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்