ஞாநி சங்கரன் எழுதிய கடைசி ஃபேஸ்புக் பதிவு

பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் சென்னையில் நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 64.

படத்தின் காப்புரிமை GNANI SANKARAN FB

ஞாநி சங்கரன் எழுதிய கடைசி ஃபேஸ்புக் பதிவு :-

ஃபேஸ்புக்கில் தொடர்ந்து தனது கருத்துகளை வெளியிட்டுவரும் ஞாநி நேற்றைய தினம் ஒரு நிலைத் தகவலை வெளியிட்டிருந்தார். அதுவே அவரது இறுதி பதிவாக அமைந்தது.

''துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத்தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்''

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஞாநி, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணிவாக்கில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அவருடைய உடல் கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Image caption ஞானி சங்கரன்

பன்முக ஆளுமை

1954 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்த ஞாநி, இந்து, ஆனந்த விகடன் உட்பட பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். ஒரு பத்தி எழுத்தாளாராக தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக கட்டுரைகளை பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

`தீம்தரிகிட` என்ற சிற்றிதழ், `பரீக்‌ஷா` என்ற நாடக் குழு, `மணற்கேணி` இலக்கியச் சந்திப்பு என பன்முகத்தன்மையுடன் இயங்கியவர் ஞாநி.

மாற்று அரசியலை முன் வைத்த அவர், ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் அதில் இணைந்து செயல்ப்பட்டார். பின் அந்தக் கட்சியின் சார்பாக ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்த அவர், பின் ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் விலகினார்.

இவருக்கு பத்மா என்ற மனைவியும், மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர்.

மனுஷ் நந்தன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

ஞாநி உடல் தானம் செய்துள்ளார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்