ஞாநி என்ற ஓயாத குரல்

படத்தின் காப்புரிமை GNANI

இதழியல், நாடகம், சமூகச் செயல்பாடு என இயங்கிவந்த ஞாநி, சமகாலப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து எதிர்வினையாற்றியதோடு, எந்த இடத்திலும் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லிவந்தார்.

சென்னை கலைஞர் கருணாநிதி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஞாநியின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இளைஞர்கள். அவருடைய மகனுடைய வயதைவிட இளையவர்கள்.

நாடகங்களில் ஆர்வமுடையவர்கள், புதிதாக பத்திரிகைத் துறைக்கு வரும் எழுத்தாளர்கள், அரசியல் ஈடுபாடு உடையவர்கள் என 20களிலும் 30களின் துவக்கத்திலும் உள்ள இளைஞர்கள் அவர்கள். இவர்களோடுதான் ஞாநி தொடர்ந்து உரையாடிவந்தார். அவர்களை ஊக்குவித்துவந்தார்.

1970களின் இறுதியில் இதழியல் துறைக்கு வந்த ஞாநி, முதலில் ஒரு நாளிதழில் பணியைத் துவங்கினாலும் கடந்த 30 ஆண்டுகளில் ஊடகங்கள் அடைந்திருக்கும் பெரும் மாற்றத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டவர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர், தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், இணைய தளங்களை நடத்துவது, சமூக வலைதளங்களில் இயங்குவது, யூ டியூப் போன்ற தளங்களில் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது என மாறிவரும் ஊடகங்களுக்கு ஏற்ப தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வந்தார் ஞாநி.

Image caption ஞானி சங்கரன்

ஒரு ஊடகக்காரராக எந்த அளவுக்கு ஞாநி பரிச்சயமோ, அதே அளவுக்கு நாடகக்காரராகவும் அவர் பிரபலமானவர். 1978 முதல் நவீன நாடக உலகில் இயங்கிவந்த ஞாநி, விஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பிரெக்ட், பிண்ட்டர் ஆகியோரின் நாடகங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தார். தமிழ்நாட்டில் நாடகங்களை மேடையேற்ற காவல்துறையின் அனுமதி தேவை என்ற நிலையில், அதற்கு எதிராக தீவிரமான நிலைப்பாடு எடுத்தவர் அவர்.

ஒரு சமயம் விஜய் டெண்டுல்கர் எழுதிய நாடகத்தை கமலா என்ற பெயரில் தமிழ்ப்படுத்தி மேடையேற்றவிருந்த நிலையில், நாடகம் துவங்க சில மணிநேரங்களுக்கு முன்புவரை காவல்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இது தொடர்பாக துணை ஆணையரைச் சந்தித்த ஞாநி, காவல்துறை அனுமதி வழங்காவிட்டாலும் அன்று நாடகம் நடக்கும் என்று தெரிவித்தார். அதற்குப் பிறகு காவல்துறை அனுமதி அளித்தது.

வாழ்க்கை குறித்தும் நாடகங்கள் குறித்தும் நடுத்தர வகுப்பிடையே இருக்கும் போலி நம்பிக்கைகளைக் களைவதே பரீக்ஷா குழுவின் நோக்கம் என்று அறிவித்து செயல்பட்ட ஞாநி, இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை, ஜெயந்தன், பிரபஞ்சன், திலீப் குமார், சுஜாதா, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் நாடகங்களையும் மேடையேற்றியிருக்கிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசிய கட்சிகளால் பிடிக்க முடியாது - ஞாநி

தன் வீட்டிற்கு பின்புறம் ஞாநி நடத்திய கேணி என்ற சந்திப்பு, சென்னையின் வாசக வட்டாரத்தில் மிகப் பிரபலமான ஒன்று. இந்த சந்திப்பின் மூலம் வாசகர்கள், பல்துறைகளைச் சார்ந்த ஆளுமைகளுடன் இயல்பாக விவாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார் ஞாநி.

கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரக செயல் இழப்பின் காரணமாக அவர் துன்புற்றுவந்தாலும் அந்தத் துன்பம் அவரது செயல்பாடுகளை சிறிதளவும் பாதிக்கவில்லை. இதற்குப் பிறகும் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்வது, வெளியூர்களில் சென்று தன்னுடைய நாடகங்களை அரங்கேற்றுவது என்றே செயல்பட்டுவந்தார். இதன் காரணமாகவே, பல முறை அவரது உடல்நிலை அபாய கட்டத்திற்குச் சென்று திரும்பியிருக்கிறது. தன் நோய்களுக்கு எதிரான அவரது போராட்டம், யாருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கக்கூடியது.

படத்தின் காப்புரிமை GNAANI

"மதுரையில் ஒரு நிகழ்விற்காகச் சென்றவர் அதற்காக தான் மேற்கொள்ள வேண்டிய டயாலிசிஸ் சிகிச்சையையே தள்ளிப்போட்டுவிட்டார். அதனால், ஊர் திரும்பும்போது மூச்சுவிடுவதே சிரமமாகிவிட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி தன் உடல்நலத்தையும் கவனிக்காமல் பல முறை இருந்திருக்கிறார்" என்று நினைவுகூர்கிறார் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.

1980களின் இறுதியில் முரசொலியின் இணைப்பிதழான புதையல் இதழை ஞாநி கவனித்துவந்தார். அதற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வி.பி. சிங் பேசிய பொதுக்கூட்டங்களில், அவரது மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார் அவர். ஆனால், 2007 அக்டோபர் ஆனந்த விகடன் இதழில் கருணாநிதியின் முதுமை குறித்து அவர் எழுதிய கட்டுரைக்கு எழுந்த கண்டனங்கள் அவரை ஒரு தி.மு.க. எதிர்ப்பாளராக முன்னிறுத்தின. ஆனால், ஞாநி தான் எழுதியதிலிருந்து பின்வாங்கவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தேசப்பற்று திரையரங்குகளில் தீர்மானிக்கப்படுவதில்லை என்று அரசியல் ஆய்வாளர் ஞாநி கருத்து

1981ல் காஞ்சி சங்கராச்சாரியாரை ஞாநியும் பத்திரிகையாளர் சின்னக் குத்தூசியும் சந்திக்கச் சென்றபோது, திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்து சங்கராச்சாரியார் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிரங்கப்படுத்தினார் ஞாநி. தொடர்ந்து சங்கரமடம் குறித்து விமர்சனங்களை முன்வைத்துவந்த ஞாநி, 2004ல் ஜெயேந்திர சரஸ்வதி கைதுசெய்யப்பட்டபோது அதனைத் தீவிரமாக ஆதரித்தார்.

சமூகவலைதளங்களில் தனக்கு எதிராக கருத்துக்கள் வெளியாகும்போது, அந்தக் கருத்துகளை எழுதியவர்களோடு உரையாட ஞாநி எப்போதும் தயாராகவே இருந்தார். ஞாநியின் சென்னை இல்லம் எல்லோரும் வந்துசெல்லக்கூடிய, தங்கிச் செல்லக்கூடிய ஒரு இடமாகவே இருந்தது.

பல தருணங்களில் தான் செயல்படும் ஊடகங்களிலேயே, அவற்றுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்திருக்கிறார் ஞாநி. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு தொலைக்காட்சியில் நிரந்தர விருந்தினராக தேர்தல் காலம் முடியும்வரை அமர்த்தப்பட்டார் ஞாநி. அந்தத் தொலைக்காட்சி தேர்தல் தொடர்பாக ஒரு கருத்துக்கணிப்பையும் வெளியிட்டது.

அது தொடர்பான விவாதங்களில் பங்கேற்றுப் பேசிய ஞாநி, அந்தத் தொலைக்காட்சி உரிமையாளரின் கட்சி ஒரு தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்த கருத்துக்கணிப்பே சந்தேகத்திற்குரியது என்று கூறினார்.

உடல்நலம் குறைவுபட்டிருந்த நிலையிலும் கடைசி நாள் வரைத் தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருந்தார் ஞாநி. கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அவர், சனிக்கிழமையன்று புத்தகக் கண்காட்சியில் தன்னுடைய ஞானபாநு அரங்கில் வாசகர்களுடனும் நண்பர்களுடனும் அளவளாவினார்.

சமீபத்தில்தான் ஓ பக்கங்கள் என்ற பெயரில் ஒரு யூ டியூப் சானலைத் துவங்கியிருந்த ஞாநி, வைரமுத்து - ஆண்டாள் குறித்து தன்னுடைய கருத்துகளும் சமூக சேவகர் மேதா பட்கருடனான பேட்டியும் நாளை வெளியாகுமென (15.01.2018) அறிவித்திருந்தார்.

வைரமுத்து - ஆண்டாள் சர்சை குறித்து தன் கருத்தைப் பதிவுசெய்விட்ட அவர், மேதா பட்கருடனான பேட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அவருடன் காரில் பயணம் செய்து அதனைப் பதிவுசெய்தார். அதன் பிறகு, துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, வெளிப்படையாக பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாடு எடுப்பது குறித்து முகநூலில் தன் கருத்துகளைப் பதிவுசெய்தார். வாழ்வின் கடைசித் தருணம்வரை, ஒரு ஊடகவியலாளராக, கருத்துகளைத் தெரிவிப்பவராக இருந்த ஞாநியின் கடைசி நாள் இதைவிடப் பொருத்தமாக கழிந்திருக்க முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்