முடிவடைந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு #Alanganallur

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டி விளையாட்டு தொடங்கியது.

5:15 PM: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிப்பெற்றோர் விவரம் அறிவிப்பு

இன்று எட்டு சுற்றுகளாக நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மொத்தம் 700 மாடுபிடி வீரர்களும், 520 காளைகளும் பங்கேற்றன. இதில் எட்டு காளைகளை பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த அஜய் என்பவர் மாடுபிடி வீரர்களில் முதலிடத்தையும், ஆறு காளைகளை பிடித்த இரண்டு இளைஞர்கள் இரண்டாமிடத்தையும், வினோத் ராஜ் என்பவர் மூன்றாவது இடத்தை பெற்றதாகவும், மொத்தம் ஒன்பது காளைகள் சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த முறையில் காளையை பராமரித்ததற்காக சந்தோஷ் என்பவர் காரை பரிசாக பெற்றார்.

5:00 PM: முடிவடைந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இரண்டு முறை தலா ஒரு மணிநேரம் நீட்டிக்கப்பட்டு தற்போது சரியாக ஐந்து மணிக்கு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4:45 PM: ஒரே சுற்றில் நான்கு காளைகளை பிடித்த வீரர்

தற்போது நடைபெற்று வரும் கடைசி சுற்றான எட்டாவது சுற்றில் மட்டும் எட்டு காளைகளை பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த அஜய் என்ற வீரர் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

4:40 PM: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - பிபிசி தமிழ் நேரலை

4:30 PM: மேலும் இரண்டு மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம்

காளைகளின் கொம்புகளை பிடித்துக்கொண்டு அதை அடக்க முயன்ற இரண்டு மாடுபிடி வீரர்கள் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

4:00 PM: ஆறு காளைகளை பிடித்த வீரருக்கு காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் இரண்டாம் சுற்றிலிருந்து எட்டாம் சுற்றுவரை பங்கேற்று ஆறு காளைகளை பிடித்த வீரர் ஒருவர், காளை ஒன்று முட்டியதில் காயமடைந்து முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

3:40 PM: மாலை ஐந்து மணிவரை நீட்டிப்பு

காலை எட்டு மணிக்கு தொடங்கி மாலை நான்கு மணிக்கு முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்கப்பட்டு மாலை ஐந்து மணிவரை நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3:10 PM: இதுவரை 415 காளைகள் பங்கேற்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்யப்பட்டிருந்த 1000 காளைகளில் இதுவரை 415 காளைகளே பங்கேற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2:40 PM: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்க அனுமதி

காலை எட்டு மணியிலிருந்து மதியம் மூன்று மணிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்குமாறு மாடுபிடி வீரர்கள் சார்பில் முதலமைச்சரிடம் இன்று காலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. பிறகு அந்த கோரிக்கை ஏற்கப்பட்டதால் இன்று மாலை நான்கு மணிவரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

2:10 PM: பெண்களால் அழைத்து வரப்படும் காளைகள் தொடர்ந்து வெற்றி

10 வயது சிறுமியின் காளை, பி.காம் பட்டதாரி ஒருவரின் காளை மற்றும் இரண்டு சகோதரிகளின் காளை என இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பெண்கள் அழைத்து வந்த காளைகள் வெற்றிபெற்றதுடன் தங்க காசுகள் மற்றும் புடவைகளை பரிசாகவும் பெற்றனர்.

1:30 PM: பிரபல காளை முட்டியதில் ஒருவர் படுகாயம்

தொடர்ந்து பல ஆண்டுகளாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வரும் காளையொன்று முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

1:00 PM: காளை முட்டியதில் மற்றொரு மாடுபிடி வீரர் காயம்

ஆறாவது சுற்றின்போது சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர் ஒருவர் காயமடைந்ததால் களத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

12:50 PM: வாடிவாசலில் இருந்து வெளியேற மறுத்த காளையை பிடித்த வீரர் தகுதி நீக்கம்

வாடிவாசலில் இருந்து வெளியே வராமல் சில நிமிடங்களாக அங்கேயே இருந்த காளையை பிடிக்க முயன்ற மாடுபிடி வீரர் ஒருவர் போட்டிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

12:40 PM: அலங்காநல்லூரில் சீறிப்பாயும் காளை (காணொளி)

12:30 PM: இரண்டு மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம்

போட்டியில் பங்கேற்ற காளையின் கொம்பை பிடிக்க முற்பட்ட ஒரு மாடுபிடி வீரரும், காளையின் மீது ஏறி அதை அடக்க முயன்ற மற்றொரு வீரரும் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:15 PM: இரண்டு கார்களை பரிசாக அளிக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர்

அனைத்து சுற்றுகளின் முடிவில் சிறந்த மாடும், மாடுபிடி வீரரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பாக இரண்டு கார்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் பரிசாக அளிக்கப்படவுள்ளது.

11:50 AM: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை - 2

11:40 AM: மேலும் ஒரு மாடுபிடி வீரருக்கு காயம்

எல்லாபுரத்தை சேர்ந்த காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இதுவரை 170 காளைகள் போட்டியில் பங்கேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11:20 AM: சிறப்பாக செயல்பட்ட காளையின் உரிமையாளருக்கு சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் அளித்த டி.டி.வி. தினகரன்

போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு காளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு மாடுபிடி வீரர்களுக்கு சவாலளித்து வெற்றிபெற்றது. இந்நிலையில் அந்த காளையின் உரிமையாளருக்கு சிங்கப்பூருக்கு செல்ல விமான டிக்கெட்டை பரிசாக அளிப்பதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவான டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

10:55 AM: தொடங்கியது நான்காவது சுற்று

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நான்காவது சுற்று தொடங்கியுள்ளது. முந்தைய சுற்றுகளில் வெற்றிபெற்ற மூன்று பேர் இதில் பங்கேற்பதற்கு தேர்வாகியுள்ளனர்.

10:30 AM: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை

10.15 AM: வெற்றிபெற்றது அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை

இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இரண்டாம் சுற்றில் வெற்றிப்பெற்ற ஐந்து வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

போட்டியில் பங்கேற்பதற்காக தான் அழைத்து வந்த காளை முட்டியதில் காயமடைந்த அதன் உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் காளைக்கு நான்கு தங்க காசுகளும், பத்தாயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

அவனியாபுரம். பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு முடிந்ததை அடுத்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

முதல்வரும் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு விளையாட்டினை தொடங்கி வைத்தனர்.

விளையாட்டினை காண உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும், பல மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் வந்துள்ளன

இந்தப் போட்டியில் 1000 காளைகளும், 1241 மாடுபிடி வீரர்களும் பங்கு பெறுகிறார்கள்

வெற்றி பெறும் வீரர்களும், காளைகளுக்கு கார் உட்பட பல லட்சங்கள் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

களத்தில் இறங்கிய முதல் காளை

களத்தில் காளைகளும் காளையர்களும்

ஜல்லிக்கட்டு தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்