ஜல்லிக்கட்டை பார்க்க வந்த அப்பாவிகள் பலியானதற்கு யார் பொறுப்பு?

ஜல்லிக்கட்டு

பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் கோலாகலமாக நடந்து முடிந்த ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பார்வையாளர்கள் ஒழுக்கத்துடன் இல்லாததே இறப்புக்கு காரணம் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூற, ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பீட்டா அமைப்பு இதற்கு எதிர்மறையாக கருத்து கூறியுள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசு கூறியிருந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றியதாக ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அதையும் மீறி நான்கு பேர் பலியானதற்கான காரணம் என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளரான பால குமார் சோமு , ''பார்வையாளர்கள் இறந்தது துரதிருஷ்டவசமானது. ஆனால், இதனை நான் ஒரு விபத்தாகவே கருதுகிறேன்.'' என்கிறார்.

ஜல்லிக்கட்டு மற்ற விளையாட்டுகளையும், போட்டிகளையும் போல் அல்ல என்றும், 1 முதல் 2 லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொள்ளும் பெரிய அளவிலான போட்டி என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

''பெரிய அளவில் நடக்கும் விழாக்களில் நடக்கும் விபத்துகளை ஒப்பிடும்போது, ஜல்லிக்கட்டில் நடக்கும் விபத்துகள் மிகக்குறைவே. இறப்புகளை நான் நியாயப்படுத்தவில்லை. ஒவ்வொரு உயிரும் முக்கியமானதே. அதே சமயம் ஜல்லிக்கட்டில் மட்டுமே இறப்புகள் நடக்கிறது என்பது போன்ற அதிகப்படியான அர்த்தத்தை விலங்கு நல ஆர்வலர்கள் கற்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்கிறார் அவர்.

''எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளும் முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்'' எனவும் சோமு வலியுறுத்துகிறார்.

Image caption பால குமார் சோமு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மக்களும், விழா ஏற்பாட்டாளர்களுமே வருடா வருடம் செய்கின்றனர். அரசு விதிகளை முழுமையாகப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்துவதால், பெருமளவிலான பணம் செலவாகிறது என விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு வரும் பார்வையாளர்களைப் பாதுகாப்பதற்கு காளைகள் ஓடும் பகுதியின் இருபுறமும் தடுப்பு அமைப்புகள் இருக்க வேண்டும். தடுப்புகளுக்கு நடுவில் வலை அமைக்க வேண்டும். தடுப்புகளுக்கு பின்புதான் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதி இருக்க வேண்டும் என்பது போன்ற பல புதிய விதிமுறைகளை கடந்த ஆண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

''விழா ஏற்பாட்டாளர்கள் இந்த விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுகிறோம். ஆனால், சில விழா ஏற்பாட்டாளர்களுக்கு இதற்குப் போதுமான பணம் இருப்பதில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் தலையில் ஒப்படைத்துவிட்டு, அரசு அதிகாரிகள் கடைசி நேரத்தில் மேற்பார்வை மட்டும் செய்கின்றனர்'' என சோமு குற்றஞ்சாட்டுகிறார்.

''விபத்துகளை முற்றிலும் தடுக்க வேண்டுமெனில், வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை அரசே நடத்த வேண்டும். அப்போதுதான் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை அரசு அதிகாரிகள் முழு மூச்சில் செயல்படுவார்கள்'' எனவும் அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்வையிட்டு நடத்திய ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில தலைவர் ராஜசேகரனிடம் பேசியபோது, '' ஓட்டப் பகுதியில் காளைகள் ஓடி முடித்த பிறகு, காளைகளை உரிமையாளர்கள் அழைத்துச் செல்லும் இடம் ஒன்று கடைசியில் இருக்கும். இது ஆபத்தான பகுதி என தெரிந்தும் காளைகளை பார்க்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு கூடி விடுகின்றனர். இந்த ஒழுக்கமின்மையே விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது'' என்று கூறுகிறார்.

மற்றபடி பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது என்கிறார் அவர்.

பார்வையாளர்கள் இறப்பு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் பேச பலமுறை அவரை தொடர்புகொண்ட போதிலும் அவரிடம் பேச முடியவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு பல காலமாக தடை கோரிவரும் பீட்டா அமைப்பின் இந்திய இயக்குநர் பூஜா ஜோஷிபுரா பிபிசியிடம் பேசுகையில், '' ஜல்லிக்கட்டு போட்டியினை பார்க்க சென்ற நான்கு பேர் பலியானதற்கு முதலில் எங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இறந்துபோன நான்கு பேரை நம்பி இருந்த அவர்களின் குடும்பத்தினரின் நிலை இனி என்ன ஆகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்'' என கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மனிதன் மற்றும் விலங்கின் உயிர் மிகவும் விலைமதிக்கத்தக்கது என்கிறார் பூஜா.

''காளையின் கண்களின் எலுமிச்சை சாறு போன்றவற்றை ஊற்றுகின்றனர். கூட்டமாக நின்று காளைகளை அச்சுறுத்துவதுடன், அதனை பிடித்து இழுக்கிறார்கள். இதனால் மிரண்டுபோகும் காளை, மக்கள் கூட்டத்திற்குள் பாய்கிறது. ஒரு காளை சாதாரணமாக இருக்கும்போது ஏன் மக்களை குத்தி கொல்லப்போகிறது?'' என அவர் கேள்வி எழுப்புகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாக ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கூறியிருப்பது குறித்து பூஜாவிடம் கேட்டபோது,'' இது குறித்து இறந்தவர்களின் குடும்பத்தை கேட்டாலே தெரியும், இதனை அவர்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்