ஏர் இந்தியா: உடைந்த கழிவறை, ஓடும் எலிகள் மற்றும் கனிவான கவனிப்பின் கதைகள்

நான் முதல் முறையாக விமானத்தில் பறந்தபோது எனக்கு வயது நான்கு. இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு நாங்கள் குடிபெயர்ந்ததால், அன்றைய பம்பாயில் (இன்றைய மும்பை) இருந்து லண்டன் சென்ற விமானத்தில் என் அம்மாவுடன் நான் அதில் பயணித்தேன்.

படத்தின் காப்புரிமை MANAN VATSYAYANA \ Getty images

ஹீத்ரோ விமான நிலையத்தில் உறவினர்கள் புடைசூழ எங்களை வரவேற்க என் அப்பா காத்துக்கொண்டிருந்தார். மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட குழந்தையான நான் பயணம் முழுதும் என் அம்மாவிடமே ஒட்டிக்கொண்டிருந்தேன்.

அந்த விமானப் பயணத்தின்போது நான் எதையும் உண்ண விரும்பவில்லை. அந்த சமயத்தில், என் ஊட்டத்துக்காக நான் பெரும்பாலும் குடித்தது 'போர்ன்வீட்டா ஹாட் சாக்லெட்' என்பதால், அந்த ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.

ஒரு கனிவான விமானப் பணிப்பெண், விமானக் குழுவினரிடையே எப்படியோ ஒரு போர்பன் சாக்லெட் கிரீம் பிஸ்கட் பொட்டலத்தை கண்டுபிடித்து, என்னிடம் வந்து கொடுத்தார். எந்தத் தயக்கமும் இல்லாமல் அவை அனைத்தையும் நான் உண்டு முடித்தேன்.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியாவில் பறந்த என் முதல் நினைவு இதுதான்.

ஏர் இந்தியா நிறுவனத்தை நான்காகப் பிரிக்க வேண்டும் என்ற இந்திய அரசின் அறிவிப்பு எனது மற்றும் என்னைச் சுற்றியுள்ளவர்களின் ஏர் இந்தியா நினைவுகளை மீண்டும் தூண்டியுள்ளது. அவற்றில் இனிய மற்றும் மோசமான நினைவுகள் இரண்டுமே அடங்கும்.

எனக்குத் தெரிந்த, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இடையே ஏர் இந்தியா எப்போதும் கேலி மற்றும் நகைப்புக்குரிய ஒன்றாகவே இருந்துள்ளது.

ஆண்டுகள் ஆக ஆக, இருக்கை எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் செய்யப்பட்ட பயணிகள் முன்பதிவு, காத்திருக்க வைக்கப்பட்ட பயணிகள், பயணிகளின் உடைமைகளை ஒப்படைக்கும் விமான நிலையத்தில் உள்ள செக்-இன் மேசைகளில் கூச்சல் குழப்பம், உணவுப் பொருட்களின் கறை படிந்த மற்றும் உடைந்த இருக்கைகள், செயல்படாத கழிவறைகள், எரிச்சலாக நடந்துகொள்ளும் விமானப் பணிப்பெண்கள் ஆகியவை பற்றிக் கேள்விப்பட்டேன்.

நானே நேரடியாகக் கண்டதில்லை என்றாலும் விமானங்களின் உள்ளே எலிகள் நடமாட்டம் இருந்தது பற்றிய கதைகளையும் கேட்டுள்ளேன்.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE \ Getty images

ஏர் இந்தியா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நான் சமூக வலைத்தள நண்பர்களிடம் கேட்டேன். அவர்களின் பதில் வெவ்வேறு விதத்தில் இருந்தன.

தனியாகப் பயணிக்கையில் மதுபானம் கேட்கும்போது கண்டிப்பான பார்வை கிடைக்கும் என்று என் தோழி ஒருவர் கூறினார்.

ஒரு முறை டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பிரெஞ்சு மொழிப் படம் காட்டப்பட்டதாகவும், அதை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும் அதை விமானப் பணியாளர்கள் மாற்றாததால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதையே வலியுறுத்தியபோது, படம் இன்னும் சற்று நேரத்தில் முடியப்போகிறது என்று தெரிவிக்கப்பட்டதாகவும் இன்னொரு நண்பர் கூறினார்.

வேறு ஒரு விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் பயணித்த என் தோழர் ஒருவர் உடல் நலம் இல்லாமல் இருப்பதைப் பார்த்த, அதே விமானத்தில் பயணித்த ஏர் இந்தியா விமானி ஒருவர், வசதியான தனது இருக்கையை என் நண்பருக்கு கொடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN \ Getty images

விமானத்தில் வழங்கப்பட்ட உணவு வேண்டாம் என்று என் நண்பர் ஒருவர் மறுத்துவிட்டதால், அவரை ஏதாவது உண்ண வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் ஒருவர், அந்த நண்பருக்கு கஜ்ஜர் அல்வா கொண்டு வந்து கொடுத்துள்ளார். அதை என் நண்பரும் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார்.

என் நண்பர் ஒருவர் ஏர் இந்தியாவில் பயணித்தபோது, பின் இருக்கையில் இருந்த பயணி ஒருவர் தொடர்ந்து தனது இருக்கையை அழுத்திக்கொண்டு இருப்பது குறித்து விமானப் பணிப்பெண் ஒருவரிடம் புகார் கூற, அங்கு வந்த பணிப்பெண், அவரது இருக்கை நேர் ஆவதற்கான பொத்தானை அழுத்திவிட்டு, "மீண்டும் இதைச் செய்தால், விமானத்தில் இருந்து தூக்கி கீழே எரிந்து விடுவேன், முன்னால் இருக்கும் இருக்கை நீங்கள் சாய்ந்துகொள்வதற்கு அல்ல," என்று கோபமாகக் கூறியுள்ளார்.

மேற்குலக நாடு ஒன்றைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் பதிவு செய்திருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், அடுத்தநாள் வருமாறு பணிக்கப்பட்டுள்ளார். தான் அன்றைய தினமே கண்டிப்பாகப் பயணிக்க வேண்டும் என்று அவர் கூறியதால், குடும்பத்துடன் பயணித்த அவருக்கு முதல் வகுப்பு இருக்கை ஒதுக்கப்பட்டது. "எனக்கு இருந்த ஒரே பிரச்சனை அடுத்த ஆண்டு முதல், என் குழந்தைகள் மலிவு விலை இருக்கைகளில் பயணிக்க மறுத்து விட்டனர்," என்றார் அவர்.

எனது சமீபத்திய ஏர் இந்தியா பயணம் கடந்த வாரம்தான் நடந்தது. அது ஒரு 787 டிரீம்லைனர் விமானம். எனக்கு வலது பக்கம் இருந்த இரு இருக்கைகளும் காலியாக இருந்தன. .

நான்கு வயதாக இருந்தபோது எனக்கு கிடைத்த அனுபவம் நினைவில் வந்தது. தற்போது உள்ள நவீன வசதிகளை பார்த்து புன்னகைத்துக்விட்டு, உடலைத் தளர்த்திக்கொண்டு, எனக்கு முன் இருந்த திரையில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :