மீண்டும் ஒரு தமிழக மருத்துவ மாணவர் டெல்லியில் மர்ம மரணம்

சரத்பிரபு

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் டெல்லியில் மர்மமான முறையில் உயிரிந்துள்ளார்.

டெல்லி ஷாதரா மாவட்டத்தில் தில்ஷாத் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சைன்சஸ் கல்லூரி.

இந்தக் கல்லூரியில் எம்.டி பொது மருத்துவம் படித்து வந்தார் திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செ. சரத்பிரபு (28).

அதே பகுதியில் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் வசித்து வந்தார்.

இன்று காலை 8.30 மணியளவில் அவர் நினைவற்ற நிலையில் கிடந்துள்ளார்.

அவர் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

அவர் வசித்து வந்த வீட்டுக்கு போலீசார் சீல் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அறையில் இருந்து மருந்து பொருட்களின் சில குப்பிகளையும் சிரிஞ்சுகளையும் கைப்பற்றியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபிசியிடம் பேசிய ஷாதரா காவல்துறை துணை ஆணையர் நுபுர் பிரசாத், "சரத்பிரபுவின் அறை நண்பர்கள் மூவருமே தமிழர்கள்தான். வீட்டிற்கு சீல் வைத்து விசாரித்து வருகிறோம்." என்றார்.

2016 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சரவணன் என்ற மாணவனும், 2017 ஆம் ஆண்டுஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகஹ்தில் முத்துகிருஷ்ணன் என்ற மாணவனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி விரைந்தனர் பெற்றோர்

சரத்பாபுவின் பெற்றோர் பெயர் செல்வமணி, கண்ணம்மாள். செல்வமணி திருப்பூரில் சாயப்பட்டறை நடத்தி வருகிறார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு சரத்பிரபு எம்.பி.பி.எஸ் முடித்துள்ளார்.

திருப்பூரில் உள்ள சரத்பிரபுவின் பெற்றோருக்கு, அவரது நண்பர்கள் தகவல் அனுப்பி உள்ளனர். அவர்கள் விமானத்தில் டெல்லி விரைந்தனர்.

இறந்த மாணவர் குடும்பத்தினர், அவரது உடலுக்கு மூன்று மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், காவல்துறை மற்றும் மருத்துவமனை தரப்பில் இது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருக்கும் இரு அலுவலர்கள் அவரது குடும்பத்தினருக்கு உதவ அனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்