ஹைதராபாத்தின் கடைசி நிஜாம்: வரலாறு சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்

மீர் உஸ்மான் அலி கான் படத்தின் காப்புரிமை Wikepedia
Image caption ஹைதராபாத் கடைசி நிஜாம் மீர் உஸ்மான் அலி கான்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தற்போதும், 'ஜஹூர் நிஜாம்' பற்றி நினைவுகூரத் தவறுவதில்லை. நிஜாமை தனது அரசர் என்று சொல்லும் அவர், நிஜாம் பற்றி 'சிதைந்த தவறான கருத்துகளை' அகற்ற வரலாற்றை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு, இந்தியாவுடன் ஹைதராபாதை இணைக்க மறுத்தது, புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியாவுடன் மோதல் மற்றும் எதிர்ப்பாளார்களால் நடத்தப்பட்ட வன்முறை ஆகியவற்றின் காரணமாக, இந்திய வரலாற்றில் ஹைதராபாத் நிஜாம் ஒரு சர்ச்சைக்குரிய நபராகக் கருதப்படுகிறார்.

பொறியியலாளர் ஆர்தர் காட்டன் (Arthur Thomas Cotton)ஐ மேற்கோள் காட்டி கே.சி.ஆர் சட்டமன்றத்தில் இவ்வாறு கூறினார்: "காட்டன் ஒரு பிரிட்டானியர், அவர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்கள். இருந்தாலும்கூட ஆந்திரப் பிரதேசத்தில் ஆர்தர் காட்டன் இன்னும் வணங்கப்படுகிறார்."

படத்தின் காப்புரிமை Wikepedia
Image caption ராஜமுந்திரியில் ஆர்தர் காட்டன் அணை கட்டினார்

நிஜாமின் பங்களிப்பு

பிரிட்டிஷ் பொறியியலாளர் ஆர்தர் காட்டான் கோதாவரி நதியில் கட்டிய அணை தற்போதும் வலுவாக இருக்கிறது. இந்த அணை பாசனத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், பட்டினியை கட்டுப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் மேலும் கூறுகிறார், "ஆனால் இங்கே நிஜாம் தான் நமது அரசன், அவர் நமது வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கிறார் சாகர் அணையை கட்டியது யார் என்று கேட்டால் அதற்கு நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? அதற்கு காரணம் நிஜாம் தான் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்."

நிஜாமின் மூலம் கட்டப்பட்ட ஒரு மருத்துவமனையைப் பற்றி, குறிப்பிட்ட முதலமைச்சர், "பெரும்பாலான மக்களுக்கு இதை பற்றி தெரியாது, நாங்கள் வரலாற்றை மறுபடியும் எழுதி தெலங்கானா மக்களுக்கு வழங்குவோம்."

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/Getty Images

1923 ஆம் ஆண்டில், கோதாவரியின் துணை நதியான மஞ்சீராவில் நிஜாம் மீர் உஸ்மான் அலி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் வழங்கக்கூடிய பெரிய அணை ஒன்றை கட்டினார்.

முதலமைச்சர் நிஜாமுக்கு புகழ்மாலை சூட்டுவதை சட்டசபையோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிஜாமைப் பற்றி பேசுகிறார்.

ஹைதராபாதின் கடைசி நிஜாம் மீர் உஸ்மான் அலி கானின் கல்லறைக்கு சென்ற கே.சி.ஆர் இவ்வாறு குறிப்பிட்டார்: "மக்கள் என்னைப் பார்த்து, தெலங்கானாவிற்கு என்று தனிப்பட்ட வரலாறே இல்லை என்று சொல்லி என்னை மட்டம் தட்டினார்கள். எங்களுக்கு நிஜாம் இருக்கிறார், நிஜாம் என்னுடைய ராஜா, அவரே எங்களுடைய வரலாறு. "

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/Getty Images
Image caption ஹைதராபாத் பழைய நகரத்தில் நிஜாமின் ஃபல்கனுமா அரண்மனை, ஒரு காலத்தில் இங்கே நிஜாம் மஹ்பூப் அலி கான் தங்கியிருந்தார்

முடியாட்சி காலத்தில்...

தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் செயற் தலைவர், பட்டி விக்ரமார்கா, நிஜாம் பற்றிய முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கருத்து, மத அரசியலை உறுதிப்படுத்துவதாக கூறுகிறார்.

"முஸ்லிம்களின் சின்னமாக நிஜாமை முன்நிறுத்தலாம் என்று தற்போதைய முதலமைச்சர் கணக்கு போடுகிறார், ஆனால் முடியாட்சி முறைக்கும், சாதாரண மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அவர் மறந்துவிட்டார்" என்று பட்டி விக்ரமார்கா கூறுகிறார்.

முஸ்லிம்களின் நலன்களுக்கு எதுவுமே செய்யாத முதலமைச்சர், தனது அந்த குறையை மறைக்க நிஜாமை புகழ்ந்து அதில் குளிர்காய விரும்புவதாக காங்கிரஸ் கருதுகிறது. கே.சி.அர், நிஜாம் மேல் காட்டும் அன்பு, இனவாத சக்திகளுக்கு வலிமையூட்டும் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/Getty Images

அதிகாரத்த்தை தக்க வைக்கும் முயற்சிகள்

இது குறித்து பேசும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் வி. சுதாகர் ஷர்மா, "நிஜாமை புகழ்ந்துரைக்கும்போது, அவரால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை கே.சி.ஆர் மறந்துவிட்டாரா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

"நிஜாம் மீர் உஸ்மான் அலி, சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாடன் இணைய விரும்பவில்லை. பின்னர், இந்தியாவுடன் இணைய உறுதியான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் எடுத்த பிறகே இந்தியாவுடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது" என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் சுதாகர் ஷர்மா.

மேலும், " பாரதிய ஜனதா கட்சி முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டனம் செய்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

தெலங்கானா முதலமைச்சர் பிரதான எதிர்க்கட்சிகளிடம் இருந்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிக்க விரும்புவதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில், கே.சி.ஆரின் இந்த முயற்சியால் பாரதிய ஜனதா கட்சிக்கும் சில நன்மைகள் கிடைக்கும். ஆனால், மாநிலத்தில் அது வலுவாக இல்லை என்பதால், சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கே இஸ்லாமிய வாக்குகளை பெறும் அதிக வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Wikepedia
Image caption ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மீர் நிஜாம் அலி கான்

ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மீர் நிஜாம் அலி கான் யார்?

பிரிட்டன் அரசு இந்தியாவை விட்டு வெளியேறும்போது, இங்கு 562 சுதேச அரசுகள் இருந்தன. அவற்றில் காஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று சுதேச அரசுகளைத் தவிர மற்றவை இந்தியாவுடன் இணைந்தன. அந்த சமயத்தில் ஹைதராபாத்தின் நிஜாமாக இருந்தவர் மீர் உஸ்மான் அலி கான் பகதூர்.

பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, ஹைதராபாதிற்கு என்று பிரத்யேக ராணுவம், ரயில் சேவை மற்றும் தபால் துறை போன்ற வசதிகள் இருந்தன.

அந்த நேரத்தில், மக்கள் தொகை மற்றும் மொத்த தேசிய உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய முடியாட்சி அரசாக திகழ்ந்தது ஹைதராபாத்.

82698 சதுர மைல் பரப்பளவு கொண்டது ஹைதராபாத். இது இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் சேர்த்த மொத்த பரப்பளவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் ஹைதராபாதை இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிஜாம், ஹைதராபாத், இந்தியாவுடன் இணைக்கப்பட்டால், இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவமுடியுமா என்று கேட்டு பாகிஸ்தான் தந்தை என்று அழைக்கப்பட்ட முகம்மது அலி ஜின்னாவிடம் கோரிக்கை விடுத்தார். இதில் இருந்து ஹைதராபாத் நிஜாமின் இந்திய எதிர்ப்பு நிலையை தெரிந்துக் கொள்ளலாம்.

இறுதியில் ஹைதராபாதை இந்தியாவுடன் இணைக்க இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த நடவடிக்கை 'ஆபரேஷன் போலோ' என்று அறியப்பட்டது. இந்த பெயர் காரணத்திற்கும் ஒரு முக்கிய பின்னணி உண்டு.

அந்த காலத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான போலோ விளையாட்டு மைதானங்கள் கொண்டதாக இருந்த ஹைதராபாத்தில் 17 போலோ விளையாட்டு மைதானங்கள் இருந்தன.

ஐந்து நாட்கள் நீடித்த 'ஆபரேஷன் போலோ' நடவடிக்கையில், ஹைதராபாத் ராணுவத்தின் 1373 ரஜாக்கர்கள் (தனியார் ராணுவம்) கொல்லப்பட்டார்கள். ஹைதராபாத் அரசின் 807 இளைஞர்களும் உயிரிழந்தார்கள்.

இந்திய ராணுவத்தின் 66 வீரர்கள் உயிரிழந்தனர், 97 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவத்தின் நடவடிக்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா செப்டம்பர் 11 இல் இறந்தார்.

ஹைதராபாதின் கடைசி நிஜாம் மீர் உஸ்மான் அலி கான், 1886ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாளன்று பிறந்தார். 1911 முதல் 1948 வரை ஹைதராபாதை ஆட்சி செய்த அவர், 1967 பிப்ரவரி 24ஆம் தேதியன்று அமரரானார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அழகாக கிரிக்கெட் ஆடும் இரண்டரை வயது சென்னை சிறுவன் (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :