தலித்துகள் மீதான தாக்குதல்: ஆர்.எஸ்.எஸ்ஸின் அக்கறை ஏன்?

  • திலீப் மண்டல்
  • பிபிசிக்காக

மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் சம்பவத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஆர்.எஸ்.எஸ் கவலை கொண்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷாவில் நடைபெற்ற கூட்டத்தில் மகர் சங்கராந்தி அன்று தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்று அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

இதன்மூலம் செருப்பு தைப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முனைகிறது அந்த அமைப்பு.

இதற்கு முன்பு 2015இல் கோயில்கள், கிணறுகள், மயானங்கள் ஆகியன இந்துக்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியது. சாதி அமைப்பு தொடர வேண்டும். ஆனால் அனைத்து சாதி மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது.

ஆர்.எஸ்.எஸ் சாதிய தடைகளை அழிப்பது குறித்து எப்போதும் பேசியதில்லை. சாதிகளை அழித்தொழிக்கும் சமூக முன்மாதிரியையே பீமாராவ் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவர் அனைத்து சாதியினரும், சாதி அமைப்புக்குள் சுமூகமாக வாழ்வது குறித்து பேசியதில்லை.

சாதி அமைப்புக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதாகவும், சாதி அமைப்பு இருந்தால் அந்த வேறுபாடுகளும் இருக்கும் என்று அம்பேத்கர் கருதினார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சாதிய அமைப்பை எதிர்க்கும் வலிமை வேண்டும் என்று அவர் விரும்பினார். தங்கள் மதத்தை காக்க விரும்பினால், சாதியை ஒழிக்க முன்வருமாறு உயர் சாதி என்று கூறப்பட்ட இந்துக்களுக்கு, தனது வரலாற்றுப் புகழ் மிக்க சாதியை அழித்தொழித்தல் உரையில் அவர் அழைப்பு விடுத்தார்.

அவர்களது இலக்கியங்கலும் சாதிய அமைப்போடு இருப்பதால், அவர்கள் அவற்றில் இருந்து விலகி வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் சாதி அமைப்பை எதிர்க்க விரும்பவில்லை. அதனால்தான் அனைத்து சாதி மக்களும் ஒன்றாக கலந்துகொள்ளும் விருந்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்கிறது. ஒன்றாக படிப்பது, 'சாகா'களுக்கு ஒன்றாக செல்வது ஆகியன சாதி பிரச்சனையை தீர்க்கும் திறன் உள்ளவை மற்றும் போதுமானவை என்று அந்த அமைப்பு நம்புகிறது.

இதன் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சாதி வேறுபாடு இல்லையென்றும், தாங்கள் சாதியத்தை நம்பவில்லையென்றும் அதன் உறுப்பினர்கள் கூறிக்கொள்கின்றனர்.

நாடு முழுவதும் இருந்து தலித் மக்கள் தாக்கப்படும் செய்திகள் வருவது, அத்தகைய சமூக அமைதி இல்லை என்பதையே காட்டுகிறது. பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விருப்பங்களின்படி பாரதிய ஜனதா கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

அந்த மாநிலங்களில் முழுமையான கொடூரத்துடன் சாத்தியம் நிலவுகிறது. சாதி அமைப்புக்குள் அமைதியாக வாழும் மாதிரி தலித் மக்கள் மீதான பாகுபாடு மற்றும் வன்முறையைத் தவிர்க்க முழுமையாக தோற்றுவிட்டது. தலித்துகள் அரசு, நீதி, கல்வி, நிர்வாகம் ஆகியவற்றில் ஒதுக்கப்படுவதும் தொடர்கிறது. ஓரளவுதான் அவர்கள் முன்னேறியுள்ளனர்.

எனினும், தங்கள் மீதான அடக்குமுறைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் தற்போது வீதிகளில் இரங்கி போராட்ட தொடங்கிவிட்டார்கள். அதனால்தான், நாடு முழுதும் அவர்களுக்கு எதிரான சம்பவங்கள் பெரும் பிரச்சனை ஆகிறது. இதைத்தான் சாத்திய வேறுபாடுகள் அதிகரித்துவிட்டது என்று சிலர் கூறுகின்றனர்.

மஹாராஷ்டிராவில் உள்ள தலித்துகள் ஒவ்வொரு ஜனவரி 1ஆம் தேதியும், இந்திய வரலாற்றில் மிகவும் கொடூரமான மற்றும் சாதியத்தை பின்பற்றிய பேஷ்வாக்களை வென்ற வரலாற்று போராட்டத்தை நினைவுகூர, கோரேகான் பீமாவில் கூடுவார்கள்.

சிலர் இதை ஆங்கிலேயர்களின் வெற்றியாக பார்க்கிறார்கள். சிலர் இதை பேஷ்வா மன்னர்களின் தோல்வியாக பார்க்கிறார்கள். மாராத்தாக்களின் வம்சாவளியாக பேஷ்வாக்கள் பார்க்கப்பட்டால் (ஆனால், அது உண்மையல்ல.) அது ஆங்கிலேயர்களிடம் மராத்தாக்கள் முடிந்த தோல்வியாகவே இது பார்க்கப்படும்.

தலித்துகள் பீமா கோரேகானில் கூடுவது சாத்திய அமைப்பை இன்னும் நம்புபவர்களுக்கு அசௌகரியமாக உள்ளது. தலித்துகளின் கொண்டாட்டம் தங்கள் சாதிய ஆதிக்கத்திற்கான சவாலாக அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், இந்த ஆண்டைப் போல இதற்கு முன்பு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.

சிந்தனை அளவில் நிலவிய எதிர்ப்பு நேரடி எதிர்ப்பானதால், சாதிய ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் களத்தில் எதிரெதிர் சந்தித்துக்கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கவலை

இந்த சம்பவங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் கவலை அளித்தது. அந்த அமைப்பு வழக்கமாக மௌனமாக இருக்கும் உத்தியையே பின்பற்றியது. எந்த தரப்புக்கும் வெளிப்படையாக ஆதரவு அளிப்பது சாத்தியமல்ல.

தலித்துகள் கண்ணோட்டத்தில் பீமா கோரேகானின் வரலாற்றை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பார்க்கவில்லை என்றாலும், அதை முறையாக வெளிப்படுத்துவது சுலபமல்ல.

இந்து ஒற்றுமையை சீர்குலைக்கவே இந்த சாதி நடக்கிறது என்று பீமா கோரேகான் வன்முறை பற்றி அந்த அமைப்பின் தொண்டர்கள் கூறி வருகின்றனர். 'இந்தியா இலக்கு வைக்கப்பட்டுள்ளது,' என்றும் அவர்கள் செய்தி பரப்பி வருகின்றனர்.

தலித்துகளுக்கு எதிரானவர்களாக தங்கள் பார்க்கப்படுவதை ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை. நூற்றுக்கணக்கான நகரங்களில் இருந்தும் மாநகரங்களில் இருந்தும் வந்து தலித்துகள் போராடுவது அவர்களுக்கு உவப்பாக இல்லை. அதனால், ஆர்.எஸ்.எஸ் மிகவும் கவனமாக செயல்படுகிறது.

இந்து ஒற்றுமையை நிலைநாட்ட இந்த உக்கிரத்தை இஸ்லாமியர்கள் மீது மடைமாற்றம் செய்யவும் அவர்கள் முயலக்கூடும். இதனால் தலித்துகளா, பிற்படுத்தப்பட்டவர்களா எனும் கேள்வி அடங்கக்கூடும்.

பீமா கோரேகான் சம்பவம் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கவலையல்ல. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதும் அவர்களுக்கு ஒரு கவலையாகும். பண்பாட்டு அமைப்பாக தம்மை அது கூறிக்கொண்டாலும், பாரதிய ஜனதா கட்சியுடன் அவர்களுக்கு இருக்கும் ஆழமான உறவு உலகத்துக்கே தெரியும்.

பாரதிய ஜனதா கட்சியை தலித்துகள் எதிர்த்தாலோ, அக்கட்சிக்கு எதிராக அறச்சீற்றம் கொண்டாலோ அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் பாதிக்கும்.

ஐதராபாத் பல்கலைக்கழ மாணவர் ரோஹித் வெமூலா சார்ந்திருந்த அம்பேத்கர் மாணவர் அமைப்பு மற்றும் சங்கப் பரிவாரத்தின் அகில பாரதிய வித்யா பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு இடையே இருந்த மோதலின்போது இவை அனைத்தும் தொடங்கியது.

குஜராத் மாநில உனாவில் 'பசுக்காவலர்கள்' தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது, சங்கப் பரிவாரத்தின் கொள்கை மீது தலித்துகளுக்கு கசப்புணரவை உண்டாக்கியது. உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களின்போதும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா தலைவர்கள் ஒடுக்குபவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவே தலித்துகள் நினைத்தனர்.

மத்திய அமைச்சர் ஜெனெரல் வி.கே.சிங் தெரிவித்த சில கருத்துகளும் பாரதிய ஜனதா மற்றும் தலித்துகளுக்கு இடையே இருந்த இடைவெளியை அதிகரித்தது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க பாரதிய ஜனதா அரசு தோல்வி அடைந்ததும் தலித்துகளை கோபத்துக்கு ஆளாக்கியது.

முழுப் பெரும்பான்மை உள்ள பாரதிய ஜனதா அரசால் அதை செய்ய முடியும். ஆனால், அதன் முக்கிய வாக்காளர்களான உயர் சாதியினர் என்று கூறப்படுபவர்களை அது இழக்கும் அபாயம் உள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் ஆகியதன்மூலம் ஒரு குறியீட்டு அளவிலான முன்னுரிமையை நிறுவ பாரதிய ஜனதா முயன்றுள்ளது. ஆனால், அது தலித்துகளின் உண்மையான கேள்விகளுக்கு பதில் தரவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :