வாதம் விவாதம்: மக்களின் மரியாதையை ஊடகங்கள் இழந்துவிட்டனவா?

ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியே சென்றால்தான் பேட்டி தருவேன் என்று குஜராத்தை சேர்ந்த இளம் தலித் தலைவரும் சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி சென்னையில் கூறியுள்ளார். இதனால் அனைத்து ஊடகங்களும் அவரை பேட்டி எடுக்காமல் திரும்பிவிட்டன.

'ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியே சென்றால்தான் பேட்டி தருவேன் என்று ஜிக்னேஷ் வலியுறுத்தியது சரியா?

ஒரு குறிப்பிட்ட ஊடகத்தை புறக்கணித்ததற்காக ஜிக்னேஷை பேட்டி எடுக்காமல் புறக்கணித்த ஊடகங்களின் செயல் ஏற்புடையதா?' என்று பிபிசி தமிழின் சமூகவலைத்தள நேயர்களிடம் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"அந்த ஊடகம் இவர் பேச்சின் நல் விசயங்களை மறைத்து, அரசுக்கு எதிராக பேசிய விசயத்தை மட்டும் பெரிதாக்கி காட்டி பெயரை கெடுக்க முயற்சி செய்யும் ஊடகமாக இருக்கலாம், தமிழ்நாட்டிலும் பல ஊடகங்கள் இவ்வேலையைதான் தினமும் செய்கிறது," என்கிறார் பரூக் பாஷா.

"நிச்சயம் மேவானி செய்தது சரியே!. ஒரு குறிப்பிட்ட ஊடகத்தை மட்டும் அவர் குறிப்பிட்டு சொல்வதை ஊடகத்துறைகள் பொறுத்து கொள்ள முடியாமல் வெளியே சென்றுள்ளன!.. அதே குறிப்பிட்ட ஊடகங்கள் அரசுக்கு வாலாட்டுகிறது என்று மக்கள் சொல்லும் போது இந்த ஊடகங்களுக்கு ஏன் இந்த கோபம் வரவில்லை?" என்று கேள்வி எழுப்புகிறார் திலீப் குமார்.

"ஜிக்னேஸ் வலியுறுத்தியது தவறு! அது சர்வாதிகாரம். ஒரு நிறுவன முதலாளியின் போக்கு அது,அவர் சொல்வதை அவர் நினைக்கும் ஊடகங்கள் மட்டுமே பிரசுரிக்க வேண்டும் என நினைப்பவர்க்கு பொதுவாழ்வில் என்ன வேலை?" என்கிறார் பாஸ்கர்.

"இது சரியா தவறா என சிந்திக்கும் முன், இது அவர் உரிமை என நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல், ஒரு குறிப்பிட்ட ஊடகத்தை தவிர்த்தால் எங்களுக்கும் நீங்கள் பேட்டி கொடுக்க வேண்டாம் என்ற பிற ஊடகத்தின் செயலை, வரவேற்று ஏற்றார் தானே," என்பது பாலாஜி எனும் நேயரின் கருத்து.

"தவறான செயல். தனக்கு பிடிக்காதவர்களை வெறுப்பது சாதரணம் தான். ஆனால் இவர் பதவியேற்கும் போதே தனிப்பட்ட வெறுப்பு விருப்புகளுக்கு இடமளிக்கமாட்டேன் என்று சொல்லி தானே பதவியேற்று இருப்பார்," என்று கேட்கிறார் முத்து செல்வம்.

"வளரும் தலைவர் இப்படி ஊடகங்களை புறக்கணிப்பது சரியான முடிவாக இருக்காது," புலிவளம் பாஷா.

"இந்திய ஊடங்கள் என்பது உயர்ஜாதி இடைஜாதி ஆதிக்கம் நிறைந்தது என்பதை கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு தெரிந்துவிட்டது.இதிலே அனைத்து மதவாதிகளும் அடங்கும்.நீதிமன்றம் முதல் அரசியல்வதிகள் வரையில் அழுத்தத்தை கொடுத்தது உள்ளனர்.எனவேதான் இவர் இப்படி ௯றி உள்ளார்.இவர் ௯றியது சரி." என்று கூறியுள்ளார் ஷாஜகான் இக்பால்.

வசந்த் எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார் ,"எச்.ராஜா Anti Indian என்று அழைத்தபோது வராத கோபம், விஜயகாந்த் காரிதுப்பியபோது வராத கோபம் ஏன் இப்போது வருகிறது, அவர் தலித் போராளி ? பாஜக எதிர்ப்பாளர் என்பதாலா?"

"அதுஅவர் சார்ந்த கொள்கையாக இருக்கலாம் இன்று வேண்டாம் என்று செல்லும் மீடியாக்கள் நாளை அவரை கண்டிப்பாக பேட்டி காணும்," என்கிறார் மாரிச்சாமி கந்தசாமி.

" இன்று ஊடகங்கள் மேல் மக்களுக்கு மரியாதையோ மதிப்போ இல்லை ஊடகங்கள் காசுக்காக ஆசைப்பட்டு தரம்தாழ்ந்து செயல்படுகிறது இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல," என்கிறார் வைத்தியலிங்கம் எனும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :