ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்களிடம் மோசமாக நடந்துகொண்டாரா?

சென்னைக்கு வந்த ஜிக்னேஷ் மேவானி, ரிபப்ளிக் டிவி சேனலின் மைக்கை அகற்றினால்தான் பத்திரிகையாளர்களிடம் பேசுவேன் என்று கூறியதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு முடிவுக்கு வந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜிக்னேஷ் மேவானி

செவ்வாய்க்கிழமையன்று சென்னையில் உள்ள காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் குஜராத்தின் வத்காம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கலந்துகொண்டார்.

அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிவடைந்ததும், அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஆங்கில செய்திச் சேனல்களின் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி ஒன்றைக் கோரியதால், அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பேட்டிக்கென மைக்குகள் வைக்கப்பட்டதும் ஜிக்னேஷ் மேவானி அங்கு வந்தார்.

அப்போது அர்னாப் கோஸ்வாமி ஆசிரியராக உள்ள ரிபப்ளிக் டிவியின் மைக்கைப் பார்த்தும், "இதன் செய்தியாளர் யார், இந்த மைக்கை அகற்றிவிடுங்கள்" என்று கூறினார். அந்த மைக் இருந்தால் தான் பேசப்போவதில்லை என்றும் கூறினார்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள், நீங்கள் அதைச் சொல்ல முடியாது என்றனர். அப்படியானால், நான் பேச முடியாது என்று கூறிய ஜிக்னேஷ் மேவானி அங்கிருந்து எழுந்து சென்றார். இதற்குப் பிறகு, ஜிக்னேஷ் மேவானி அங்கிருந்து வெளியேறும்போது, மீண்டும் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளர் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றபோது அவர் பேச மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், இந்த செய்தியை தங்களது சமூக வலைதளங்களில் சில செய்தியாளர்கள் வெளியிட, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய விவாதங்களை உருவாக்கியது.

நடந்த சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய ரிபப்ளிக் டிவியின் செய்தியாளர் சஞ்சீவி, "என்னுடைய மைக்கை மேவானி அகற்றச் சொன்னபோது, நான் கேள்வியேதும் கேட்க மாட்டேன். மைக்கை மட்டும் வைத்துக்கொள்கிறேன் என்று கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. அதன் பிறகு அவரும் சென்றுவிட்டார். நாங்களும் வேண்டாமென்றுவிட்டுவிட்டோம். சமூக வலைதளங்களால் இது மிகப் பெரிய விவகாரமாகிவிட்டது," என்று கூறினார்.

Image caption பத்திரிகையாளர் ஆர். மணி

"இந்தக் குறிப்பிட்ட விவகாரத்தில் மேவானியின் பக்கமே நியாயம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி தொடர்ந்து தன்னைத் தாக்கி செய்தி வெளியிடும்போது அதனைப் புறக்கணிக்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. இந்த விவகாரத்தில் செய்தியாளர்கள் தரப்பு செய்தது சரியல்ல," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி.

"கருணாநிதியும் ஜெயலலிதாவும் அப்படிச் செய்ததில்லையென்கிறார்கள். அவர்களைக் குறிவைத்து தொடர்ந்து எந்த ஊடகமாவது செய்திவெளியிட்டு வந்ததா? அப்படி இல்லாத நிலையில், இந்த ஒப்பிடுதலே தவறு," என்கிறார் மணி.

பா.ஜ.கவுக்கு ஆதரவானவர்கள் பலர், இந்த விவகாரத்தை முன்வைத்து ஜிக்னேஷ் மேவானியைக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர். ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜிக்னேஷ் மேவானியை 'Goon' என்று வர்ணித்தார்.

வேறு சிலர் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இரு தரப்புமே அந்த செய்தியாளர் சந்திப்புவேண்டாமென முடிவெடுத்த நிலையில், தமிழக ஊடகங்கள் அனைத்தும் மேவானியைப் புறக்கணித்ததுபோல சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் சமூக வலைதளங்களில் எழுதியதைக் கேள்வியெழுப்பினர்.

தமிழ்நாட்டில் செய்தியாளர் சந்திப்புகளில், சம்பந்தப்பட்டவர்கள் மோசமாக நடந்துகொள்வது என்பது புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைப் பார்த்துக் கோபமடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "நீயா எனக்கு சம்பளம் கொடுக்கிற? நாய்" என்று திட்டினார். இது தொடர்பான வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில், "நீங்கள் எல்லாம் பத்திரிகையாளர்களா, தூ" என்று காறி உமிழ்ந்தார்.

கடந்த ஆண்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைப் பற்றி செய்திவெளியிட்டது. அடுத்த நாள் அடுத்த நாள் நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில், அந்தத் தொலைக்காட்சியின் நிருபர் வலுக்கட்டாயமாக அந்த செய்தியாளர் சந்திப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் தன்னிடம் கேள்விகேட்ட செய்தியாளரைப் பார்த்து, "என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறாயே, உனக்கு அறிவிருக்கா?" என்று கேள்வியெழுப்பினார் இளையராஜா.

மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், தன்னிடம் கேள்விகேட்ட செய்தியாளரை தேசவிரோத சக்தி என குறிப்பிட்டார் பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :