சிறுபான்மையினரை காக்க இந்திய அரசு விரும்பவில்லை: மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

கடந்த 2017ஆம் ஆண்டு, சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க மட்டுமல்லாமல், அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்யவும் இந்திய அரசு தவறிவிட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (மனித உரிமைகள் கண்காணிப்பகம்) எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக டெல்லியில் இந்து வலது சாரி அமைப்பினர் மே 2017இல் நடத்திய போராட்டம்.

இன்று, வியாழக்கிழமை, வெளியிடப்பட்டுள்ள அந்த அமைப்பின் ஆண்டறிக்கையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இந்தியர்களின் அடிப்படை உரிமைகளை விலையாகக் கொடுத்து இந்து பெரும்பான்மைவாதத்தையும், தீவிர தேசியவாதத்தையும் பொது வெளியில் ஊக்குவித்துள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாவின் துணை அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் அமைப்புகள் உள்பட, தீவிர இந்து அமைப்புகள் பசுக்களை இறைச்சிக்காக வாங்கினார்கள், விற்றார்கள் அல்லது கொன்றார்கள் எனும் புரளிகளின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு குறைந்தது 38 தாக்குதல்கள், 2017இல் நடந்ததாகவும் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த 643 பக்க அறிக்கை கூறுகிறது. உலகின் 90 நாடுகளில் உள்ள மனித உரிமைகள் நிலவரத்தை அந்த அறிக்கை ஆய்வு செய்துள்ளது.

"மத சிறுபான்மையினரையும், தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ள பிற குழுக்களையும் பாதுகாக்க விரும்பவில்லை என்பதை இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே நிரூபணம் செய்துள்ளனர்," என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் தெற்காசிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிறுபான்மையினர் தாக்கப்படுவதைக் கண்டித்து ஜூன் 2017இல் மும்பையில் நடைபெற்ற பேரணி.

ஒரு நபரின் அந்தரங்க உரிமை ஒரு அடிப்படை உரிமை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்த இந்திய உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சுரிமை உள்ளிட்ட பாதுகாப்புகளை, எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

எனினும் அரசை விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு, மானநட்ட வழக்கு உள்ளிட்டவை பதியப்படுகின்றன. சட்ட நடவடிக்கைகள், மனம்போன போக்கில் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியன ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் அரசுக்கு எதிரான செய்திகளை சுய தனிக்கைக்கு உள்படுத்திக்கொள்ளும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

இந்தியாவின் மாநில அரசுகளும் சட்ட ஒழுங்கை பராமரிக்க இணையதள சேவைகளை முடக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் வரை, அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் 27 முறை உள்பட, 60 முறை அவ்வாறு இணையதள சேவை முடக்கப்பட்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

மனித உரிமை செயல்பாட்டாளர்களையும், அமைப்புகளையும் அச்சுறுத்த, அரசு சாரா அமைப்புகளுக்கு வரும் நிதி உதவியை நிர்வகிக்கும் வெளிநாட்டு நன்கொடைகளை முறைப்படுத்துவதற்கான சட்டம் (Foreign Contribution Regulation Act ) பயன்படுத்தப்பட்டது, என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :