நீதிபதிகள் நியமனம் ஒரு நடுநிலையான குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: சந்துரு கருத்து

நீதிபதி சந்துரு படத்தின் காப்புரிமை KIZHAKKU PATHIPPAGAM

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் ஒரு நடுநிலையான குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஒய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மூத்த நீதிபதியா, அவருக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுத்த செல்லமேஸ்வர் மூத்த நீதிபதியா என்பது குறித்தும் சுவாரசியமான கருத்துகளை அவர் பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் சில செயல்பாடுகள் குறித்து, உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் - செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய் எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் - சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து முறையிட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சி. சந்துரு பிபிசி தமிழுக்கு ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் இருந்து...

நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியது புதிதான விஷயமல்ல. 1972ல் ஏ.என். ரே என்பவரை தலைமை நீதிபதியாக நியமித்தபோது, மூன்று நீதிபதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். ஒருவர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து புகார் கொடுத்தார்.

ஆனால், இந்த செய்தியாளர் சந்திப்பு வேறுவிதமானது. செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு முன்பாக தலைமை நீதிபதியைச் சந்தித்து, தங்கள் குறைகள் குறித்து கடிதம் கொடுத்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதால் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாக இவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அப்படிச் செய்யாவிட்டால் தாங்கள் ஒரு முக்கியமான சரித்திரக் கடமையைச் செய்யத் தவறியவர்களாவோம் என்பதால் செய்தியாளர்களைச் சந்திப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

அவர்கள் கூறியிருப்பதில் முக்கியமான விஷயம், தலைமை நீதிபதிக்கு உள்ள ஒரு அதிகாரம் பற்றியது. தலைமை நீதிபதிதான் வழக்குப் பட்டியலைத் தயாரித்து, ஒவ்வொரு வழக்கையும் எந்த நீதிபதி விசாரிக்க வேண்டுமென்று பார்த்து ஒப்படைப்பார். இந்த நான்கு பேரின் குற்றச்சாட்டு என்னவென்றால், 'நீதிமன்றத்திற்கு வரும் முக்கியமான வழக்குகள் சிலவற்றை தன்னிச்சையாக சில இளம் நீதிபதிகள் அடங்கிய அமர்விடம் ஒப்படைக்கிறார்; இது முறையல்ல' என்பதுதான்.

ஒரு தலைமை நீதிபதி தான் விரும்பிய அமர்வுக்கு ஒரு வழக்கை அனுப்பும்போது, அதன் விளைவை, அதாவது ரிசல்டை, அவரால் நிர்ணயிக்க முடியும். இது தவறு என இந்த நீதிபதிகள் கூறுகிறார்கள். இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்கிறார்கள்.

Image caption உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப்

கே: எந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டுமென்பதை எப்படிச் செய்ய வேண்டுமென்கிறார்கள்?

ப: இந்த விவகாரம் இப்போதுதான் பூதாகரமாகியிருந்தாலும் எப்போதுமே நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு காய்ச்சல் இருந்துகொண்டேயிருக்கும். ஒரு நீதிபதி விசாரிக்க விரும்புகிற வழக்கை அவரிடம் தலைமை நீதிபதி ஒப்படைக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. இரண்டாவதாக, பொதுநல வழக்குகள் வந்த பிறகு, அந்த வழக்குகள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் அடிபடுகின்றன. அப்படி ஊடக கவனம் கிடைக்கும் வழக்குகள் ஒரு சிலருக்கே செல்லும்போது, நாமெல்லாம் என்ன பணியாற்றுகிறோம் என்ற எண்ணம் சில நீதிபதிகளுக்கு ஏற்படுகிறது.

தவிர, ஒரு முக்கியமான வழக்கை இளைய நீதிபதிகளிடம் ஒப்படைக்கும்போது, தன்னை ஏன் தலைமை நீதிபதி நம்பவில்லையென்ற எண்ணம் முதுநிலை நீதிபதிக்கு ஏற்படுகிறது. ஆகவே இது ஒரு பிரச்சனையாக மாறுகிறது. இந்த வழக்குகள் ஒப்படைக்கும் விவகாரத்தில் பொதுவாக யாருக்கும் திருப்தி ஏற்பட்டது கிடையாது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதியிடம் சென்று குறிப்பிட்ட வழக்குப் பிரிவை தன்னிடம் கொடுக்க வேண்டுமெனக் கேட்டார். "இது முறைப்படி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உங்களுடைய முறை வரும்போது நீங்கள் அதைப் பார்க்கலாம்" என்று தலைமை நீதிபதி சொன்னபோது, அந்த தலைமை நீதிபதியை கடுமையான வார்த்தைகளில் ஏசினார் கர்ணன். இதையடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து இந்தியத் தலைமை நீதிபதிக்கு புகார் அளித்தார்.

ஆக, இந்தப் பிரச்சனை எப்போதுமே குமைந்துகொண்டிருக்கும் பிரச்சனைதான். ஆனால், முதல்முறையாக மக்களும் இப்படி ஒரு பிரச்சனை நீதிபதிகள் மத்தியில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை எப்படித் தீர்க்க வேண்டும் என்பதுதான் கேள்வியே தவிர, அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது சரியா, தவறா என்பது கேள்வியல்ல.

Image caption நீதிபதி சி. சந்துரு

கே. இந்த நீதிபதிகளைப் பொறுத்தவரை, வழக்குகளை யார் ஒதுக்கீடு செய்யவேண்டுமென நினைக்கிறார்கள்?

ப. முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், கோடை விடுமுறை காலத்தில் தலைமை நீதிபதி பதிவாளருடன் அமர்ந்து ஒரு நாள் முழுவதும் ஆராய்ந்து, அந்த வருடத்திற்கான வழக்கு பட்டியலை முடிவுசெய்வார்கள். அந்தப் பட்டியலை தயார் செய்த பிறகு, ஒன்றாம் எண் இலக்கத்தில் உள்ள நீதிபதி விடுமுறையில் சென்றால், வழக்கு 2ஆம் எண் நீதிபதிக்குச் செல்லும். அவர் இல்லாவிட்டால் 3ஆம் எண் நீதிபதிக்குச் செல்லும். அதனால், தலைமை நீதிபதி மீண்டும் தலையிட வேண்டிய அவசியமே வராது.

ஆனால், இப்போது பட்டியல் தயார் செய்த பிறகும், தலைமை நீதிபதி தன்னிச்சையாக சில முக்கியமான வழக்குகள் குறித்து முடிவுசெய்கிறார். இதைத் தவிர்க்க வேண்டுமென்றால், எந்த வழக்குகள் யாரிடம் செல்லும், அந்த நீதிபதி விடுமுறையில் இருந்தால் யாருக்குச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம் ஆரம்பத்திலேயே முடிவுசெய்துவிட்டால், நீதிபதி குறித்து யாரும் குறை சொல்ல முடியாது.

கே. பிற நாடுகளில் வழக்குகளை ஒதுக்கீடு செய்வது எப்படி நடக்கிறது?

ப. இலங்கையில், ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டவுடனேயே உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு அனுப்பப்படுகிறது. உச்ச நீதிமன்றம் ஏற்ற பிறகு, அந்தச் சட்டத்திற்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க முடியாது என்ற போக்கு இருக்கிறது. பாகிஸ்தானில் மேல் முறையீட்டை விசாரிக்க ஒரு பிரிவும் அரசியலமைப்பு விவகாரங்களை விசாரிக்க ஒரு பிரிவும் என உச்ச நீதிமன்றம் இரு பிரிவுகளாக செயல்படுகிறது. இந்தியாவிலும் அதுபோன்ற விவாதம் நடைபெற்றது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் எல்லா வழக்குகளையும் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுதான் விசாரிக்கும். அதேபோல, ஆஸ்திரேலியாவில் எல்லா வழக்குகளையும் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுதான் விசாரிக்கிறது. ஆனால், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் உலகில் எந்த நீதிமன்றத்திற்கும் இல்லை. இங்குள்ள நீதிபதிகள் எந்த வழக்குகளை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். ஆகவே இங்கு முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை.

ஆனால், ஒரு விஷயத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை இரண்டாகப் பிரிப்பதோ அல்லது ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு உச்ச நீதிமன்றத்தை ஏற்படுத்துவதோ சரியாக இருக்காது.

படத்தின் காப்புரிமை DDNews
Image caption தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

கே. தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்துத்தான் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இது தலைமை நீதிபதியின் செயல்பாடு தொடர்பான பிரச்சனையா அல்லது உச்ச நீதிமன்றம் என்ற அமைப்பில் உள்ள பிரச்சனை தற்போது வெடித்திருக்கிறதா?

ப. நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் பேசப்படுகின்றன. சில விவகாரங்கள் விசாரிக்கப்பட்டுவருகின்றன. நீதிபதிகள் விசாரணைக் குழுவிலும் சில தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி நீதிபதிகள் வெளியில் சொல்லப்போவதில்லை. இதற்கு ஒரே வழி, நாடாளுமன்றமே ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதன் மூலம் நீதிபதிகள் விசாரணைக் குழுவை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இருக்கிறதா என்று விசாரித்தால் ஒழிய, மக்களுக்கு உண்மை தெரியாது.

கே. நீதித் துறையில் இருக்கும் பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான அழுத்தம் வெளியிலிருந்து வரலாமா?

ப. வெளியிலிருந்து வரும் அழுத்தம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்காது. இந்தப் பிரச்சனைக்கான தீர்வு நீதிபதிகளிடமிருந்தேதான் வர வேண்டுமென இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சிகள் எல்லோருமே சொல்லிவிட்டார்கள். நீதிபதிகளை அமர்ந்து இதற்கான எல்லைக் கோடுகளை வரையறுப்பதுதான் ஒரே வழி.

கே. தான் தலைமை நீதிபதியாக முடியாத வருத்தத்தில் நீதிபதி செல்லமேஸ்வர் இப்படி புகார் கூறுகிறார் என்று சிலர் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இது சரியான விமர்சனமா?

ப. பிரச்சனைகள் வெளியில்வரும்போது தனிப்பட்ட சில அம்சங்களும் அதில் இருக்குமென்றுதான் பலரும் சொல்வார்கள். ஆனால், அவர் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளுக்காக அப்படிச் செய்திருந்தால், மற்ற மூன்று நீதிபதிகளும் அவருடன் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆகவே இதை ஒரு குழு பிரச்சனையாகப் பார்க்காமல், நீதித் துறையில் உள்ள பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்.

இரண்டாவதாக, எல்லா உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் உண்டு. சில மாநிலங்களுக்கு இரண்டு - மூன்று பிரதிநிதித்துவம்கூட உண்டு. அப்படிப் பார்க்கும்போது, தீபக் மிஸ்ராதான் முதலில் உயர்நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்டார். அவர் ஒரிசாவைச் சேர்ந்தவர்.

ஆனால், அவர் மத்தியப் பிரதேசத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். ஆனால், அவர் அசாமில் செல்லமேஸ்வர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகுதான், மத்தியப் பிரதேசத்தில் தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியானார். நீதிபதி முதுநிலைப்படி பார்த்தால் தீபக் மிஸ்ரா மூத்தவர்.

தலைமை நீதிபதி முதுநிலைப்படி பார்த்தால் செல்லமேஸ்வர் மூத்தவர். இரண்டு பேருடைய பெயரும் ஒரே நேரத்தில்தான் குடியரசுத் தலைவரிடம் எடுத்துச்செல்லப்பட்டது. ஆனால், தீபக் மிஸ்ராவின் பெயர் முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கு சில வாரங்களுக்குப் பிறகு செல்லமேஸ்வரின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பல நடைமுறை பிரச்சனைகள் இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உச்ச நீதிமன்றம்

இந்தியாவைப் பொறுத்தவரை முதுநிலை அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில்லை. ஆனால், இந்த விவகாரம் வெடித்த பிறகு அந்தக் கேள்வியும் எழுப்பப்படுகிறது. உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும்போது முதுநிலை அடிப்படையில் நியமிக்க வேண்டுமா அல்லது சட்ட ஞானம், திறமையின் அடிப்படையில் நியமிக்க வேண்டுமா?, புதிய நியமன நடைமுறைகளை உருவாக்க வேண்டுமா என்ற கேள்விகள் பொதுவெளியில் தற்போது விவாதிக்கப்படுகின்றன.

கே. உங்களைப் பொறுத்தவரை, எவ்வகையான நியமனம் சரி என்று நினைக்கிறீர்கள்?

ப. உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பொறுத்தவரை முதுநிலை என்பதை மாற்றக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதை மாற்ற வேண்டுமானால், அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். நீதிபதிகளை நியமனம் செய்வது யார் என்ற கேள்வி அடுத்ததாக எழுப்பப்படுகிறது. இப்போதுள்ள நடைமுறையில் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கிறார்கள். அதனை மாற்றுவதற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, நீதிபதிகள் நியமன ஆணையம் உருவாக்கப்பட்டது.

ஆனால், அதனை ரத்துசெய்துவிட்டார்கள். ஆனால், யதார்த்த ரீதியாகப் பார்த்தால் நீதிபதிகள் நியமனம் ஒரு நடுநிலையான குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான், தகுதியா முதுநிலையா என்ற கேள்விக்குப் பதில்சொல்ல முடியும். இல்லாவிட்டால், தனக்கு விருப்பமானவர்களைத் தேர்வுசெய்யும் யதேச்சதிகாரப் போக்குதான் ஏற்படும்.

கே. இந்தச் சூழலில் நீதிபதிகள் நியமன ஆணையத்தை மீண்டும் உயர்ப்பிக்க வாய்ப்பிருக்கிறதா?

ப. ஏற்கனவே இதற்கான சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் சாராம்சத்தை கையில் எடுத்துக்கொண்டு, புதிதாக நீதிபதிகள் நியமன சட்டத்தை உருவாக்க வேண்டும் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆளும் கட்சிக்கு நாடாளுமன்ற மேலவையில் போதுமான பெரும்பான்மை இல்லாததால் அதை அவர்கள் தவிர்த்துவிட்டார்கள். ஆனால், நீதிபதிகளிடம் ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு, புதிய வடிவில் நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்கவும் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தவும் வழிவகுக்கும்.

படத்தின் காப்புரிமை Pti
Image caption ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன்

கே. நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான வழக்கு, தற்போதைய விவகாரத்திற்கு எந்த அளவுக்கு காரணம்?

ப. நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கை தற்போது இரண்டு நீதிமன்றங்கள் விசாரித்துவருகின்றன. ஒன்று, பம்பாய் உயர்நீதிமன்றம். இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக ஒரு வழக்கு இருக்கிறது.

லோயா வழக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரமும் இந்த சர்ச்சைக்கு ஒரு காரணமே தவிர, அதுவே அடிப்படையான காரணமல்ல. இதுபோன்ற முக்கியமான வழக்குகளை இளநிலை நீதிபதிகளுக்கு அனுப்புகிறார்கள் என்பது இவர்களுடைய குற்றச்சாட்டு. ஆனால், உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, இளநிலை, முதுநிலை என்றெல்லாம் பிரிவு கிடையாது. எல்லா நீதிபதிகளுக்கும் ஒரே அதிகாரம்தான் இருக்கிறது.

ஆனால், குறிப்பிட்ட அமர்வுக்கு ஒரு வழக்கை அனுப்புவது என்பது பிரச்சனைதான். அப்படிச் செய்யும்போது, விளைவுகளையும் முடிவுசெய்யகூடிய இடம் தலைமை நீதிபதிக்கு கிடைக்கிறது. ஆகவே அது தவிர்க்கப்பட வேண்டும் என்ற பொதுநலத்தின் அடிப்படையில்தான் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கே. உச்ச நீதிமன்றம்தான் பொதுமக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிறது. அங்கு இப்படி நடப்பது மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தாதா?

ப. பொதுமக்கள் பெரிதாக உச்ச நீதிமன்றம் குறித்து விவாதிப்பதில்லை. பொதுமக்களைப் பொறுத்தவரை நீதிமன்றம் இருக்கிறது; அங்கு சென்று வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று மட்டும்தான் நினைப்பார்கள். ஆனால், வழக்காடிகள், வழக்கறிஞர்களைப் பொறுத்தவரை, நீதிமன்றங்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

படத்தின் காப்புரிமை caravan magazine
Image caption மறைந்த நீதிபதி பி.எச். லோயா

இன்னும்கேட்டால், வழக்கறிஞர்கள் 'இந்த நீதிபதியிடம் இந்த வழக்கு வந்தால் வெற்றி, அந்த நீதிபதியிடம் வந்தால் தோல்வி' என்றெல்லாம் சொல்லுவதுண்டு. இதெல்லாம் வழக்காடிகள் பலருக்கும் தெரியும். இதைத்தான் ஆங்கிலத்தில் அதாவது, பாதைக்கேற்ற குதிரை வைத்துக்கொள்ளலாம் என்பார்கள். இந்த நிலை ஏற்பட்டதற்குக் காரணம், ஒரு புறம் வழக்கறிஞர்கள்; மற்றொரு புறம், ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிபதிகள் இப்படித்தான் தீர்ப்பளிப்பார்கள் என்ற எண்ணம் ஏற்படுத்துவதும்தான்.

அது தத்துவார்த்த ரீதியில் அமைந்தால் பெரிய பிரச்சனை அல்ல. ஆனால், தனிப்பட்ட மாச்சர்யங்களின் அடிப்படையில் நீதிபதி அப்படி முடிவெடுப்பார் என்று தோன்றினால், அந்த நீதிமன்றம் மேல் மக்கள் நம்பிக்கை குறைவதற்கான நிலை ஏற்பட்டுவிடும்.

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பிற நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச நாடுகளின் நீதியமைப்புகள் பெரும் சிக்கல்களைச் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களில் பாகிஸ்தானின் தலைமை நீதிபதி நீக்கப்பட்டிருக்கிறார். இலங்கையில் இதேபோல தலைமை நீதிபதி நீக்கப்பட்டார். சமீபத்தில் வங்க தேசத்தில் அங்குள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 16வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்த தலைமை நீதிபதி ராஜினாமா செய்து, நாட்டை விட்டே வெளியேறினார்.

அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன் தலைமை நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது. இங்கே நடக்கும் விவாதங்கள் எல்லாம் நீதித்துறையை சரியான திசையில் வழிநடத்தும், எடுத்துச்செல்லும் என்பதுதான் எனது கருத்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :