"புத்தகம்": மதம், சாதி குறித்த அம்பேத்கர் எழுத்துகளின் புதிய தொகுப்பு

'புத்தகம்' என்ற தலைப்பில் பிபிசி தமிழில் அறிமுகம் செய்யப்படும் புதிய பகுதி இது. புதிதாக வெளியாகும் முக்கியப் புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள் இந்தப் பகுதியில் வெளியாகும். இப்பகுதியில் முதலாவதாக, விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள "அம்பேத்கர் இன்றும் என்றும்" என்ற தொகுப்பு நூல் குறித்த அறிமுகம் வெளியாகிறது.

கடந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கும் தருணத்தில் “பெரியார்: இன்றும் என்றும்” என்ற தலைப்பில் பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை பல்வேறு தலைப்புகளில் சுமார் 1,000 பக்கங்களுக்கு தொகுத்து வெளியிட்டது விடியல் பதிப்பகம். அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த ஆண்டு டாக்டர் அம்பேத்கரின் தேர்வு செய்யப்பட்ட நூல்களை ஒரு தொகுப்பாக அதே பாணியில் "அம்பேத்கர் இன்றும் என்றும்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது அப்பதிப்பகம்.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/Getty Images
Image caption அம்பேத்கர் படங்களின் முன்னே அமர்ந்திருக்கும் ஒரு பெண்.

ஜாதியைப் பற்றிய தெளிவான சமூக ஆய்வுகள் தேவைப்படும் தற்போதைய சூழலில் அம்பேத்கரின் எழுத்துகள் மிக முக்கியமானவை.

மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அம்பேத்கர் நூல்களிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு அம்பேத்கர் ஃபவுண்டேஷன் வெளியிட்ட தமிழ் நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் புத்தகம், இந்து மதத்தின் புதிர்கள், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், தீண்டாமை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

புத்தகத்தின் பெயர் அம்பேத்கர்: இன்றும் என்றும்
வெளியீடு விடியல் பதிப்பகம்
பக்கங்கள் 600
விலை ரூ. 300/-

முதல் பகுதியில் ஒருவர் தன்னை இந்துவாக கூறிக்கொள்வதில் உள்ள பிரச்சனை, வேதங்களின் உள்ளடக்கம், அவற்றின் நிலை பிற்காலத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டது, இந்துக் கடவுள்கள் ஒருவருடன் ஒருவர் சண்டைபோட்டுக் கொள்வதற்கான காரணம், வேதங்கள் அறநெறி, ஆன்மீகப் பண்பு கொண்டவையா போன்ற கேள்விகளை ஆராயும் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது பகுதியில், பௌத்த சமயத்தின் வீழ்ச்சி பற்றியும், இந்து சமய இலக்கியங்களான பகவத் கீதை, வேதாந்த சூத்திரங்கள், மகாபாரதம், ராமாயணம், புராணங்கள் ஆகியவை குறித்தும் அம்பேத்கர் எழுதியவை இடம்பெற்றுள்ளன. மூன்றாவது பகுதியில் தீண்டாமை குறித்தும் அம்பேத்கர் ஆராய்ந்து எழுதிய எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.

தீண்டாமை குறித்த பகுதியில் இந்துக்கள் இடையே உள்ள தீண்டாமை, இந்து அல்லாதவர்களிடையே உள்ள தீண்டாமை, தீண்டப்படாதவர்கள் கிராமத்திற்கு வெளியில் வசிப்பது ஏன் என்பது குறித்தும், மாட்டிறைச்சியை உண்பது தீண்டாமைக்குக் காரணமா, அப்படியானால் இந்துக்கள் பசு இறைச்சியை சாப்பிடுவதை கைவிட்டு எவ்வளவு நாட்களுக்குப் பிறகு தீண்டாமை உருவானது என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விடைகாண முயல்கிறார் அம்பேத்கர். கிட்டத்தட்ட கி.பி. 400வது ஆண்டுவாக்கில் தீண்டாமை சமூகத்தில் உருவாகி நிலைபெற்றிருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார் அம்பேத்கர்.

இந்திய அரசியல்சாசன நிர்ணய சபையின் தலைவராக இருந்த அம்பேத்கர் சட்டமேதையாக மட்டும் அறியப்படும் நிலையில், அவருடைய பன்முகத் தன்மையைச் சுட்டிக்காட்டும் வகையிலும் ஜாதி தொடர்பான தாக்குதல்களும் வேறுபாடுகளும் அதிகரித்திருக்கும் தற்போதைய சூழலில் அவருடைய எழுத்துகளின் தேவையை உணர்த்தும் வகையிலும் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இந்து மதத்தை அம்பேத்காரின் பார்வையில் புரிந்துகொள்ள வைப்பது இந்தப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.

இந்து மதத்தை அணுகும்போது அதனை ஆன்மீக ரீதியாக அணுகாமல், வரலாறு, சமூகம், இலக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகி இந்து சமூகத்தில் நிலவும் பல்வேறு முரண்பாடுகள், தீமைகளுக்கான அடிப்படைக் காரணங்களைத் தேடுகிறார் அம்பேத்கர்.

பிற செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆண்டாளை பெருமைபடுத்த நினைத்தது தவறா? - வைரமுத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்