ஆம் ஆத்மி: 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்

Image caption அர்விந்த் கேஜ்ரிவால்

ஆம் அத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டை பதவி வகித்தது தொடர்பான குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 டெல்லி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து இருந்தது.

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று அதற்கு ஒப்புதல் அளித்தார்.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது சட்டமன்ற உறுப்பினர்களில் 20 பேரை நாடாளுமன்ற செயலாளராக நியமித்து இருந்தார்.

அரசு பதவிகளில் இருப்பவர்கள் யாரும் ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருக்கக்கூடாது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இந்த எம்.எல்.ஏக்கள் ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.

இந்த எம்எல்ஏக்கள் 2015-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதியில் இருந்து, 2016 செப்டம்பர் 8 வரை ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து வரும் குற்றச்சாட்டு உண்மை என்பதால், அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கடந்த 19-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது இருந்தது.

இந்தப் பரிந்துரைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி இருந்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், இடைக்கால தடை எதுவும் விதிக்கப்படவில்லை.

இதனை அடுத்து, இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையத்தின் பரிந்துறைக்கு ஒப்புதல் தெரிவித்தார்.

ஆட்டம் காணுமா ஆட்சி?

எழுபது சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 66 உறுப்பினர்கள் உள்ளார்கள். பெரும்பான்மைக்கு 35 எம்.எல்.ஏக்களே போதுமானது என்பதால், 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதால் ஆட்சி கவிழாது.

இருப்பினும், தார்மீக அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டுமென பா.ஜ.கவும், காங்கிரஸும் வலியுறுத்தி உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் விமர்சனம்

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ள குடியரசுத் தலைவரின் முடிவை விமர்சித்தும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கிண்டல் செய்தும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்