ஏன் தனித்து விடப்பட்டார் விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் பிரவின் தொகாடியா?

பிரவின் தொகாடியா படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரவின் தொகாடியா

என்கவுண்டருக்காக அழைத்து செல்லப்படும் ஒருவர், பலியிடுவதற்காக அழைத்து செல்லப்படும் ஆட்டிற்கு இணையானவர்.

பலியிடுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு என்னவெல்லாம் செய்யும்? முதலில் திமிறும், பிறகு தன்னால் இயன்ற அளவுக்கு கத்தும்... பின் தன்தலையை கவிழ்த்து, புற்களை மேய தொடங்கும். சிறிது நேரத்திற்குப் பிறகே கட்டப்பட்டிற்கும் கயிறை அறுக்க முயற்சிக்கும்.

என்ன சப்தமிட்டாலும், இறுதியில் கழுத்தில் கத்தி வைப்பது என்பதில் எந்த மாற்றமும் இல்லை, சிறிது நேரத்தில் சப்தநாடியும் அடங்கி உடல் குளிர்ந்துவிடும்

நீதிமன்றங்களில், காவல் துறை விசாரணை அறிக்கைகளில், என்கவுண்டர்கள் குறித்து பல வாக்குமூலங்கள் பதியப்பட்டு இருக்கின்றன. எப்படி காவல் துறை போலி மோதல் சாவுகளை மேற்கொள்கிறது என்று அதுவிவரிக்கிறது. ஆனால், உண்மை என்ன என்பது போலி மோதல் சாவில் இறந்த அந்த மனிதருக்கு மட்டும்தான் தெரியும்.

என்கவுண்டர் திரைப்படங்கள்:

திரைப்படங்களில் போலி மோதல் சாவுகள் குறித்த காட்சிகள் இவ்வாறாக இருக்கின்றன:

ஆள் அரவமற்ற ஓர் இடத்தில், நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் அமர்ந்திருக்கும் கைதியை வெளியே வர போலீஸ் சொல்லும். உன்னை விடுவிக்க முடிவு செய்துவிட்டோம், தப்பித்து ஓடு என்று காவலர்கள் சொல்வார்கள்.

தன்னை கொல்லப்போகிறார்கள் என்று கைதிக்கு தெரியும். விரைவில் இறக்கப்போகிறோம் என்பதை நன்கு அறிந்திருந்தாலும், ஒரு ஆட்டுக்குட்டியைப் போல தப்பித்து ஓட முயற்சிப்பார். எல்லாம் சில விநாடிகள்தான், துப்பாக்கியிலிருந்து புறப்படும் குண்டுகள், அந்த கைதியின் உடலை ஊடுருவி கொல்லும்.

அடுத்தநாள் வரும் செய்திதாள்களில், அந்தச் செய்தி இவ்வாறாக இடம்பெற்றிருக்கும்: போலீஸுடன் ஏற்பட்ட மோதலில், ஒரு ரவுடி/கொள்ளைக்காரன்/ நக்சலைட்/ தீவிரவாதி கொல்லப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இஷ்ரத் ஜகான்

சொராப்தீன் ஷேக், இஷ்ரத் ஜகான், மாவோயிஸ்ட் தலைவர் அசாத், உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஹெம் பண்டே, சிமி இயக்கத்தைச் சேர்ந்த எட்டு பேர் - இவர்கள் போலி மோதல் சாவுகளிலோ அல்லது போலீஸுடன் ஏற்பட்ட உண்மையான மோதலிலோ கொல்லப்பட்டவர்கள்.

என்கவுண்டரும்... தொகாடியாவும்

விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் அகில உலக தலைவர் பிரவின் தொகாடியா, தொலைக்காட்சிகளில் கதறுவது போல, அவரது பெயரும் இந்த போலி மோதல் சாவுகள் பெயர் பட்டியலில் சேருகிறதா?

கடந்த திங்கட்கிழமை அவர் காவல் நிலையத்திற்கு சென்றிருந்தால், அவர் அகமதாபாத்திற்கு வெளியே ஆள் அரவமற்ற ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பாரா?

பத்து வருடங்கள் பழமையான ஒரு வழக்கில் ராஜஸ்தான் மாநில போலீஸார் தொகாடியாவை கைது செய்ய கடந்த வாரம் வந்தனர். தொகாடியாவின் கருத்துப்படி, "எனக்கு போலீசாரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றுவிட்டேன். அதன்பின் நினைவு வந்தபோது, அடுத்தநாள் காலை அகமதாபாத் மருத்துவமனையில் ஒன்றில் இருந்தேன்".

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரவின் தொகாடியா

ஏன் தொகாடியா அச்சப்படுகிறார்?

இந்து மதத்திற்கு கச்சைக்கட்டிக்கொண்டு ஆதரவு கொடுத்தவரும், தைரியத்தின் குறியீடாக பார்க்கப்பட்டவருமான தொகாடியா நேற்றுவரை இஸ்லாமியர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தவர்.

இந்த தேசத்தில் தீவிரவாதம் பரவுவதற்கு காரணம் மகாத்மா காந்தி என்று சொன்னவர், இன்றோ மருத்துவமனையில் இருந்துகொண்டு, கண்களில் ததும்பிய கண்ணீருடன் தொண்டை அடைக்க, என்னை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று கூறுகிறார். ஒரு மிரண்டு போன ஆட்டுக்குட்டியைப்போல அச்சத்துடன் காணப்படுகிறார்.

படத்தின் காப்புரிமை Tauseef Mustafa

இதில் நகைமுரண் என்னவென்றால், இப்போது இருக்கும் குஜராத் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருப்பது பா.ஜ.க-தான். அதுமட்டுமல்ல, இவருடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஒன்றாக பயிற்சி பெற்றவர்கள்தான் இன்று அரசின் முக்கிய பதவிகளிலும் பா.ஜ.க கட்சியிலும் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தொகாடியா தலைமை பொறுப்பில் இருக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் இருந்து பயிற்சி பெற்ற லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் தேசம் முழுவதும் விரவியிருக்கிறார்கள். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பிலும், `சுய பாதுகாப்பு’ என்ற பெயரில் பலருக்கு வாள் வீச்சு பயிற்சியும், துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

தொகாடியா குறித்து அவர்கள் பேச மறுப்பது ஏன்?

கிராமங்களில், நகரங்களில் வாழும் இந்துக்களின் பாதுகாப்புக்கு நாங்கள்தான் பொறுப்பு என்கிறார்கள் பஜ்ரங் தளத்தை சேர்ந்த இளைஞர்கள். அவர்கள் யார் மீது வேண்டுமானாலும், `லவ் ஜிகாத்` என்ற முத்திரையைக் குத்தி, தாக்குவார்கள். தங்கள் விருப்பப்படி எந்த வண்டியை வேண்டுமானாலும் சோதனை போடுவார்கள். யாத்திரை செல்லும் இஸ்லாமிய இளைஞர்களை தடுப்பார்கள், அவர்களை சீண்டுவார்கள், தேச துரோகி என்றும்கூட சொல்வார்கள்.

ஆனால், இவர்களில் எத்தனை பேர் தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள்? இந்து மதத்தை, தர்மத்தை காக்க தயாராக இருக்கிறார்கள்? தங்களுக்கு வழிகாட்டும் அமைப்பின் தலைவருக்கு பிரச்சனை என்றவுடன் கையில் திரிசூலத்துடன், நெற்றியில் திலகமிட்டு அவருக்கு ஆதரவாக எத்தனை பேர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரவின் தொகாடியா

பிரவின் தொகாடியாவின் கண்ணீரைப் பார்த்தும் யாருக்கும் ஏன் ரத்தம் கொதித்தெழவில்லை? 'இந்துத் தலைவரான அவரை கொல்ல சதி நடப்பது பற்றி ஏன் எந்தவொரு தொண்டரும் குரல் எழுப்பவில்லை?

ஏனென்றால், பிரவின் தொகாடியாவின் `அரசியல் என்கவுண்டர்` எப்போதோ அரங்கேறிவிட்டது.

அதிகாரப்போட்டி

பாகிஸ்தான், முஸ்லீம்கள், மகாத்மா காந்தி, காங்கிரஸ், ஒவைசி, கிறிஸ்துவர்கள் இவர்களுக்கு எதிராக உரத்த குரல் எழுப்ப மட்டுமே தொகாடியா தேவை. இந்து மற்றும் முஸ்லிம்களை பிரிப்பது, வாக்குவங்கியாக செயல்படுவதோடு தொகாடியாவின் வேலை முடிந்துவிட்டது.

உத்தர பிரதேச மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பயன்பட்டது போன்றதே இதுவும். அரசியல் சதுரங்க விளையாட்டில் அவர் வலுவாக இருந்ததால், முதலமைச்சர் பதவியில் வலுவாக காலூன்றினார். முதல்வராக பொறுப்பேற்ற உடன் கலவரத்தை தூண்டியதாக அவர் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டன.

ஆனால், தொகாடியா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் அதிகாரம் செய்ய நினைத்தார். சட்டப்பேரவையை அல்லது நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தும் `மந்திரக்கோல்` குருசபையிடம் இருக்கவேண்டும் என்று நினைத்தார். அதையே வெளிப்படுத்தினார். அதனால்தான் அதிகாரம் செய்ய விரும்பிய அவரை அதிகாரத்தில் இருப்பவர்கள் தனித்து விட்டுவிட்டார்கள்.

இப்போது ஆளில்லா வனாந்திரத்தில் தனித்து விடப்பட்டு இருக்கிறார் தொகாடியா. ஜெய்-ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு வரும் பஜ்ரங் தள் அமைப்பின் தொண்டர்கள் யாரும் தொகாடியாவை பாதுகாக்க முழக்கமிட்டு வருவதை பார்க்கமுடியுமா என்பது கேள்விக்குறியே!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்