பெண்களை மட்டுமே அவமதிக்கும் 'கெட்ட' வார்த்தைகள்! #HerChoice

அந்த வசைச் சொற்கள் மிகவும் ஆபாசமானவை. அவற்றை இங்கு விவரிக்க நான் விரும்பவில்லை. நான் சொல்லாவிட்டாலும் கூட அவை என்னவென்று உங்களுக்குத் தெரியும்.

இந்த இந்திய நாட்டில், அந்த வசைச் சொற்களின் பொருள் இடத்துக்கு இடம் மாறுபடலாம். ஆனால், அவை அனைத்துக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு.

அந்த வார்த்தைகள் அனைத்தும் பெண்கள், அவர்களின் உடல் பாகங்கள், அவர்களது உறவுகள் ஆகியவற்றை இகழும் வன்முறை மற்றும் பாலியல் பொருள் பொதிந்தவையாகவே உள்ளன. அவை எந்தத் தடையும் இன்றி மிகவும் இயல்பாக அனைவரின் வாழ்விலும் கலந்துவிட்டன.

அந்தக் 'கெட்ட' வார்த்தைகள் கூட பெண்களையே அவமதிக்கும் வகையில் உள்ளன. அவற்றை கேட்பதுகூட பெண்களுக்குப் பிடிக்கவில்லை. பெண்கள் தங்கள் விருப்பம்போல வாழவும், சுதந்திரமாகச் சிந்திக்கவும் தேர்வு செய்தது பற்றிய தொடர் அதனால்தான் சிலருக்கு ஒரு அசௌகரியத்தை உண்டாக்கியிருக்கக்கூடும்.

தங்கள் உறவுகளையும் தங்கள் வாழ்வையும் தங்கள் விருப்பம்போல் அமைத்துக்கொண்ட பெண்களை பற்றிய தொடர்தான் #HerChoice.

அதைப் படித்த சீமா எனும் வாசகர் ஒருவர், அக்கட்டுரையைப் படித்தவர்கள் அதை திட்டும்போது 'பெண்கள்' எனும் சொல்லையும் பயன்படுத்தியது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

கணவன் ஆண்மையற்றவர் என்பதை அறிந்துகொண்ட ஒரு புது மணப்பெண்ணின் வெளிப்படையான பாலியல் விருப்பங்கள் பற்றிய கட்டுரை அது.

இத்தகைய விவகாரங்களில் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதையும் கடந்து, இவை ஆண்களுக்கான விருப்பங்கள் என்று மட்டுமே கருதப்படுகிறது.

அந்தப் புதுமணப்பெண் யார் என்று தெரியா விட்டாலும், அது இந்த சமூகத்துக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது என்று கூறியிருந்தார் விராசினி எனும் வாசகர்.

"தவறு எப்போதும் பெண்களிடம் மட்டுமே இருக்காது. அது ஆண்களிடமும் இருக்கலாம். இந்த சமூகம் தனது கண்ணாடியைக் கழட்டிவிட்டு, பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்," என்று அவர் கருதுகிறார்.

தங்கள் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரிடம் இருந்து மோசமான எதிர்வினைகளை அப்பெண்கள் சந்திப்பதைத் தவிர்க்கவே, அக்கதைகள் உண்மையாக உள்ளபோதிலும், அவர்களின் அடையாளங்களை நாங்கள் வெளியிடவில்லை.

இந்தக் கதைகள் ஒரு வேளை இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்றாமல் போகலாம். ஆனால், பெண்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்த உதவும் என்று பூனம் குமாரி எனும் வாசகர் தெரிவித்துள்ளார்.

இவை பெண்கள் தங்கள் குறைகளையும் புகார்களையும் கூறுவதற்கான தொடர் அல்ல. குடும்பம் போட்ட கோடு, சமூகம் தந்த அழுத்தம், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலம் காலமாக பணிக்கப்பட்ட கட்டளைகளையும் தகர்த்த பெண்களை பற்றிய கதைகளே இந்தத் தொடர்.

அதனால் தான் சிலருக்கு உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும், சிலருக்கு மன வலிமையைத் தருவதாகவும் இந்தத் தொடர் அமைந்துள்ளது.

ஒன்றாக வாழ முடிவெடுத்த இரு பெண்கள் குறித்த இத்தொடரின் இரண்டாவது கட்டுரை பற்றிக்கூறியுள்ள மீனாட்சி எனும் வாசகர், "தங்கள் விருப்பப்படி வாழப் பல பெண்களுக்கு துணிச்சல் உள்ளது. எனினும் இவர்கள்தான் அதைச் செய்து காட்டியுள்ளனர்," என்று கூறியுள்ளார்.

"நீங்கள் ஏன் செய்கிறீர்கள், எதைச் செய்கிறீர்கள் என்பதை உண்மையாகவே அறிந்தது வைத்திருக்கும்போது இத்தகைய கதைகள் நிகழ்கின்றன," என்று ஆதியா ரெஹ்மான் எனும் வாசகர் கூறியுள்ளார்.

தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்துகொள்ளும் வகையிலோ, அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலோ பெண்கள் வளர்க்கப்படுவதில்லை.

தங்களைப் பற்றி பெண்கள் அறிந்துகொள்ளவும், பெண்களைப் பற்றி ஆண்கள் புரிந்துகொள்ளவும் இந்தத் தொடர் உதவியாக இருக்கும்.

இந்த வார இறுதியிலும் கலகக்காரப் பெண்களை பற்றிய இரு கதைகள் வரவுள்ளன. அவற்றையும் படித்துவிட்டு, அவை உங்களை அதிர்ச்சியடையச் செய்தனவா, ஊக்குவித்தனவா என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது பாவமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :