நோபல் பரிசுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்ட இந்திய அணுசக்தியின் தந்தை ஹோமி பாபா

ஹோமி ஜஹாங்கீர் பாபா படத்தின் காப்புரிமை TIFR
Image caption ஹோமி ஜஹாங்கீர் பாபா

இந்திய விஞ்ஞானி சர் சி.வி.ராமன், பிற விஞ்ஞானிகளை புகழ்வது அரிதான விஷயம் என்றாலும், அதில் விதிவிலக்காக திகழ்ந்தவர் ஹோமி ஜஹாங்கிர் பாபா. 'இந்தியாவின் லியோனார்டோ டி வின்சி' என்று ஹோமி பாபாவை ராமன் அழைப்பார்.

இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டும் ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று பிறந்தவர்.

விஞ்ஞானம் மற்றும் அறிவியலைப் போன்றே பாபாவுக்கு இசை, நடனம், புத்தகங்கள், ஓவியம் ஆகியவற்றின்மீது தீராக்காதல் கொண்டிருந்தார். விஞ்ஞானிகள் உரையாற்றுவதை பார்த்திருக்கலாம். ஆனால் தனது சகாக்களின் உருவப்படம் அல்லது ஓவியத்தை விஞ்ஞானி ஒருவர் வரைவதை பார்த்திருக்கமுடியாது.

சமகால வரலாறுக்கான காப்பக அமைப்பின் நிறுவனரும், ஹோமி பாபா பற்றி புத்தகம் எழுதியவருமான இந்திரா செளத்ரி கூறுகிறார், "தனது 2 ஓவியங்களை ஹோமி பாபா வரைந்திருப்பதாக மிருணாளினி சாராபாயி கூறியிருக்கிறார். பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைனின் சித்திரத்தையும் தீட்டியிருக்கும் பாபா, ஹுசைனின் முதல் புகைப்பட கண்காட்சியை மும்பையில் திறந்துவைத்த பெருமையை பெற்றவர்.

பாம்பே முற்போக்கு கலைஞர்களின் புகைப்பட, சிற்ப கண்காட்சி நடைபெறும் போதெல்லாம் தவறாமல் சென்று பார்வையிடும் ஹோமி பாபா விருப்பமனவற்றை வாங்குவார்".

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எம்.எஃப்.ஹுசைன்

இசைக் காதலர்

புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் யஷ்பால் தனது பணியின் ஆரம்ப காலத்தில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்டமண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் ஹோமி ஜஹாங்கீர் பாபாவுடன் பணிபுரிந்தார். ஹோமி பாபா தனது 57 வயதிற்குள் அடைந்த உன்னதத்தைப் போன்று வேறு எவரும் பெறவில்லை என்று அவர் கருதுகிறார்.

யஷ்பால் கூறுகிறார், "இசையில் பேரார்வம் கொண்ட ஹோமிக்கு இந்திய சங்கீதம் அல்லது மேற்கத்திய சங்கீதம் என்று வேறுபாடு கிடையாது. எந்த ஓவியத்தை எங்கு மாட்டவேண்டும் எப்படி மாட்டவேண்டும், வீட்டு அலங்காரம் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடியவர், மிகவும் ரசனை மிக்கவர்.

நாங்கள் ஒன்றாக வேலை செய்தபோது, வாரவாரம் புதன்கிழமையன்று நடைபெறும் கல்வி தொடர்பான கலந்தாய்வுகளை அவர் தவறவிட்டதேயில்லை. என்ன நடக்கிறது என்பதை அனைவரிடம் பேசி தெரிந்துக் கொள்ளும் வித்தியாசமான விஞ்ஞானி ஹோமி பாபா". என்கிறார்.

படத்தின் காப்புரிமை nuclearweaponarchive.org
Image caption நேருவுடன் ஹோமி ஜஹாங்கீர் பாபா

ஜவஹர்லால் நேருவின் சகோதரன் பாபா

ஜவஹர்லால் நேருவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஹோமி பாபா, நேருவை 'அண்ணா' என்று அழைக்கும் உரிமை பெற்ற வெகு சிலரில் ஒருவர்.

"நேருவை சகோதராக கருதி உரிமையுடன் அழைத்தவர்கள் இருவர் மட்டுமே, ஒருவர் ஜெய்பிரகாஷ் நாராயண், மற்றவர் ஹோமி பாபா. தினமும் பின்னிரவில் நேருவுடன் பாபா தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுவார், பாபாவிடம் பேசுவதற்காக நேரு நேரம் ஒதுக்குவார்" என்று இந்திரா காந்தி கூறியதாக இந்திரா செளத்ரி தெரிவிக்கிறார்.

டி.ஆர்.டி.ஒவில் ஆலோசகராக பணியாற்றிய பிரிட்டிஷ் விஞ்ஞானி பேட்ரிக் பைங்கெட் ஹோமி பாபா பற்றி கூறிய கருத்து இது. "நேருவுக்கு அறிவார்ந்தவர்களுடன் நட்புக் கொள்வது விருப்பமானது. ஹோமி பாபாவுடனான நட்பை நேரு விரும்பினார் என்று பேட்ரிக் கூறுகிறார்.

பாபா பரந்த சிந்தனை கொண்டவர். காலத்திற்கு ஏற்றாற்போல மாறவேண்டும் என்பதற்கும், எதிர்கால தேவைகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளித்தவர் அவர்.

படத்தின் காப்புரிமை TIFR

முன்னோக்கிய சிந்தனை

பிரபல விஞ்ஞானி பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான சம்பவம் இது. "டெஹ்ராடூனுக்கு பாபாவுடன் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் பண்டிட் நேருவும் அங்கு தங்கியிருந்தார். ஒருநாள், நாங்கள் விருந்தினர் மாளிகையில் இருந்து நடைபயிற்சி மேற்கொண்டோம். அப்போது, இருபுறங்களிலும் இருந்த மரங்களின் பெயர்கள் தெரியுமா என்று அவர் என்னிடம் கேட்டார். ஸ்டஃபூலியா அமடா என்று பதிலளித்தேன்".

"இதுபோன்ற மரங்களை செண்ட்ரல் அவென்யூவில் வைக்கப்போகிறேன் என்றார் ஹோமி பாபா. இந்த மரங்கள் வளர நூறு ஆண்டு காலம் ஆகும் என்று சொன்னேன். அதனால் என்ன? நானோ நீங்களோ இருக்கமாட்டோம், அவ்வளவுதானே? ஆனால் மரங்கள் இருக்கும், அதுதானே தேவை என்றார் ஹோமி. எதிர்காலத்தைப் பற்றிய அவரது கண்ணோட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது".

படத்தின் காப்புரிமை TIFR

60 ஆண்டுகளுக்கு முன்பே மரங்களை இடம் மாற்றி நட்டவர்

"தோட்டக்கலையில் மிக்க ஆர்வம் கொண்ட ஹோமி பாபாதான், மும்பையில் இருக்கும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்டமெண்டல் ரிசர்ச் செண்டர், மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள கண்கவர் பசுமைத் தோற்றத்திற்கு காரணமானவர்" என்கிறார் இந்திரா செளத்ரி.

"டாடா ரிசர்ச் அமைப்பில் இருக்கும் அமீபா கார்டன், அமீபாவின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது. அனைத்தும் கச்சிதமாக இருக்கவேண்டும் என்று விரும்பும் ஹோமி ஜஹாங்கீர் பாபா, அனைத்து பெரிய மரங்களையும் இடம் மாற்றினார். முதலில் மரங்கள் நடப்பட்டு பிறகு கட்டடம் கட்டப்பட்டது. பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டபோது எனக்கு ஹோமியின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே மரங்களை வெட்டுவதை தவிர்த்து, அவற்றை இடம்மாற்றினார் அவர்" என்று நினைவுகூர்கிறார் இந்திரா செளத்ரி.

படத்தின் காப்புரிமை TIFR

உணவுப்பிரியர்

இந்திரா காந்தியின் அறிவியல் ஆலோசகராக இருந்த பேராசிரியர் அஷோக் பார்த்தசாரதி கூறுகிறார், "1950 முதல் 1966 வரை அணுசக்தி ஆணையத்தின் தலைவராக ஹோமி பாபா இருந்தபோது, தனது கைப்பெட்டியை பியூன் எடுத்து செல்லவதற்கு அனுமதித்ததில்லை, தானே எடுத்துச்செல்வார். பின்னர் விக்ரம் சாராபாயும் பாபாவின் பழக்கத்தையே வழக்கமாக்கினார்.

தனக்கு தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள ஹோமி பாபா ஒருபோதும் தயங்கியதில்லை. அவர் ஒரு கருத்தரங்கில் உரையாற்றியபோது இளம் விஞ்ஞானி ஒருவர் பாபாவிடம் சந்தேகம் கேட்டார். அது கடினமானதாக இருந்தது. இந்த கேள்விக்கு என்னிடம் இப்போது பதில் இல்லை என்று கூறிய பாபா, பதிலை தெரிந்துக் கொண்டு சில நாட்களில் கூறுகிறேன் என்று கூறினார்.

உணவு மேல் மோகம் கொண்டவர் ஹோமி பாபா என்பது யாருக்கும் தெரியாத ரகசியம் என்று கூறும் இந்திரா செளத்ரி, அணுசக்தி விஞ்ஞானி எம்.எஸ் ஸ்ரீநினிவாசன் கூறிய ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். வாஷிங்டன் பயணம் மேற்கொண்டிருந்தபோது, பாபாவுக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டது, அவரை பரிசோதித்த மருத்துவர் வெறும் தயிர் மட்டுமே சாப்பிடவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆனால், பாபா முதலில் திராட்சையை உட்கொண்டார், பிறகு முட்டை, காபி, பிரெட் டோஸ்ட் சாப்பிட்டார். அதன்பிறகு மருத்துவர் கூறிய தயிரையும் விட்டுவைக்கவில்லை.

படத்தின் காப்புரிமை TIFR
Image caption வலது பக்கத்தில் ஹோமி பாபா, இடது விளிம்பில் ஐன்ஸ்டீன்

நோபல் பரிசுக்கு பரிந்துரை

பாபாவிடம் ஒரு நாய் இருந்தது. மிக நீண்ட காதுகளைக் கொண்டிருந்த அதன் பெயர் க்யூபிட். தினசரி நடைபயணத்தில் க்யூபிட்டையும் அழைத்துச் செல்வார். பாபா வீட்டிற்கு திரும்பியவுடன், அவரிடம் ஓடி வந்து தொற்றிக்கொள்ளும் க்யூபிட், விமான விபத்தில் பாபா இறந்தபிறகு ஒரு மாதத்திற்கு சாப்பிடவேயில்லை.

மருத்துவர் தினசரி வந்து மருந்துகள் கொடுத்தாலும், க்யூபிட் தண்ணீரைத் தவிர வேறு எதையுமே குடிக்கவோ சாப்பிடவோ இல்லை. சில நாட்களில் தனது பிரியமானவரிடமே சென்று சேர்ந்துவிட்டது க்யூபிட்.

மனிதர்களிடம் குறைகளும் இருக்கலாம். நேரம் தவறுவது ஒன்று மட்டுமே பாபாவின் குறை.

"ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல குணங்கள் இருப்பதுபோன்றே சில கெட்ட குணங்களும் இருக்கும். காலதாமதம் பற்றி பாபா அக்கறை கொள்ளமாட்டார் என்பது பெரும்பாலானோர் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அவரை சந்திப்பதற்காக நேரம் வழங்கியிருந்தாலும், பல மணி நேர காத்திருப்புக்கு பின்னரே அவரை சந்திக்கமுடியுமாம்.

வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி அமைப்பின் கூட்டங்களுக்குகூட அவர் மிகவும் தாமதமாகவே செல்வாராம். எனவே அவரை சரியான நேரத்திற்கு வரச் செய்வதற்காக கூட்டம் நடைபெறும் நேரத்தை அறிவிக்கும்போது, அரை மணி முன்னதாக கூட்டம் நடைபெறுவதாக அறிவித்துவிடுவார்களாம்.

இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டார் ஹோமி ஜஹாங்கீர் பாபா. பாபா வாழ்க்கையின் கதை நவீன இந்தியாவின் உருவாக்கம் பற்றிய கதை என்றே சொல்லலாம்.

ஹோமி பாபாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியபோது ஜே.ஆர்.டி டாடா கூறிய வார்த்தைகள் இவை.

"மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ஹோமி பாபா ஆகிய மூன்று மாமனிதர்களையும் அறிந்த அதிருஷ்டசாலி நான். ஹோமி கணிதத்தில் புலமை பெற்றவர் மற்றும் தலைசிறந்த விஞ்ஞானி மட்டுமே அல்ல, அவர் ஒரு சிறந்த பொறியாளர், கலைஞர், தோட்டக் கலைஞர், இசைப்பிரியர். நான் அறிந்த மனிதர்களிலேயே இத்தனை சிறப்புபெற்ற ஒரே 'முழு மனிதர்' ஹோமி பாபா மட்டுமே".

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :