தேசிய வாக்காளர் தினம்: இந்தியத் தேர்தல் முறை மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறதா?

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் எப்போதும் ஒரு பேசுபொருளாகவே உள்ளது. தேர்தல் சீர்திருத்தம் பற்றிய விவாதங்களில் எப்போதும் தவறாமல் இடம்பெறும் ஒன்று 'விகிதாச்சார பிரதிநிதித்துவ' முறை.

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தலின்போது ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டு அதன் மூலம் மாநில சட்டமன்றங்களுக்கும் மக்களவைக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு பதில், கட்சிகள் பெரும் வாக்குகளின் விகிதத்தின் அடிப்படையில் அந்தந்த கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதே இந்த முறை.

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பது இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையாக உள்ள மாநிலங்கள் அவையில் அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்பவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநில சட்டமன்றங்களில் தங்களுக்கு இருக்கும் இடங்களின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர்களை கட்சிகள் தேர்வு செய்யலாம்.

ஆனால், சட்டமன்ற, மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிகமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். பெரும்பாலான சமயங்களில், பதிவான வாக்குகளில் அந்த வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட, அவர் பெறாத வாக்குகளே அதிகமாக இருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறாத ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலில் இரண்டு விரல்களில் மையிடப்பட்ட பெண்

பெற்ற வாக்குகளை விட கூடுதல் இடங்கள்

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 543 இடங்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களில் 206 வேட்பாளர்களே தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 50% அல்லது அதற்கும் மேலான வாக்குகளை பெற்றுள்ளனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மீதமுள்ள தொகுதிகளில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பதிவான வாக்குகளில் 50%க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். பிற வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் வெற்றிபெற்ற வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் வாக்களிக்கவில்லை என்றாலும், அவர்கள் வெற்றி பெற்றவரை ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

50%க்கும் மேல் நால்வர் மட்டுமே

பதிவான வாக்குகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தங்கள் வாக்குகளை பதிவு செய்யாதவர்களையும் சேர்த்து, தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 2014இல் வெற்றிபெற்றவர்கள் வெறும் நால்வர் மட்டுமே.

குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோதி (51.61%), திரிபுரா மேற்கு தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தா (53.80%) திரிபுரா கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜிதேந்திர சௌத்ரி (54.70%) , நாகலாந்து தொகுதியில் போட்டியிட்ட நெய்ஃபு ரியோ (60.30%) ஆகியவர்களே அந்த நால்வர்.

காங்கிரஸ் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுதும் பதிவான வாக்குகளில் 19.52%-ஐ பெற்றிருந்தாலும், மொத்தமுள்ள தொகுதிகளில் 10%இல் கூட வெல்லவில்லை. அக்கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தன. 31.34% வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதா கட்சிக்கு 282 இடங்கள் கிடைத்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உத்திரப்பிரதேச மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 19.77% பெற்றிருந்தாலும், அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை.

அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றும் அதிக இடங்களில் வெற்றி பெறாத கட்சிகள் பலவும் கூறுவது விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இருந்திருந்தால் தங்கள் அதிக இடங்களைப் பெற்றிருப்போம் என்பதே. இதே கட்சிகள் வெற்றிபெறும்போதும், குறைவான வாக்குகள் பெற்ற கட்சிகள் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பின்னரும் இதைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.

விகிதாச்சார பிரதிநிதித்துவம் தீர்வாகுமா?

பிபிசி தமிழிடம் பேசிய இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, "இது ஒரு முட்டாள்தனமான முடிவாகத்தான் இருக்கும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் அமையவே இது வழிவகுக்கும்," என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"ஏற்கனவே விகிதாச்சார பிரதிநிதிதுவம் உள்ள ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து சில மாதங்கள் ஆகியும் நிலையான ஆட்சி அமையாமல் இருப்பதே அதற்கு உதாரணம். வளர்ந்த நாடுகளில் தொழில்துறை அரசை அதிகமாகச் சார்ந்து இருப்பதில்லை. அதனால், நிலையான அரசு இல்லாவிட்டாலும் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், அரசை நம்பியுள்ள தொழில் துறையைக் கொண்டுள்ள இந்தியாவில் அது பெரிய பாதிப்பை உண்டாக்கும்," என்கிறார்.

'சாதிக் கட்சிகள் அதிகரிக்கும்'

மேலும் பேசிய கோபால்சாமி, "சாதி மற்றும் மதம் சார்ந்த அரசியல் அதிகம் உள்ள இந்தியாவில், விகிதாச்சார பிரதிநிதித்துவம் வந்தால் இன்னும் சாதிக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதிக வாக்குகள் பெரும் வேட்பாளரே வெற்றி பெறுவார் எனும் சூழ்நிலை இருப்பதால்தான் இங்கு கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. விகிதாச்சார பிரதிநிதித்துவம் வந்தால் தனித்து நின்றால்கூட எப்படியும் சில இடங்களாவது கிடைக்கும் என்று பல சாதிக் கட்சிகள் தோன்றும். அவர்கள் அரசை மிரட்டவே தங்கள் பலத்தைப் பயன்படுத்துவார்கள். அதனால், நிர்வாகம்தான் பாதிக்கும்," என்று எச்சரிக்கை விடுக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குஜராத் தேர்தலில் பாடிதார் இனத்தவர்களின் வாக்குகள் சிதறுவதில் ஹர்திக் படேலின் போராட்டம் முக்கிய பங்கு வகித்தது.

தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடத் தடை வேண்டும் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி இயங்கி வரும் 'அஸோசியேஷன் பாஃர் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்' (Association for Democratic Reforms) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அனில் வர்மா, "தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கும் விடயங்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும் உள்ளது. தற்போதைய தேர்தல் முறையில் அதிக வாக்காளர்களின் ஆதரவைப் பெறாத வேட்பளராக இருந்தாலும் தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் 10-12% வாக்குகளை மட்டுமே பெற்றாலும் வெற்றிபெறும் சூழ்நிலை உள்ளது. எனினும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வந்தால் சாதி மற்றும் மதக் கட்சிகள் அதிகரிக்கும் பிரச்சனை இருப்பதையும் நாம் புறந்தள்ள முடியாது," என்று பிபிசி தமிழிடம் கூறினார்.

"இந்த சிக்கலை சமாளிக்க வேண்டுமானால், பதிவாகும் வாக்குகளில் 50%த்துடன் கூடுதலாக ஒரு வாக்காவது பெரும் வேட்பாளர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட வேண்டும். எந்த வேட்பாளரும் 50%ஐ விடவும் அதிக வாக்குகளைப் பெறவில்லை என்றால், அத்தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

ஒருவேளை அவ்வளவு வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறாமல் பெரும்பாலான தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தும் நிலை உருவாகும் சிக்கல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, "வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மூலமே அந்நிலை உருவாவதைத் தவிர்க்க முடியும்," என்று கூறினார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களில், பதிவான வாக்குகளில் 40% முதல் 50% வரை பெற்று வென்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 235 என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்