தமிழ்த்தாய் வாழ்த்து: கருணாநிதி நிற்காதது போல விடியோ பதிவிட்ட எச். ராஜா

  • 25 ஜனவரி 2018
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்காத கருணாநிதி: காணொளியை வெளியிட்ட எச்.ராஜா படத்தின் காப்புரிமை Getty Images

காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காததும், அதற்கு காஞ்சி மடம் அளித்த விளக்கமும் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தாய் வாழ்த்துக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுந்து நிற்காததைப் போல காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.

ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா தொகுத்த தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமி அரங்கத்தில் கடந்த 22 ஆம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது மேடையில் உள்ள அனைவரும் எழுந்து நின்றபோது விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. ஆனால், நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் எழுந்துநின்றார். இந்த காட்சிகள் தொலைக் காட்சியில் வெளியானதை அடுத்து இது பெரும் விவகாரமாக வெடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த சங்கர மடம், ''சர்ச்சைக்குள்ளான அந்த நிகழ்ச்சி தனியார் நிகழ்ச்சி என்பதால், இறைவணக்கம்தான் போட்டிருக்கவேண்டும், ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துப் போட்டார்கள் என்று தெரியவில்லை'' என்றும், ''தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம், தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?'' என்றும் கூறியிருந்தது.

இப்பிரச்சனை குறித்து பா ஜ கவின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Twitter

இச்சூழலில், பா ஜ க தேசிய செயலாளர் எச். ராஜா இன்றைய தினம் (புதன்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்று கூறி காணொளி ஒன்றையும், புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

முதலாவதாக பதியப்பட்டுள்ள காணொளியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது கருணாநிதி அமர்ந்திருப்பது போன்றும், அடுத்ததாக பதியப்பட்டுள்ள புகைப்படத்தில் கருணாநிதி நின்றிருப்பது போன்றும் ராஜா வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே சமயம், வயோதிகத்தாலும், தமது உடல் இயலாமையாலும் எழுந்து நிற்காத கருணாநிதியை விஜயேந்திரரோடு ஒப்பிடுவதா என்று ராஜாவை பலர் சாடியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்