பத்மாவத் திரைப்படத்தை எதிர்க்கும் கர்ணீ சேனை அமைப்பின் முழுப் பின்னணி

இணையதள பயனாளிகள் 'கர்ணீ சேனா' என்ற வார்த்தையை 2017 ஜனவரி மாதம் வரை கூகுளில் அதிகம் தேடவில்லை. ஆனால் பத்மாவத் திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அந்த அமைப்பு, படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம் என்று அச்சுறுத்தல் வெளியிட்டபிறகு இணையதளங்களில் அதிகம் தேடப்பட்டது.

'கர்ணீ சேனை' என்றால் என்ன? அது பத்மாவத் திரைப்படத்தை ஏன் எதிர்க்கிறது? இதன் குறிக்கோள் என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதிலை அறிந்துக் கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் விருப்பம் அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரன்வீர் மற்றும் தீபிகா நடித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய "கோலியோன் கீ ராஸ்லீலா ராம்லீலா" படமும் பெரும் சர்ச்சைக்கு உள்ளது.

ஜெய்பூரில் ஒரு மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கின் முன் கூடியிருந்த மாணவர்களிடம் பேசி கர்ணீ சேனை பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சித்தோம்.

கர்ணீ சேனை என்பது ஒரு அரசியல் அமைப்பு இல்லை என்றாலும், அரசியல் கட்சிகள் இந்த அமைப்பின் பின்னணியில் இருக்கின்றன.

திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக சமூக ஊடங்களில் கர்ணீ சேனையின் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதை பார்த்த ராஜபுத்திர இளைஞர்களும், மாணவர்களும் அந்த திரையரங்கின் முன் கூடினார்கள்.

உணர்ச்சியை தூண்டும் பேச்சாலும், உற்சாகமூட்டும் வாதத்தாலும் இளைஞர் கூட்டத்தை கவர்ந்திழுத்து ராஜபுத்திர பரம்பரையின் பெருமைகளை எடுத்துரைக்கின்றனர் கர்ணீ சேனையினர். இளைஞர்களின் கண்களில் கோட்டைகளும், அரண்மனைகளும் நேரடியாக தோன்றும் அளவுக்கு கவர்ந்திழுக்கும் வார்த்தை ஜாலங்கள்!

படத்தின் காப்புரிமை PADMAAVAT/FACEBOOK
Image caption பத்மாவத் திரைப்படத்தில் ராணி பத்மாவதியாக நடித்த நடிகை தீபிகா படுகோணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது

இந்த இளைஞர் கூட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்த வாலிபர்களும் இருக்கின்றனர், கல்லூரியில், பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

ஜெய்பூரில் சட்டப்படிப்பு படிக்கும் மாணவர் தல்பத் சிங் தேவ்டா கூறுகிறார், "கர்ணீ சேனை ராஜபுத்திர வம்சத்தின் பெருமையை மட்டும் காக்கவில்லை, சமூகத்தின் நலன்களைப் பற்றியும் கவலையுடன் அணுகுகிறது. இன்று ராஜபுத்திர இளைஞர்கள் படித்து பட்டம் பெற்றாலும், வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இந்து பாரம்பரியத்தை பாதுகாக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டிருக்கிறது கர்ணீ சேனை."

இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் இருக்கவேண்டும் என சில ராஜபுத்திர இளைஞர்கள் கருதுகின்றனர். ஜெய்சல்மீரீல் வசிக்கும் திரிலோக் என்ற இளைஞரும் இந்த கூட்டத்தில் இணைந்து முழக்கமிடுகிறார்.

திரிலோக்கின் கருத்துப்படி, "ராஜபுத்திர சமூகத்தினர் இன்று கல்வி பயில்கின்றனர். ஆனால் இட ஒதுக்கீடு என்பது அவர்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக வழிமறிக்கிறது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை, அதை சீர்திருத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை".

படத்தின் காப்புரிமை Narayan Bareth
Image caption ஜெய்பூரில் ஒரு மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கின் முன் குழுமி போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

ஒரே செய்தியில் கூட்டம் கூடும் மாயம் என்ன?

ராஜபுத்திரர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பஹுல் மாவட்டத்தில் கர்ணீ சேனா தனது காலை வலுவாக ஊன்றிவிட்டது. இந்த அமைப்பின் ஒற்றை அழைப்பே இளைஞர்களை ஒன்றுதிரட்ட போதுமானதாக இருக்கிறது.

கர்ணீ சேனையின் உறுப்பினர் ஷேர் சிங் சொல்கிறார், "ஜெய்பூரில் எங்கள் அமைப்பு வலுவாக இருக்கிறது. அங்கு ஜோட்வாடா, காதீபுரா, வைஷாலி, முரளிபுரா போன்ற இடங்களில் ராஜபுத்திர சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். கர்ணீ சேனையின் செயல்பாடுகள் அண்மை காலங்களில் பரவாக்கப்படுகிறது, மாநிலத்திற்கு வெளியிலும் அமைப்பு வலுப்பெற்று வருகிறது."

பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையும் பேசிய ஒரு ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவரின் கருத்து இது, "அண்மைக் காலங்களில் வேலைக்காகவும், தொழிலுக்காகவும் நாட்டின் பிற மாநிலங்களுக்கு ராஜபுத்திரர்கள் செல்வது அதிகமாகியிருக்கிறது. வெளி மாநிலங்களில் வசிக்கும் ராஜபுத்திரர்களும் பத்மாவத் திரைப்படத்தை எதிர்ப்பதால், கர்ணீ சேனையின் உறுப்பினர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று பேசும்போது அங்கும் ஆதரவு கிடைக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர் மேலும் கூறுகிறார், "மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ராஜபுத்திரர்களின் சபை செயல்படுகிறது மற்றும் பிராந்திய இளைஞர் அமைப்பும் பல தசாப்தங்களாக செயல்படுகிறது. இருந்தபோதிலும், இவர்களிடம் இருந்து வேறுபாட்டு, மாறுபட்ட பாதையில் பயணிக்கும் கர்ணீ சேனை இளைஞர்களின் ஈர்ப்பு மையமாக திகழ்கிறது."

வேலையின்மையா பிரதான காரணம்?

தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பிபிசியிடம் பேசிய ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்த மற்றொருவர் இவ்வாறு கூறுகிறார், "சாதிய பெருமையை உணர்ச்சிகரமான விடயமாக எடுத்துக்கொண்டு வெளிப்படையாக வீதிகளில் இறங்கி போராடும் அமைப்பு கர்ணீ சேனை. இந்த வெளிப்படையான செயல்பாடும் போக்கும், சாதிய உணர்வுடைய இளைஞர்களை கவர்கிறது. தங்கள் பரம்பரையின் பெருமையை நவீன உலகிற்கு எடுத்துச் சொல்ல விரும்பும் இளைஞர்களின் முதல் தேர்வாக இந்த அமைப்பு இருக்கிறது".

"இது போன்ற எண்ணங்கள் இளைஞர்களிடம் பரவுவதற்கும், தாக்கம் செலுத்துவதற்கும் வேலையின்மை என்பது முக்கியமான காரணமாக இருக்கிறது. வேலை கிடைக்கும் இடத்திற்கு சிலர் நகர்ந்துவிட, இங்கேயே இருப்பவர்களிடம் அதிக நேரமும், குறைவான வேலையும் இருப்பதன் விளைவு? பரம்பரை பெருமையில் குளிர் காய்கிறார்கள். இந்துத்வா ஆதரவாளர்களும் கர்ணீ சேனைக்கும் அதன் கொள்கைகளுக்கும் ஆதரவு அளிக்கின்றனர்."

வளர்ச்சியும் விரிவாக்கமும் கர்ணீ சேனையை மூன்றாக பிரித்துவிட்டது. தாங்களே உண்மையான கர்ணீ சேனை என்று மூன்று பிரிவினருமே உரிமை கொண்டாடுகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்ரீ ராஜ்பூத் கர்ணீ சேனையின் தலைவர் லோகேந்திர கால்வீ

அசல் கர்ணீ சேனை எது?

கர்ணீ சேனையின் ஒரு பிரிவான ஸ்ரீ ராஜ்பூத் கர்ணீ சேனையின் தலைவர் லோகேந்திர கால்வீ. அஜீத் சிங் மாம்டோலியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்றொரு அமைப்பு ஸ்ரீ ராஜ்பூத் கர்ணீ சேவா சமிதி.

மூன்றாவது பிரீவான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்பூத் கர்னீ சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகாமேடி.

கர்ணீ சேனா அமைப்பை தொடங்கியவர் கால்வீ. எனவே அவரது அமைப்புதான் அசலானது மற்றவை நகலே என்கிறார் மஹிபால் சிங் மக்ரானா.

"எங்கள் அமைப்பு இளைஞர்களின் அமைப்பு. பிற அமைப்புகளில் முதியவர்களும், பழமையான ஆட்களும் இருக்கிறார்கள். மூன்று பிரிவுகளுக்குமே அலுவலகங்கள் இருக்கின்றன. பொருட்களும், பணமும் எங்கிருந்து கிடைக்கிறது?" என்கிறார் மக்ரானா.

"நிதியமோ நிதி மேலாண்மை செய்பவரோ இல்லை, அதோடு நாங்கள் நன்கொடைகளும் வசூலிப்பதில்லை. பரஸ்பர ஒத்துழைப்போடு அமைப்புடன் அமைப்பை நடத்துகிறோம்" என்கிறார் அவர்.

ஸ்ரீ கர்ணீ சேனா சமிதியின் அஜீத் சிங் மாம்டோலி சொல்கிறார், "11 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்ட எங்கள் அமைப்பே அடிப்படையானது. தேசிய ராஜ்பூத் கர்ணீ சேனையின் கோகாமேடி, பாரம்பரிய அடையாளங்களுடன், இந்துத்துவாவுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்புகிறார்."

அண்மையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவுடன் இணைந்து செயல்படுகிறார். கோகாமேடி பிரதமர் நரேந்திர மோடியையும் இலக்கு வைக்கிறார். இந்த அமைப்புகளை சேர்ந்த பெரும்பான்மையான தலைவர்கள் தொழிலதிபர்கள். அவர்களில் சிலர் ரியல் எஸ்டேட் தொழிலிலும், சிலர் சுரங்கத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்கள். சிலருக்கு எதிராக குற்ற வழக்குகளும் உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

இது பற்றி அவர் என்ன சொல்கிறார்? "அவர்களுக்கு எதிராக சில வழக்குகள் இருப்பது உண்மைதான். அதற்கு காரணமும் அவர்கள் இந்த விடயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். தவறேதும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புபவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படுவது இயல்பானதே" என்று பதிலுரைக்கிறார் அவர்.

"முதலில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக குரல் எழுப்பின. பிறகு பாரம்பரிய அடையாளம் தொடர்பான பிரச்சனைகளிலும் தலையிடத் தொடங்கினோம்" என்கிறார் கோகாமேடி.

மாம்டோலி சொல்கிறார், "ராஜபுத்திர வம்சத்தினர் தவறாக சித்தரிக்கப்படும்போது நாங்கள் களத்தில் இறங்குகிறோம். ஜோதா அக்பர் திரைப்படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தோம். கடந்த ஆண்டு போலிசாரால் ஆனந்த்பால் என்கவுண்டர் செய்யப்பட்டது, சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படம் ஆகியவை எங்களை உலகிற்கு அடையாளம் காட்டியது."

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரன்வீர் மற்றும் தீபிகா நடித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய "கோலியோன் கீ ராஸ்லீலா ராம்லீலா" படமும் பெரும் சர்ச்சைக்கு உள்ளது.

தேசிய ராஜபுத்திர கர்ணீ சேனாவின் கோகாமேடி சொல்கிறார், "எங்கள் சமூகத்தினருக்கு அநீதி நடைபெறும்போது அரசியல்ரீதியாக அதற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் கர்ணீ சேனா குரல் எழுப்ப முன்வருகிறது. மாறிவரும் நிலைமைகளை பார்த்து ராஜபுத்திர சமூகத்தினருக்கு கவலை ஏற்பட்டுள்ளது."

அரசியல் நோக்கர்கள் இவ்வாறு கருதுகின்றனர், தேர்தல் ஆதாயங்களும், ஆட்சி அதிகாரத்தையுமே கொண்ட அரசியல்வாதிகள் இதுபோன்ற சாதிய அமைப்புகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். சாதிய அமைப்புகள் மழைக்காளான் போல் அவ்வப்போது முளைத்தெழுவதற்கும் இதுவே காரணம் என்றும் அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :