“மக்களை திசை திருப்பவே மதம் சார்ந்த பிரச்சனைகள் பயன்படுகின்றன”

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தமிழை அவமதித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER

விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்ற விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? ஆண்டாள் விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டதால் தற்போது இப்பிரச்சனையும் பெரிதுபடுத்தப்படுகிறதா?

இந்த கேள்வியை பிபிசி தமிழின் “வாதம் விவாதம்“ பகுதியில் சமூக வலைதளங்களில் பதிவிட நேயர்களிடம்கேட்டிருந்தோம்.

அவர் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்களில் பதவிட்ட கருத்துக்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.

அப்துல் கலாம் ஆசாத் என்கிற நேயர், "இந்தியாவில் தற்போது உள்ள சூழ்நிலையில் காவி நிற ஆடையை உடுத்திய எவரும் எந்த தவறையும் செய்யலாம், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏனெனில் இது அவர்களின் ஆட்சி," என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

"வைரமுத்துவோ, ஜெயந்திரரோ, யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே. நாம் ஒரு கண்டனத்தோடு நகர்ந்து விட வேண்டும். இந்த பிரச்சனைகளை விட, நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நாம் நமது நேரத்தையம், சக்தியையும் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்," என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியம்

பூவிழி சிவின் என்பவர், "பெற்ற தாயும், தாய் மொழியும் ஒன்றுதான். இது தமிழர்களின் குருதியில் கலந்தது... அதற்கடுத்துதான் இந்த சாதி மதம் எல்லாம்," என்று ஃபேஸ்புக்கில் கருத்து எழுதியுள்ளார்.

சக்தி சரவணன் என்கிற நேயர், "தியானம், ஒருவர் சுற்றமும் தன்னையும் மறந்து தன் மனதை ஒருமுகப்படுத்தும் ஒழுக்கம் அல்லது வழக்கம் என்பது அவருடைய தனிப்பட்ட செயல், அதை அவர் பலர் கூடியிருக்கும் சபையின் மேடையில் ஓர் தனி மேடையிட்டு செய்வது சபைக்குரிய மரியாதையை மீறும் செயல் என்பதைக் காட்டிலும் பாகுபாட்டையும், தீண்டாமையையும் நியாயப்படுத்தும் விதமாகவே இருக்கிறது," என்கிறார்.

தமிழ் தாய்க்கு தலை வணங்காதவர் யாராயிருந்தாலும் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்பது ஸ்ரீவிசன் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை தரும் வேளையில் இவர் மட்டும் அமர்ந்திருப்பது என்ன வகையான நாகரிகம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள இளந்தென்றல்.

சூரிய பிரகாஷ் என்பவரோ, ஆண்டாள் விடயத்தையும் விஜயந்திரரின் நிகழ்வையும் சம்மந்தபடுத்த வேண்டாம். ஆண்டாள் பிரச்சனை தெய்வ நம்பிக்கை. விஜயேந்திரர் செய்தது ஒட்டு மொத்த தமிழனின் பிரச்சனை. ஆக இரண்டையும் சம்பந்த வேண்டாம். அது வேறு இதுவேறு என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் தமிழ்தாய்வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்!! என்று நெப்போலியன் டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.

பாரிதாசன் சேதுராமன் என்கிற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ஜெயேந்திரர் செய்தது தவறு தான்,அந்த மடத்தின் விளக்கத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை, ஆனால் அதை தட்டி கேட்க இந்தியாவுக்கு எதிராகவும் தேசிய கொடிக்கு எதிராகவும் பேசியவர்களுக்கு தகுதி இல்லை என்கிறார்.

மணி பழனிசாமியோ, அனுதினம் ஒரு மதம் சார்ந்த பிரச்சனைகளை கிளப்பி விட்டு கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு, லஞ்சம் ஊழல் முறைகேடுகளில் இருந்து மக்களை திசை திருப்பவே மதம் சார்ந்த பிரச்சனைகளை பிரமாதமாக கையாளுகின்றனர் என்கிறார்.

சபை நாகரிகம் கருதியாவது உரிய மரியாதை செலுத்தி இருக்க வேண்டும் என்பது தங்க மாரியப்பனின் டுவிட்டர் பதிவு தெரிவிக்கிறது.

சமஸ்கிருதம் போல் செத்துப்போகாத தமிழ் மொழியே உன்னை வியந்து வாழ்த்துகிறோம் என்று பாடினால் எப்படி எழுந்து நிப்பார்? என்று கேள்விக்கணை தொடுத்து ஃபேஸ்புக் பதிவிட்டுள்ளார் சுதர்சன் வெங்கடாசலம்.

கோ. கார்த்திக் பாரதி என்ற நேயர், இதனை ஏற்க இயலாது, விஜயேந்திரன் தியானத்தில் இருந்தார் என்பதைக் கடந்து, தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கும் மரபு இல்லையென அறிக்கை வெளியிட்டு. தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா? என நாளுக்கு நாள் பிரச்சினையை தூண்டி வளர்த்தி பெரிதுபடுத்தி வருவது சங்கர மடந்தானே என்று கருத்து கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

முத்துசெல்வன் பிரேம் என்பவர், "மரியாதை என்பது இதயத்தில் இருந்தால் போதும். சாமானியர்கள் வாழ்க்கை நடைமுறைக்கு அப்பாற்பட்டவர்கள் சாமியார்கள். இவர்கள் மீது கட்டுபாடுகள் விதிப்பது சரியல்ல," என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

இதை ஒரு போதும் தமிழ் கூறும் நல்லுலகம் மன்னிக்காது என்று பெருமாள் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

"கோவில்களிலோ, மடங்களிலோ தியானம் செய்வதுதான் வழக்கம். ஒரு குறிப்பிட்ட விழா மேடையில், அமர்ந்துகொண்டு தியானம் செய்தார் என்பது... செய்த குற்றத்தை மறைக்கச்சொல்லப்படும் பொய்க்காரணம் இது," என்று கூறியுள்ளார் குலாம் மொகைதீன்.

ஷேக் ஜமுனா கான் என்ற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், "தியானத்தில் இருந்தார் என்பது ஏற்கத்தகுந்தது அல்ல. தமிழ் தாய் வாழ்த்தை புறக்கணிப்பது என்பது அவரின் எண்ணம். மத்திய ஆளும் அரசு தமிழ் நாட்டை புறக்கணிக்கிறது. எல்லாம் ஒன்று தான்," என்கிறார்.

விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்பது ஏற்புடையதல்ல என்று டுவிட் செய்துள்ளார் எஸ். சுப்பிரமணியன்.

"நாங்கள் தமிழர்களை விட உயர்வான ஆரியன் என்ற இன மற்றும் ஆணவ சாதி உணர்வின் வெளிப்பாடு," என்று கார்த்திக் குமார் கூறியுள்ளார்.

"ஏற்று கொள்ளமுடியாது.அப்படியே ஏற்று கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தால் கூட இது தியானம் செய்யும் இடம் இல்லை," என்பது ராஜேஷ் குமாரின் வாதமாக உள்ளது.

தீபன் தேவ் என்ற நேயர், "இது தான் ஹிந்துத்துவ ஆரிய சிந்தனை. தமிழர்களுக்கும் தமிழ் தாய்க்கும் சங்கர மடத்திற்கும் என்ன தொடர்பு," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசபக்தி இல்லாதவன் எப்படி ஆன்மீகவாதி ஆக முடியும்? என்பது செந்தில் முன்வைக்கும் கேள்வியாகும்.

வசந்து குமார் என்ற நேயர், "பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர் தியானத்தில் ஆழ்ந்தது அவசியம் அற்ற செயல்" என்று ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஷாகுல் பயான் என்பவர், "தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானம் என்று கூறுவது முற்றிலும் தமிழ் புறக்கணிப்பு," என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மரியாதை செய்யாததை ஏற்றுக்கொண்டாலும் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என்பது அனந்தா நாராயணனின் கருத்தாகும்.

ஹார்ஸினி அன்னராஜா என்ற பிபிசி தமிழ் நேயர், தமிழ் தாய் வாழ்த்துக்கும் சாமிக்கும் ஏன் முடிச்சு. எழுந்து நிக்கிறவங்க எல்லாம் தமிழுக்கு மரியாதை குடுக்கிறாங்களா என்ன? என்று பொதுவான கேள்வியை கேட்டுள்ளார்.

ஆர்த்தி என்பவரோ, இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. அகம்பாவத்தின் உச்ச கட்ட நிராகரிப்பு என்று கருத்து கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்