வாதம் விவாதம்: ''இதே வீரத்தை அரசியல்வாதியின் கார் ஓட்டுநர்களிடம் காட்ட முடியுமா?''

''இதே வீரத்தை அரசியல்வாதியின் ஓட்டுநர்களிடம் காட்ட முடியுமா?'' படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் போலீசார் திட்டி, அடித்ததால் கார் ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளித்து இறந்துபோனார்.

இந்நிலையில், ''ஓட்டுநர்களிடம் போலீசார் மோசமாக நடந்துகொள்வதற்கு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிதமிஞ்சிய அதிகாரம் காரணமா? மிதமிஞ்சிய பணிச்சுமையால் ஏற்படும் அழுத்தம் காரணமா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே.

''கால் டாக்ஸி ஓட்டுநரிடம் காட்டிய வீரத்தை அரசியல்வாதியின் ஓட்டுநர்களிடம் காட்ட முடியுமா… முதலில் நிறுத்த முடியுமா'' என கேள்வி எழுப்பியுள்ளார் சிவா எனும் நேயர்.

''போலீஸ் வேலை என்பது எவ்வளவு மன அழுத்தம் நிறைந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு சின்ன விஷயம், சீட் பெல்ட்டை போட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்லை. அதற்காக போலீஸ் லிமிட் தாண்டியதும் தவறு.'' என பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

''யோசிக்காமல் ஆத்திரத்தில் எடுத்த முடிவு.பாவம் அந்த ஓட்டுநரை நம்பி எத்தனை உயிர்கள் வாழுகின்றதோ தெரியவில்லை. யாருக்காகவோ எதற்காகவோ ஆத்திரப்படுவது நமக்குத்தான் இழப்பு. ஒரு விடயத்தைச் செய்யும் முன் அதில் உள்ள நன்மை தீமைகளை யோசிக்க வேண்டும். ஆத்திரத்தில் எடுக்கும் எந்த முடிவும்.சரியாக இருக்காது'' என கூறியுள்ளார் தாமரை செல்வி.

''காவலர்கள் பணியை மதிக்கிறோம். ஆனால் இதே வேலை சில அதிகாரிகளால் ஒட்டு மொத்தமாகக் காவல் துறையினரை வெறுக்க வேண்டியுள்ளது. ஏன் இவர்களால் சாதாரண கவுன்சிலரைக்கூட கேள்வி கேட்க முடியவில்லை. இவர்களின் அதிகாரம் அரசியல்வாதிகளிடம் செல்லாக்காசு. சாதாரண மக்களிடம்தான் இவர்களின் அதிகாரம். பணபலம் படைத்தவர் அரசியல்வாதிகளிடம் இவர்களின் அதிகாரம் என்னவாகிறது.'' என கூறியுள்ளார் கரிசல் ராஜா.

''இரண்டுமே இல்லை. அப்படி இருந்தால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்ளவில்லை. மக்கள் நலம் விரும்பும் ஆட்சியாளர்கள் இருந்தால் இப்படிப்பட்ட போலிஸ்காரா்கள் வரமாட்டார்கள்.'' என்கிறார் சந்தோஷ் குமார்.

''மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.'' என்பது ஹரி எனும் நேயரின் கருத்து.

''அதிகார திமிர். மக்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறை அதிகாரிகள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை மக்களின் மீது காட்டுவது மோசமான செயல் ஆகும்.காவல்துறை மக்களின் காவலாளிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.'' என்கிறார் ரமேஷ்.

''மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகளும், காவல்துறையும் அந்த மக்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பிரச்சனை என்றால் மற்றவர்களும் அதை தட்டிக்கேட்க வேண்டும்.'' என பதிவிட்டுள்ளார் வெங்கடேசன்.

''வாகனம் ஓட்டுபவர்கள் விதிமுறைகளைச் சரியாக கடைப்பிடித்தால் எந்த காவலரும் நம்மை எதுவும் செய்துவிட போவதில்லை. அவர்களுக்கும் வேலை சுலபம். நாமே விதி மீறல் செய்யும்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்கள் கடமை. மடியில் கணமில்லை என்றால் வழியில் பயம் ஏன்.'' என்பது பாலசுப்ரமணியன் ஸ்ரீராமலு எனும் நேயரின் கருத்து.

''மிதமிஞ்சிய அதிகாரம்தான் காரணம். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மனிதாபிமானமுள்ளவர்களும் இருக்கிறார்கள்'' என்கிறார் சிவக்குமார்.

''மனித நேயம் மறைந்து போய் விட்டதா காவல் துறையில்,மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை இன்று பல உயிர்களை அழித்துக் கொண்டு இருப்பது என்பது வேதனையான விஷயம்,'' என தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார் புலிவலம் பாஷா.

''மக்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசியல்வாதிகளின் கைக்கூலியாக செயல்படுவதை இனிமேலாவது தவிர்த்து கொள்ளலாம்'' என்கிறார் முரளி தேவி.

''பணிச்சுமை என்பதெல்லாம் சப்பைக்கட்டு. மிதமிஞ்சிய அதிகாரம் என்பதுதான் சரி,'' என்கிறார் அம்மா எனும் பெயரின் இயங்கும் நேயர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்