"நமக்குள் சண்டை வருதான்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க": ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் படத்தின் காப்புரிமை Getty Images

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தான் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாகவும் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, தமது ரசிகர்களை ஒருங்கிணைக்க இணையதளத்தையும் தொடங்கினார். அந்த இணையதளத்தின் மூலமாக உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்து வருகிறது.

அரசியல் மாற்றம் வேண்டும்

இந்த சூழ்நிலையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அதில் அவர், "ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய நோக்கம். இது கடினமான வேலை. ஆனா ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கங்க, நாம ஒற்றுமையா, ஒழுக்கமா, கட்டுபாடா இருந்தா நாம் என்ன வேணும்னாலும் சாதிக்கலாம். நம் இதயத்தை, நம் எண்ணங்களை தூய்மையாக வச்சுக்கணும். இது பொதுநலம், சுயநலம் கிடையாது. நாம் எதையும் எதிர்பார்க்காம மக்களுக்கு நல்லது செய்யணும். மற்ற மாநிலங்கள் நம்மை பார்க்கும் வகையில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்."

படத்தின் காப்புரிமை Getty Images

மனஸ்தாபம்

மேலும் அவர், "இது ஆண்டவன் நமக்கு வழங்கி உள்ள வாய்ப்பு. இதை சரியா நாம் பயன்படுத்திக்கணும். முதலில் உங்கள் குடும்பத்தை கவனிக்கணும், அதைவிட்டுட்டு பொதுகாரியத்துக்கு வாங்கன்னு நான் சொல்ல மாட்டேன். பதவிக்காக பொறாமை இருக்கக் கூடாது. நமக்குள் சண்டை வருதா... மனஸ்தாபம் வருதான்னு எல்லோரும் பார்த்துகிட்டு இருக்காங்க. அதுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது" என்றார்.

ஒத்துழைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை மட்டும்தான் அரசியலில் தன்னுடன் இணைந்து பணியாற்றுபவர்களிடம் தாம் எதிர்பார்ப்பதாக ரஜினி அந்த வீடியோ பதிவில் கூறி உள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்