75-ஆவது சுதந்திர தினம்: இந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்?

  • ராஜீவ் ரஞ்சன் கிரி
  • உதவி பேராசிரியர், தில்லி பல்கலைக்கழகம்
காந்தி

பட மூலாதாரம், Central Press/Getty Images

(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

1947, ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாட்டின் முதல் பிரதமர் நேரு "விதியுடன் ஒரு சந்திப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆனால் சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்னரே ஒன்றிணைந்த இந்தியாவிற்கு "விதியுடன் பல போராட்டங்கள்" தொடங்கிவிட்டன.

நாடு விடுதலை பெறுவது உறுதியான நிலையில், சுதந்திரத்திற்கான வேட்கை பலருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய அதே நேரத்தில் சிலருக்கு அது தொடர்பான கவலைகளும் நடைமுறை சிக்கல்களும் அழுத்தங்களை ஏற்படுத்தின. 

நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் விடுதலை வேள்வியில் பலரின் உயிர்கள் ஆகுதியாக்கப்பட்டு, பல்வேறுவிதமான தியாகங்களுக்கு பின்னர் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை அடையப்போகிறது. என்று தணியுமோ இந்த சுதந்திரத் தாகம் என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு பிரிவினை என்பது தற்போது எட்டிக்காயாய் கசந்தது.

பங்காளிகள் பகையாளிகளானால்

சுதந்திர வேட்கை தணியும் என்ற ஆவல் நிறைவேறினாலும், அது நினைத்தபடி இல்லாமல் பிரிவினைத் தீயாக தகிக்கத் தொடங்கியது. காட்டுத்தீயாக பரவிய அது, பெருத்த சேதங்களையும், நீங்கா வடுக்களையும் ஏற்படுத்தி, இந்தியர்களாக இருந்தவர்களை இந்தியர்கள்-பாகிஸ்தானியர்கள் என பங்காளிகளாக மட்டுமல்ல பகையாளிகளாகவும் மாற்றியது.   

அதிகாரம் கைமாறுவது சிலருக்கு சுயராஜ்ஜியம் என்ற லட்சியத்தை எட்டிவிட்ட மகிழ்ச்சியை கொடுக்க, 'தேசத்தந்தை' மகாத்மா காந்தியோ பிரிவினையின் பிரச்சனைகளால் ஆயாசம் அடைந்தார். 

பட மூலாதாரம், Keystone/Getty images

இந்தியா என்ற கூட்டு குடும்பத்தின் 78 வயது தந்தை, பல்வேறு சரித்திர நிகழ்வுகளுக்கும் சாட்சியாக இருந்தார்.  சிறந்த அறிவாளியான அவர், மனதளவில்  ஏற்கனவே பக்குவப்பட்டவர், ஆத்ம வலிமையும் மனோபலமும் கொண்டவர் என்றாலும், வயது அவரது உடலை பலவீனப்படுத்தியிருந்தது.

உடலின் பலவீனம், வலிமையான மனதுடன் இயைந்து செயல்பட மறுத்தது.  அவரது திடச்சித்தமும், எதிரே நின்ற மாபெரும் சவாலும் உடலின் பலவீனத்தை எற்றுக்கொள்ள மறுத்தன. எனவேதான் அவர் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பித்த தனது யாத்திரையை 1948 ஜனவரி வரை தொடர்ந்தார்.    

பிரிவினையின் பாதிப்பு

பிரிவினையின் பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு சென்ற காந்தி, மக்களின் துக்கத்தை பகிர்ந்துக்கொண்டார்.  பிரார்த்தனை மற்றும் ஆதரவான பேச்சுக்களின் மூலம் கொளுந்துவிட்டு எரிந்த பிரிவினை தீயின் தாக்கத்தை மட்டுப்படுத்த முயற்சித்தார். 

எதிர்காலத்தில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான வழிமுறைகளை சிந்தித்தார்.  மதவெறி மற்றும் கடும்போக்கில் இருந்து விலகி மனிதாபிமான பாதையை மக்கள் பின்பற்றவேண்டும் என்று செல்லும் இடமெல்லாம் போதித்தார்.

அவரை நேரடியாக வரச்சொல்லி அழைப்பு வந்த இடங்களுக்கெல்லாம் செல்ல விரும்பிய அவரின் மனோவேகத்திற்கு ஈடுகொடுக்காமல் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியது அவரது வயது. எனவே ஓரிடத்தில் போய் இருந்து, அங்கிருந்து அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு சமாதான செய்திகளை அனுப்பினார்.  தனது சார்பில் பிரதிநிதிகளை அனுப்பினார்.

பட மூலாதாரம், Douglas Miller/getty images

நேரடியாக வந்த மக்களை சந்தித்தார் காந்தி.   மகாத்மாவின் விருப்பத்திற்கு கட்டுப்படாமல், கட்டுக்கடங்காமல் அகோர உருவெடுத்தது பிரிவினையின் கொடூரங்கள்.  பரந்து விரிந்திருந்த பாரதத்தின் பிரிவினையின் பாரமும் கனமான ஒன்றாக இருந்தது.

கராச்சியின் கலவரம் பிகாரில் பிரதிபலித்தால், நவகாளியின் வன்முறைகளை கொல்கத்தா எதிரொலித்தது.  பேரழிவு பல பக்கங்களிலும் பரவி பேரிடரை ஏற்படுத்தியது.  சுதந்திர தாகம் கொண்டு ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட விடுதலை என்ற அருமருந்து, பிரிவினை என்ற தீயாய் தகித்தது.

தீயிட தூண்டியவர்கள், தீயை மூட்டியவர்கள், தீயால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினரும் காந்தியிடம் வந்து நின்றார்கள்.  ஏனெனில் அனைத்து தரப்பினருக்கும் காந்தியிடம் இருந்த எதிர்ப்பார்ப்புகள் ஏராளம்.  தந்தையிடம்தானே முறையிட முடியும்?

எரிக்கப்பட்டது இந்துவாக இருந்தாலும், தீயில் மடிந்தது இஸ்லாமியராக இருந்தாலும் சிதைக்கப்பட்டது சீக்கியராக  இருந்தாலும், காந்தியின் மனம் வெந்து வெம்பியது.  வன்முறையை  தனது சொந்த தோல்வியாகவே கருதி வெதும்பினார் காந்தி. 

சுதந்திரம் களிப்பை கொடுக்கும் என்று காந்தி கண்ட கனவு நனவானபோது அதன் வடிவத்தை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

வாமனனைப் போல இரண்டு-மூன்று அடிகளில் நாட்டை அளந்துவிடமுடியும் என்று நம்பினார் காந்தி.  ஆனால் நாடு இரண்டானதுதான் மிச்சம்,  மூன்றாவது அடி அவரின் உடலிலேயே குண்டாக பாய்ந்தது. நாட்டை அளவிட முடியாமல் அழுதது காந்திதான். இதுதான் காந்தியின் "விதியுடன் ஒரு போராட்டம்".

ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி இரவு, இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றதை கொண்டாட தலைநகர் தில்லி தீபங்களால் ஒளிர்ந்தது. அந்த கண்கொள்ளா காட்சியைக்காண காந்தி அங்கில்லை.  மூன்று தசாப்தங்களாக விடுதலைக்கான கொள்கைகளையும், வழிமுறைகளையும் வகுத்து அவற்றை செயல்படுத்தி, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த மகாத்மாகாந்தி சுதந்திரத்தின் போது எங்கு இருந்தார்?

வன்முறை கொடுமைகள் தலைவிரித்தாடிய நவகாளிக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தார் காந்தி.   அங்கு சிறுபான்மை இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் 'நவகாளி படுகொலைகள்' என்றே சரிந்திரத்தில் கரும்புள்ளியாக இடம் பெற்றிருக்கின்றன. நவகாளியில் கோர தண்டவமாடிய வன்முறைத் தீயைத் தணிக்க காந்தி அங்கே இருக்க வேண்டியது அவசியம் என்று கருதினார்.  கல்கத்தாவில் முஸ்லிம்களை அநாதரவாக விட்டுவிட்டு தலைநகரில் சுதந்திர கொண்டாட்டத்திற்காக செல்ல முடியுமா? 

சிறுபான்மையினரின் பாதுகாப்பே தனது மதம் என்று கருதினார் காந்தி.  அதை நிரூபிக்கும் விதமாக சிறுபான்மையினரின் உயிர்களையும், அவர்களின் உரிமைகளையும், உடமைகளையும் காப்பாற்ற தார்மீக ரீதியாக செயல்பட்டார்.

கல்கத்தாவில் காந்தி எங்கு வேண்டுமானாலும் தங்கியிருக்கலாம்.  ஆனால் வன்முறையால் பாதிக்கபப்ட்ட மக்கள் இருக்கும் இடத்தில் வசிப்பதையே காந்தி தேர்ந்தெடுத்தார்.  தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் வாழ்ந்த 'ஹைதரி மஹல்' என்ற இடத்தில் தங்க முடிவு செய்தார் காந்தி.  இந்த இடத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக வசித்து வந்தார்கள். 

அங்கே ஒரு கால்வாய் அருகில் இருந்த மியான் பாகன் என்ற முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதியில் வன்முறை வெடித்தது, சூறையாடப்பட்டது.  அவர்களது துயரத்தை சொல்லக்கூட அங்கு யாரும் இருக்கவில்லை என்பது மாபெரும் துயரம்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹைதரி மஹலில் காந்தி தங்க முடிவு செய்தார்.  அதே இடத்தில் தான் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கப் போவதாக காந்தி தெரிவித்தார்.  ஒரு வருடத்திற்கு முன்பு இதே இடத்தில்தான் 'நேரடி நடவடிக்கை'  (Direct Action Day) போது, நூற்றுக்கணக்கான இந்துக்களை கொன்ற இஸ்லாமியர்கள், ஆயிரக்கணக்கானவர்களின் குடியிருப்புகளை சூறையாடி கொளுத்தினார்கள்.

பட மூலாதாரம், Keystone/getty images

இந்துக்களை வெறுத்து சூறையாடிய அந்த 'நேரடி நடவடிக்கை' களை இஸ்லாமியர்களுக்கு மறைமுகமாக நினைவுபடுத்தி, அன்று விதைத்த விதையே இன்று தங்களுக்கு வினையாக மாறியிருக்கிறது என்பதை உணர்த்தவே காந்தி இந்த முடிவை எடுத்தார்.

மேலும்,  கல்கத்தா முஸ்லிம் லீக்கை சேர்ந்த கடும்போக்கு தலைவர், நவகாளியில் இருக்கும் தங்கள் இன மக்களுக்கு தந்தி அனுப்பி, அங்குள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும், முஸ்லிம் லீகின் தொண்டர்களை அனுப்பி அங்கு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

காந்தியின் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  ஆனால் இந்து மகாசபை இளைஞர்களின் சீற்றம் அடங்கவில்லை.  காந்தி முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர்கள் கருதினார்கள். எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டபோது வராத நீங்கள் இப்போது முஸ்லிம்களை பாதுகாக்க வந்தது ஏன் என்று சினந்தார்கள்.

இந்துக்கள் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் இடத்திற்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பி, காந்தியை 'இந்துக்களின் எதிரி' என்று முத்திரை குத்தினார்கள்.

பிறப்பாலும், வாழ்க்கை முறையாலும், மத நம்பிக்கையாலும் கொள்கையாலும் முழுமையான இந்துவாக வாழ்ந்த காந்தி, தன்மீதான இந்த குற்றச்சாட்டுகளால் மீளாத்துயரில் ஆழ்ந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் பதினைந்தாம் நாளை 'மாபெரும் நிகழ்வு' என்று கருதிய காந்தி, 'உபவாசம், பிரார்த்தனை மற்றும் பிராயச்சித்தம்' மூலம் மக்கள் விடுதலையை வரவேற்க வேண்டும், கொண்டாடவேண்டும் என்று விரும்பினார்.  தான் அறிவுறுத்தியது போலவே சுதந்திர தினத்தன்று நோன்பிருந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டு பிராயச்சித்தம் செய்தார்.

கல்கத்தாவில் கலகத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் வெற்றிபெற்றார் காந்தி.  அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியது.  மகாத்மாவின் அறிவுறுத்தல்களால், ராணுவ சக்தியால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

'ஒற்றை வீரர்'

இந்தியாவின் கடைசி வைஸ்ராயாகவும், முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்த மவுண்ட்பேட்டன், காந்தியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். 'பஞ்சாபில் 55 ஆயிரம் வீரர்கள் இருந்தாலும் கலகங்களை கட்டுப்படுத்த முடியவில்லை, ஆனால் வங்காளத்தில் எங்கள் ராணுவத்தின் 'ஒற்றை வீரர்' கலவரத்தை கட்டுப்படுத்தி சமாதானத்திற்கு வித்திட்டார்' என்று காந்திக்கு அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டிருந்தார் மவுண்ட் பேட்டன்.

நவகாளி யாத்திரையின்போது காந்தி கல்கத்தாவில் சில நாட்கள் தங்கியிருந்தார்.  பிரிவினைத் தீயால் அடங்காமல் கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த கல்கத்தா அவரை அங்கிருந்து கிளம்ப விடவில்லை. கல்கத்தா கலவரத்தீயின் தீவிரத்தை மட்டுப்படுத்தும் அருமருந்தாய் செயல்பட்டார்.

ஒரு வருடத்திற்கு முன்பு கலவர பூமியாக திகழ்ந்த கல்கத்தா தற்போது கலவரத்தின் பிடியில் இருந்து விடுதலையானது.  மக்களின் அமைதிக்கான உறுதிமொழி இயல்புநிலை திரும்புவதற்கு உத்தரவாதம் அளித்தது.  வியப்பின் உச்சமாக கடும்போக்கு இந்து இளைஞர்களும் பரிகாரம் செய்தனர்.

இப்போது தலைநகரில் பிரிவினை பூதம் ஆட்டிப்படைத்தது. காந்தியை தலைநகர் டெல்லி வரச்சொல்லி கட்டாயப்படுத்தியது கலவரம். அதை அடக்குவதற்காக காந்தி கல்கத்தாவில் இருந்து தலைநகர் திரும்பவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 

1947 செப்டம்பர் ஒன்பதாம் நாளன்று காலை காந்தி டெல்லி வந்தடைந்தார். பேலூர் வழியாக வந்த ரயில் மூலம் டெல்லி வரும்போதே நிலைமையின் தீவிரத்தை காந்தி உணர்ந்தார்.  அசாதாரண அமைதி அவரின் அச்சத்தை அதிகரித்தது.

அனைத்து செயல்பாடுகளும் தறிகெட்டு போயிருந்தன.  காந்தியை அழைத்துச் செல்ல ரயில் நிலையத்திற்கு வந்திருந்த சர்தார் படேலின் முகம் இறுகிக்கிடந்தது.   கடினமான போராட்ட நாட்களில் கூட புன்சிரிப்பு தவழும் படேலின் முகம் இரும்பாக இறுகிப் போயிருந்தது. விரக்தியுடன் நின்ற அவருடன், காந்தியை பார்க்க ஏங்கிக்கிடக்கும் வேறு யாருமே வரவில்லை.  அதுவே நிலைமையின் தீவிரத்தை உணர்த்தி கவலையை அதிகரிக்கச் செய்தது.  காரில் ஏறி அமர்ந்தவுடன் காந்தியிடம் கவலைகளை கொட்டித்தீர்த்தார் படேல்.  ஐந்து நாட்களாக தலைவிரித்தாடிய கலவரம் தலைநகரை தலைகுனியச் செய்த கவலைகள் அவை.

காந்தி வழக்கமாக தங்கும் வால்மீகி குடியிருப்புக்கு அவர் அழைத்துச் செல்லப்படாமல் பிர்லா பவனில் தங்கவைக்கப்பட்டார்.  பிரதமர் நேருவும் அங்கே வந்து சேர்ந்தார்.  ரோஜாவைப் போல் மலர்ந்த முகத்துடன் காணப்படும் நேருவின் முகம் வாடிப்போயிருந்தது.  சினத்தில் சினந்திருந்த அவரது முகத்தில் கலவரங்கள் கவலை ரேகைகளை ஏற்படுத்தியிருந்தன. 'பாபு'விடம் ஒரே மூச்சில் கலவரக் கவலைகள் அனைத்தையும் கொட்டித் தீர்த்தார் பிரதமர்.

பட மூலாதாரம், Keystone/getty images

வன்முறை, கலவரம், கொள்ளை, சூறையாடல், படுகொலை, ஊரடங்கு உத்தரவு என தலைநகரின் தலையாய பிரச்சனைகளை பட்டியலிட்டார் நேரு. உணவு பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களின் நிர்கதி, மக்களின் மனதை மரத்துப் போகச்செய்தது.  

தலைநகரில் இப்படி என்றால் பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களின் நலனை பாதுகாப்பது எப்படி?

உங்கள் குடிமக்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று தற்போது அண்டை நாடான பாகிஸ்தானிடம் அதன் மூல நாடான இந்தியா எப்படி சொல்வது?  

இந்து-முஸ்லிம் என்று பாகுபாடு பாராமல் அனைவருக்கும் ஒன்றாக கருதி பணியாற்றியவர்களும் முஸ்லிம்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு தப்பவில்லை என்று பிரபல மருத்துவர் டாக்டர் ஜோஷி குறிப்பிட்டார்.

சமாதானத்திற்கான அனைத்து முயற்சிகளையும் அரசுடன் இணைந்து காந்தியும் மேற்கொண்டார்.  அதோடு பிரார்த்தனை கூட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தார்.  தினசரி பிரார்த்தனைக் கூட்டத்தில் சமாதானத்தை வலியுறுத்தினார், வானொலியில் உரையாற்றினார்.

ஆனால் அவரது முயற்சிகள் கலவரத்தீயை அணைக்க போதுமானதா என்பது கேள்விக்குறியானது.

பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் எண்ணிக்கை குறையவில்லை.  பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்திற்கு ரத்தம் என்று வெறி கொண்டனர்.  வெறியின் முன் சமாதனமோ, நியாய தர்மங்களோ எடுபடவில்லை.

கலவரத்தின் களத்தில் நின்ற அப்பாவிகளும், வன்முறையாளர்களும் காந்தியின் சமாதானப் பேச்சை வெட்டிப்பேச்சாகவே நினைத்தார்கள். 

பாகிஸ்தானுக்கு காந்தி அளித்த தார்மீக அழுத்தம் அவர்களுக்கு புரியவில்லை.  மக்களை பாதுகாப்பதாக ஜின்னா அளித்த வாக்குறுதிகளை காந்தி நினைவூட்டினார்.

பட மூலாதாரம், Getty Images

ஜின்னாவிற்கு அவரது வாக்குறுதிகளை நினைவூட்டிய காந்தி, இந்தியாவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்திய அரசை வலியுறுத்தினார்.  சமாதானத்திற்கான திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்தினார் காந்தி. ஜனவரி மாத நடுக்கும் குளிர் மக்களின் உடலை விரைத்து போக செய்திருந்தால், மனிதர்களின் மனமோ வன்முறைகளை பார்த்து அனுபவித்து துன்பத்தால் உறைந்து போயிருந்தது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று காந்தி உறுதியாக நம்பினார். பிரிவினையின் போது இரு நாடுகளுக்கும் சொத்துக்கள் பிரிக்கப்பட்டபோது, பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 75 கோடி ரூபாயில் 20 கோடி ரூபாய் முதல் தவணையாக  கொடுக்கப்பட்ட நிலையில், நிலுவைத் தொகையான 55 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று காந்தி வற்புறுத்தினார்.

தனது வாக்குறுதியை நிறைவேற்ற காந்தி யாரை வேண்டுமானாலும் எதிர்க்கத் தயாராக இருந்தார்; தன்னுடைய விருப்பத்திற்கு எதிராகவும் அவர் செயல்பட்டார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.  அதற்கு அவர் தனது ஆத்மபலத்தையும், தார்மீக வலிமையையும் பயன்படுத்தினார்.

சில நாட்களில் பாகிஸ்தானுக்கு செல்லும் திட்டமும் காந்தியின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தது.  காந்தியின் இந்த திட்டங்கள் இந்து மகாசபைக்கு பிடிக்கவில்லை.  கடும்போக்கு இந்துக்களுக்கும் காந்தியின் இந்த சமாதான நடவடிக்கையில் உடன்பாடு இல்லை. 

பட மூலாதாரம், Getty Images

உலகம் வாழ்க, அமைதி ஓங்குக என்று காந்தி குரல் கொடுத்த அதே நேரத்தில் காந்தி ஒழிக என்ற முழக்கத்தை பிரிவினையின் கொடுமைகள் எழுப்பியது காலத்தின் கோலம்!

ஆன்மீகத்தின் உன்னதத்தை போற்றிய காந்தி, 'தன்னுடைய வாழ்க்கை ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போன்றது' என்று தனது சுயசரிதையான சத்திய சோதனையில் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் தார்மீக மனோபலம் கொண்ட அந்த ஆய்வாளரால் நாதுராம் கோட்ஸின் கருத்தியல் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதில் வியப்பேதும் இல்லை.

காணொளிக் குறிப்பு,

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த கதை(காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: