குடும்பம், பாலுறவு, குழந்தைகள் நலனில் இந்தியாவின் நிலை - 15 தகவல்கள்

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு ( 2015 -2016) சமீபத்தில் இந்திய குடும்ப மற்றும் சுகாதர நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

திருமணம், பாலுறவு, கருவுறுதல், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், ஊட்டச்சத்து, சுகாதாரம், பெண்கள், குடும்ப வன்முறைகள், ஆல்கஹால், அடிப்படை வீட்டு வசதிகள், சுகாதாரம், குழந்தைகளுக்கான கல்வி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி என பல்வேறு விடயங்கள் குறித்து பல்வேறு நகரங்களில் கண்கெடுப்புகள் மூலம் மதிப்பாய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்த தொகுப்பு இங்கே.

1. குழந்தை பிறப்பு குறித்து அரசாங்கத்தில் முறையாக பதிவு செய்யப்படுவதில் புதுச்சேரி முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாடு ஆறாம் இடத்தில் இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் பிறப்பு பதிவில் கடைசி இடத்தில் இருக்கிறது. பிறப்பு சான்று பதிவு செய்யப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உத்தர பிரதேச மாநிலத்தில் நூற்றில் அறுபது பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் பிறப்பு பதிவு செய்யப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 80 சதம்.

2. இந்தியாவில் தொண்ணூறு சதவீத வீடுகளில் அருந்துவதற்கு ஏதாவதொரு வகையில் மேம்படுத்தப்பட்ட குடி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

3. நாடு முழுவதும் 48% வீடுகளில் தனி கழிவறை உள்ளது. 39% வீடுகளில் அத்தகைய வசதி இல்லை. அதாவது அத்தகைய வீடுகளில் குடும்ப உறுப்பினர்களில் திறந்த வெளி கழிப்பறையை பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.

4. நாடு முழுவதும் 88% வீடுகளில் மின்சார வசதி உள்ளது. கிராம புறங்களில் 83% வீடுகளிலும் நகர்புறங்களில் 98% வீடுகளிலும் மின்வசதி உள்ளது.

5. இந்திய நாட்டில் 44% வீடுகளுக்கு மட்டுமே சமைப்பதற்கு சுத்தமான எரிவாயு கிடைக்கிறது.

படத்தின் காப்புரிமை DESHAKALYAN CHOWDHURY

6. பதினைந்து வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கையானது இந்தியாவில் 29 சதவீதமாகும். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை பத்து சதவீதம் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

7. நாட்டில் ஆதார் அட்டை பெற்ற வீட்டினர் 69% ஆகும்.

8. இந்தியாவில் வீடு வைத்துள்ள பத்தில் ஒன்பது குடும்பத்தினருக்கு வங்கி அல்லது தபால் அலுவக கணக்கு உள்ளது.

9. இந்தியாவில் பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறார்களில் ஐந்து சதவீதத்தினர் அனாதையாக (ஒன்று அல்லது பெற்றோர்களில் இருவருமே இறந்தவர்கள்) உள்ளனர். மூன்று சதவீத குழந்தைகள் உயிரியல் ரீதியாக பிறந்த பெற்றோரிடம் வளராமல் மற்றவர்களிடம் வளர்கிறார்கள். 5-9 வயது வரையிலான சிறார்களின் 3.3 சதம் பேர் பெற்றோர்களில் யாராவது ஒருவரையாவது இழந்தவர்களாக இருக்கின்றனர். இதே எண்ணிக்கை 10- 14 வயது சிறார்களில் 6.3 சதமாகவும், 15-17 வயதிலான குழந்தைகளில் 9.2 சதமாகவும் அதிகரிக்கிறது.

10. தொடக்க பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் எண்ணிக்கை 78 சதம். இவர்களில் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி செல்பவர்களின் சதவீதம் 68 மட்டுமே. பள்ளிக்கு குழந்தைகளின் வருகை பத்து சதவீதம் அளவுக்கு குறைவதற்கு காரணம் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வமின்மையே என இந்த சர்வே கூறுகிறது.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM

11. குடும்பத்தின் நெருங்கிய ரத்த உறவுகளில் உள்ளவர்களை திருமணம் செய்யும் 15 - 49 வயதுக்குட்பட்ட பெண்கள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தை தொடர்ந்து லட்சத்தீவு, ஆந்திரா, தெலங்கானா, அந்தமான் நிகோபார் தீவுகள், கர்நாடகா, புதுச்சேரி போன்றவை உள்ளன. தமிழகத்தில் 33% பெண்கள் குடும்பத்தின் நெருங்கிய உறவுகளை திருமணம் செய்கிறார்கள். இஸ்லாம் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களில் இவ்வகை திருமணம் அதிகளவில் நடக்கிறது.

இந்தியா முழுவதும் நடக்கும் திருமணங்களில் 14% திருமணங்கள் குடும்ப உறவினர்களுக்குள்ளேயே நிகழ்கின்றன.

12. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவு இறந்துபோவதில் நாட்டிலேயே உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. கேரளா கடைசி இடத்தில் உள்ளது. ஆயிரம் குழந்தைகளில் 78 குழந்தைகள் உத்தர பிரதேசத்தில் இறக்கின்றன. இந்த எண்ணிக்கை குஜராத்தில் 44 ஆகவும், ஆந்திராவில் 41 ஆகவும் தமிழகத்தில் 27 ஆகவும் உள்ளன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சேலத்தில் ராக்கெட் போல சீறிச் சென்ற சிலிண்டர் (காணொளி)

13. ஆய்வில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கையின்படி இந்தியா முழுவதும் எந்தெந்த வயதில் ஆண்கள் பெண்கள் முதல் உடலுறவு வைத்துக் கொண்டார்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. 15-19 வயதினரில் பெண்களில் 83.1% ஆண்களில் 91.8% பேர் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை.

20 -24 வயதினரில் பெண்களில் 33% ஆண்களில் 61.7% பேர் ஒரு முறை கூட உடலுறவில் ஈடுபடவில்லை. 25-29 வயதினரின் பெண்களில் 8.3% பேருக்கும் ஆண்களில் 28.1% பேருக்கும் முதல் உடலுறவு நடக்கவில்லை. 30-34 வயதினரின் ஆண்களில் 9.2%பேருக்கும் பெண்களில் 2.5% பேருக்கும் பாலியல் உறவு கிட்டவில்லை.

பெண்களுக்கு சராசரியாக 19.1 வயதில் முதல் பாலியல் உறவும், ஆண்களுக்கு சராசரியாக 24.3 வயதில் முதல் பாலியல் உறவும் கிட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

14. தடுப்பூசிகளை பொறுத்தவரையில் 12-23 மாத குழந்தைகளில் அனைத்து அடிப்படை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ள குழந்தைகளின் சதம் 62. தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் மூன்றில் இரண்டு பேருக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி மூன்று டோஸ் போடப்பட்டுள்ளது.

15. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38% பேர் வயதுக்கு ஏற்ற உயரத்தை விட குறைவாக இருக்கிறார்கள், 21% பேர் உயரத்துக்கு ஏற்ற எடையை விட குறைவாக உள்ளனர். 36% பேர் வயதுக்கு ஏற்ற எடையை விட குறைவாக உள்ளனர். இரண்டு சதவீதத்தினர் உயரத்துக்கு ஏற்ற எடையை விட அதிககமாக உடல் பருமனான குழந்தைகளாக உள்ளனர்.

ஆய்வு கணக்கீடு எடுக்கப்பட்ட வருடத்துக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் பிறந்த குழந்தைகளில் ஐந்தில் இரு குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கிடைததுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :