''இதுவே இஸ்லாமிய பெண்களுக்கான புத்தாண்டு பரிசாக இருக்கும்'': ஆதரவு கோரும் மோதி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை வைத்தார். பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா நிறைவேறிவிட்டால் அதுவே இஸ்லாமிய பெண்களுக்கான புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடையே பேசிய பிரதமர், மத்திய அரசின் முயற்சிகளும் பொதுமக்களின் விருப்பமும் இருந்தாலும்கூட குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் எந்தவிதமான அரசியலும் இருக்கக்கூடாது. அழுத்தப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரத்தை கொடுக்கும் மசோதா இது என்று அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் தொடரின் துவக்க நாளன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், முத்தலாக் மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

படத்தின் காப்புரிமை Twitter@rashtrapatibhvn

நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முத்தலாக் சட்டம் உருவாக்கப்பட்டால், முஸ்லிம் பெண்கள் சுயமரியாதையோடு அச்சமில்லாமல் வாழ வழிவகுக்கும் என்று கூறினார். பெண்களை பாகுபாடில்லாமல் பார்க்கவேண்டும் என்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள் பற்றி பேசினார்.

`பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், கல்வியளியுங்கள்` திட்டத்தைப் பற்றி குறிப்பிட்ட அவர், முதலில் 161 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், அதன் வெற்றியைத் தொடர்ந்து, அது 640 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மகளிருக்கு வழங்கப்படும் 16 வார மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டதை குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். இதனால் பணிக்கு செல்லும் பெண்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க அதிக நேரம் செலவழிக்கலாம் என்று மகிழ்ச்சியை தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

குடியரசுத்தலைவர் உரையில் முக்கிய அம்சங்கள்:

 • ஜன்-தன் திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 31 கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன், நாட்டில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதமாக இருந்தது, அது தற்போது 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
 • 'பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்' கீழ் இதுவரை சுமார் 10 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் அனுமதிக்கப்பட்டு, மொத்தம் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதன் முறையாகப் பயன்படுத்தி கிட்டத்தட்ட மூன்று கோடி மக்கள் வெற்றிகரமாக சுயதொழில் தொடங்கியுள்ளனர்.
 • அரசின் கொள்கைகள் மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பு ஆகியவற்றின் விளைவாக 275 மில்லியன் டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள், சுமார் 300 மில்லியன் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது சாதனை அளவு உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
 • பருப்பு வகைகளுக்கான புதிய கொள்கையின் காரணமாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருப்பு உற்பத்தி வழக்கத்தைவிட 38% அதிகரித்துள்ளது, இது ஒரு சாதனை அளவாகும்.
படத்தின் காப்புரிமை Getty Images
 • நமது அரசின் கொள்கைகளின் காரணமாக ஒருபுறம் யூரியா உற்பத்தி அதிகரித்துள்ளது, மறுபுறத்தில் யூரியாவில் வேம்பு பூச்சு செய்யப்படுவதால் அதன் விற்பனை கள்ளச்சந்தையில் 100% குறைந்துவிட்டது. கோரக்பூர், பரெளனி, சிந்த்ரி, தல்ச்சேர் மற்றும் ராமகுண்டம் ஆகியவற்றில் உரத் தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்கும் முயற்சிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 • சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் மேம்படுத்தும் திட்டத்தில், பிரதமரின் கிராமப்புற சாலை திட்டம் அற்புதமாக பணியாற்றி வருகிறது. 2014 இல், நாட்டின் 56% கிராமங்கள் மட்டுமே சாலை இணைப்புடன் இணைந்திருந்தது. தற்போது 82% கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை தொலைதூர பகுதிகளில் உள்ளவை.
படத்தின் காப்புரிமை Getty Images
 • நம் நாட்டில் இரண்டரை கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக அரசு 'மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016'ஐ நடைமுறைப்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணிகளில் 4% மற்றும் உயர் கல்வியில் 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
 • கடந்த ஓராண்டில் மட்டும் 45 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாடு, பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றின் நன்மைகளை வழங்கியிருக்கிறோம்.
 • பிரதமர் மருந்தியல் மையங்கள் மூலம் 800 வகையான மருந்துகள் மலிவான விலையில் ஏழைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இந்த மையங்களின் எண்ணிக்கை 3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 • இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு நாடு முழுவதிலும் 20 உயர்தர கல்வி நிறுவனங்களை ('Institutions of Eminence' (IoE)) உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், கல்வி நிறுவன்ங்களுக்கு 10,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
 • நாட்டில் மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் இலக்கை அதிகரிக்கும் நிலை முதன்முதலாக ஏற்பட்டுள்ளது. தற்போது இந்திய மின்சாரத்தை பிற நாடுகளுக்கு வழங்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டது. 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
 • 'ஒரு பதவி, ஓர் ஓய்வூதியம்' என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 20 லட்சத்திற்கும் அதிகமான பணி ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசு வழங்கியுள்ளது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பட்ஜெட் பற்றி மாத ஊதியம் வங்குவோரின் கருத்து என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்