மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தது கோட்ஸே மட்டும்தானா?

  • குல்தீப் நய்யார்
  • பத்திரிகையாளர்

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற ஆலோசனை குழு ஒன்றை நியமிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் ஆணையை மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன்.

பட மூலாதாரம், Getty Images

மகாத்மா காந்தியின் படுகொலை எவ்வாறு நடைபெற்றது?, ஏன் நிகழ்ந்தது? என்ற இரண்டு கோணங்கள் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும்.

ஆனால், இந்த வழக்கை தொடுத்துள்ள அபினாவ் பாரத் அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பன்கிராஜ் பாட்னிஸ் வெளிநாட்டு சக்தி ஒன்று பின்னால் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இது நீரூபிக்கப்பட வேண்டும். மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாட்டால் இந்தப் படுகொலை நிகழ்ந்ததை நினைவுகூர்கிறேன்.

உருது செய்தித்தாள்களில் ஒன்றான 'அன்ஜாமின்' செய்தி அறையில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மிகவும் அரிதாக ஒலிக்கக்கூடிய 'பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா' செய்தி நிறுவனத்தின் தொலை அச்சின் (டெலபிரின்டர்) மணி ஒலித்தது.

என்ன செய்தி என்று பார்ப்பதற்காக துள்ளி எழுந்து வந்தேன். மகாத்மா காந்தி சுடப்பட்டார் என்று அது தெரிவித்தது. வேறு எந்த விவரங்களும் இல்லை. இரு சக்கர வாகனம் வைத்திருந்த என்னுடைய சக பணியாளர் ஒருவரிடம், வழக்கமாகப் பாதுகாப்பே இல்லாத பிர்லா ஹெளஸில் இறக்கிவிடக் கேட்டுக்கொண்டேன்.

பேரிழப்பு மற்றும் கவலையோடு மகாத்மா காந்தியின் படுகொலை இன்று நினைவுகூரப்படும்போது, அதுவொரு பெரிய பாதுகாப்புக் குறைபாடு என்கிற கருத்து மறக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மகாத்மா காந்தியை கொன்று விடுவதற்கு தீவிர இந்து குழு ஒன்று புறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வருவதற்கு அதிக சான்றுகள் அரசுக்கு அன்று இருந்தது. என்றாலும், அந்த திட்டத்தை முறியடிக்க மிகவும் குறைவாக பாதுகாப்பே வழங்கப்பட்டிருந்தது.

காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக, காந்தியின் வழிபாட்டுக் கூட்டத்தின் மேடைக்கு பின்பக்கச் சுவரில் கடும்போக்குவாதக் குழுவை சேர்ந்த மதன் லால் என்பவர் குண்டு ஒன்றை பதித்து வைத்திருந்தார். வழிபாட்டுக் கூட்டத்தில் நான் வழக்கமாக கலந்து கொள்வதுண்டு. அன்று அங்கு குண்டுவெடித்தது.

மகாத்மா காந்தி எதுவும் நடக்காததுபோல, கவலை கொள்ளாமல், வழிபாடு செய்து கூட்டத்தை நடத்தினார். பட்டாசுதான் வெடித்திருக்க வேண்டும் என்று நானும் எண்ணினேன். அடுத்த நாள் செய்தித்தாள்களை புரட்டியபோதுதான், காந்தியின் இறப்பு எவ்வளவு நெருங்கி வந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

சர்தார் வல்லபாய் பட்டேல் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தார். தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆனால், நவீன இந்தியாவை கட்டியமைக்க அவர்கள் இருவரும் பணியில் தொடர வேண்டுமென மகாத்மா காந்தி விரும்புவதாக அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் மீது விதிக்கப்பட்டிருந்த தடை கூட பின்னாளில் விலக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

இந்த வலதுசாரித்துவம் எந்த அளவுக்கு ஆழமாக பரவியுள்ளது என்பதை புரிந்துகொண்டு உள்துறை அமைச்சம் அதிகமாக ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்தகைய நிகழ்வுகள் நடைபெறும் என்ற "நிலைமையை" ஆர்.எஸ்.எஸ் உருவாக்கியிருப்பதாக அந்நேரத்தில் சர்தார் வல்லபாய் படேல் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

1955ஆம் ஆண்டு தகவல் தொடர்பு அதிகாரியாக உள்துறை அமைச்சகத்தில் நான் இணைந்து, ஏறக்குறைய 10 ஆண்டுகள் பணியாற்றியபோது, சில வழிகளை கண்டுபிடிக்க முயன்றேன்.

இந்த வழக்கு முழுமையாக புலனாய்வு செய்யப்பட்டது என்று நான் முடிவுக்கு வருவதற்கு துளியேனும் சான்றுகள் இல்லை. அல்லது அரசு வெளியிட விரும்பாத விடயமாக, அரசிலுள்ள சில நபர்கள் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு குற்றச்சாட்டு இருக்கலாம்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பிரிந்து செல்லும் தங்களின் தகவல்களை பிரிட்டன் வழக்கமாக தெரிவிக்கும் 3 பாகங்களை கொண்ட புத்தகமான அதிகார மாற்றம் பற்றிய ஆவணங்களை உள்துறை அமைச்சகத்தில் இருந்து இந்திய ஆவணக் காப்பகம் இன்னும் பெறவில்லை.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படவுடன், பிர்லா ஹௌஸை நான் சென்றடைந்தபோது, காந்தி சுடப்பட்டவுடன் விழுந்த இடத்தை பாதுகாத்து கொண்டு யாரும் நிற்கவில்லை.

வழிபாடு நடைபெற்ற மேடைக்கு செல்லும் பாதையில் சற்று ரத்தக்கறை காணப்பட்டது. மிக முக்கிய சான்றான ரத்தத்தை பாதுகாத்து வைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில், அதனை சுற்றி காவல்துறையினர் யாரும் இல்லை.

அன்றைய நாளில் நடைபெற்றதை திருப்பி பார்க்க ஏன் எந்தவொரு அரசும் முயற்சி செய்யவில்லை? பாரதிய ஜனதா கட்சியின் ஆசானான ஆர்.எஸ்.எஸ் எந்வொரு புலனாய்வையும் தொடங்குவதற்கு கூட விரும்பாத காரணத்தால், பாரதிய ஜனதா கட்சியின் பலவீனத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, இன்னும் ஆழமான புலனாய்வை மேற்கொண்டிருக்கலாம். சிம்லாவில் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட விசாரணையும், வழங்கப்பட்ட தீர்ப்பும்தான் இருக்கின்ற ஒரேயொரு தகவலாகும்.

பட மூலாதாரம், KEYSTONE/GETTY IMAGES

சிவில் சமூகத்தை சோந்த பெண்கள் சிலர் கோட்ஸேக்கு துணிகளை தைத்து கொடுத்தனர் என்பது வெளிப்படையான ரகசியம். இதற்கான காரணத்தை அறிந்திருக்கும் அரசும் இத்தகைய விவரங்கள் பற்றி கண்டுகொள்ளவேயில்லை.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரை பின்பற்றியவர்கள் என்ன அனுபவித்தார்கள், இன்று என்ன அனுபவிக்கிறார்கள்? என்பதை 132 ஆண்டுகள் வரலாறு உடைய காங்கிரஸ் கட்சி வெளிக்கொணரவில்லை.

ஆட்சியை கவிழ்க்க அவர்கள் முயற்சி செய்வதைப்போல சந்தேகப் பார்வையில் இந்திய அரசு அவர்களை பார்க்கிறது. பாரதிய ஜனதா கட்சி கொண்டிருக்கும் அதிகாரம் சோதிக்கப்படவில்லை.

ஜனநாயக அமைப்பில் நாட்டின் எல்லா அதிகாரங்களையும், விதிமுறைகளையும் பிரதமர் நரேந்திர மோதி தன்னை மட்டுமே சார்ந்திருக்க செய்துள்ளார். உதட்டளவில் அனுதாபம் தெரிவிக்கும் கட்சி, கூட்டங்களில் அவருடைய புகைப்படங்களை வைக்கிறது. அதுவும் வாக்குகளை வாங்கவே.

சுதந்திர சந்தை பொருளாதாரத்திலும், சமனற்ற வளாச்சி காணப்படும் இந்நேரத்திலும் மகாத்மா காந்தி பொருந்தி செல்லவது என்பது மிகவும் கடினமே.

அந்த சமயத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை இயந்திரம் குளறுபடியாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இந்தப் படுகொலைக்கு வழிவகுத்த நம்பத்தகுந்த தகவல்களை எந்தவொரு காவல்துறை அதிகாரியும் விட்டுச் செல்லாதது மிகவும் வினோதமாக உள்ளது.

பட மூலாதாரம், CENTRAL PRESS/GETTY IMAGES

சில இந்து கடும்போக்காளர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது உண்மை. என்றாலும், இதற்கான திட்டம் உயர் மட்டத்திலுள்ள பலரின் ஈடுபாடு கொண்டதாக மிகவும் பெரியது என்று நான் எண்ணுகிறேன்.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சுவாமி அசீமானந்த் இந்து தீவிரவாதிகளின் வலையமைப்பு மிகவும் விரிவான அளவில் உள்ளது தெரிய வருகிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டபோது அப்படியே இருந்திருக்க வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பான தன்னுடைய கருத்தை விளக்க முடியும் என்றும், இந்த வழக்கை மீண்டும் நடத்துவதில் பயனில்லை என்றும் கூறி மேல்முறையீடு வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்த துஷார் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆலோசனை வழங்குவதற்கு மூத்த வழங்கறிஞர் ஒருவரை நியமித்திருக்கும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை முன்னெடுத்து செல்வதற்கு முன்னர், இந்த ஆலோசகரின் அறிக்கைக்காக காத்திருக்க போவதாக தெரிவித்துள்ளது.

(இந்த கட்டுரையின் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துக்கள். பிபிசியின் கருத்துகள் அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம்.)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :