சேலத்தில் ராக்கெட் போல சீறிச் சென்ற சிலிண்டர் (காணொளி)

சேலத்தில் ராக்கெட் போல சீறிச் சென்ற சிலிண்டர் (காணொளி)

சேலத்தில் வெல்டிங் பட்டறையில் சிலிண்டரின் வால்வை ஊழியர் திறக்க முற்பட்ட போது சிலிண்டர் ராக்கெட் போல பறந்து சென்று அருகே இருந்த வீடுகளின் முன்பகுதியை சேதப்படுத்தியது.

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நீதிராஜா. இவர் சேலம் ரத்தினசாமிபுரம், சீத்தாராம செட்டி பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்த பட்டறைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் பட்டறையின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பட்டறையில் பணிபுரியும் ஊழியர் இன்று காலை சிலிண்டரை இயக்க முயற்சித்தார்.

அப்போது சிலிண்டரில் இருந்த வால்வு திறந்தது. பலத்த சப்தத்துடன் சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் வாயு வெளியேறவே சிலிண்டர் ராக்கெட் போல பறந்து சென்றது. அருகே இருந்த இருசக்கர வாகனத்தின் மீது இடித்து சென்று, சுமார் 70 அடி தூரத்தில் உள்ள வீட்டின் மீது சிலிண்டர் மோதியது. இதில் அவ்வீட்டின் முன்பகுதியில் உள்ள ஜன்னல், கிரில் கைபிடி மற்றும் சுவர் சேதமடைந்தது. மேலும் மற்றொரு வீட்டின் படிக்கட்டுகளும் சேதமடைந்தன.

அதிக சப்தத்துடன் சிலிண்டர் பறந்து சென்றதை கண்ட அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலிண்டர் பறந்து சென்ற போது, அதிர்ஷவசமாக யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பறந்து சென்ற சிலிண்டரின் அருகில் இருந்த மற்றொரு சிலிண்டர் சேதமடைந்ததால் அதிலிருந்து ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் கசிவை சரிசெய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய சிலிண்டரையும் ஆய்வு செய்தனர். சிலிண்டர் பறந்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: