பட்ஜெட் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 5 விடயங்கள்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இன்று இந்திய நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதில், வரும் நிதியாண்டுக்கான அரசின், வரவு மற்றும் செலவு குறித்த தகவல்கள் இடம்பெறும். ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதாலும், தேர்தல் ஆண்டான 2019இல் இடைக்கால நிதிநிலை அறிக்கையே தாக்கல் செய்யப்படும் என்பதால், இதுவே இந்த அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதாலும் அதிகம் கவனிக்கப்படுகிறது.

1. நிதிப்பற்றாக்குறை

அரசாங்கத்தின் மொத்த வருவாயைவிட மொத்த செலவினம் அதிகரிப்பது நிதிப் பற்றாக்குறை எனப்படும். இதில் அரசு வாங்கும் கடன் அடங்காது.

கடந்த 2017ஆம் ஆண்டுக்கான நிதிநிலை தாக்கல் செய்தபோது, 2017-18 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2%ஆக இருக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இது அதற்கு முந்தைய நிதியாண்டு வைக்கப்பட்ட 3.5% எனும் இலக்கை விட குறைவு.

எனினும் 2018-19 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வாக்காளர்களை கவர்வதற்காக, இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள், வரிக் குறைப்பு உள்ளிட்டவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு

தற்போது தனிநபர் வருமான வரி உச்சவரம்புக்கான வருவாய் ஆண்டுக்கு 2,50,000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைவிட குறைந்த வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்தத் தேவை இல்லை.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அருண் ஜேட்லி

நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் இந்த வரம்பு உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது 3,00,000 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டால், அது பல லட்சக்கணக்கான வரி செலுத்துவோருக்கு பயனளிக்கும்.

3. நேரடி மற்றும் மறைமுக வரிகள்

வரிவிதிக்கத்தக்க வருமானத்தை உடைய குடிமக்களால் அரசுக்கு நேரடியாக செலுத்தப்படும் வரி நேரடி வரி எனப்படும். வருமான வரி, சொத்து வரி, நிறுவன வரி ஆகியன இவ்வகையில் சேரும். இந்த வரிகளை செலுத்தக் கடமைப்பட்டுள்ளவர்கள், இவற்றை வேறு நபர்களைச் செலுத்த வைக்க முடியாது.

ஆனால், மறைமுக வரியின் சுமையை பிற நபர்களுக்கு மாற்ற முடியும். ஒரு பொருளை உற்பத்தி செய்பவர் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்களது உற்பத்திப் பொருள் அல்லது சேவை ஆகியவற்றைப் பயன்படுத்தும் நுகர்வோரிடம் இருந்து அவற்றுக்கான விலையுடன் சேர்த்து வரியையும் வசூல் செய்ய முடியும்.

படத்தின் காப்புரிமை Getty Images

பல மறைமுக வரிகளான மதிப்புக் கூட்டு வரி, விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்டவற்றுக்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி ஒரே மறைமுக வரியாக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

4. நிதியாண்டு

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டு கணக்கிடப்படுகிறது. 2018-19 நிதியாண்டு ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2019 வரை இருக்கும்.

நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தையே நிதியாண்டாக்க முயன்று வருகிறது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படுமா என்பது இனிமேல்தான் தெரியும்.

5. நீண்டகால மூலதன லாப வரி

தாங்கள் வாங்கிய நிறுவனப் பங்குகள் மூலம் ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் வரிசெலுத்துவோர் அடையும் லாபம் குறுகிய கால மூலதன லாபம் எனப்படுகிறது. அதன் வரி விகிதம் தற்போது 15%ஆக உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஓராண்டுக்கும் மேலாக வைத்துள்ள பங்குகள் மூலம் அடைந்த லாபம் நீண்டகால மூலதன லாபம் எனப்படுகிறது. இந்த வருமானத்துக்கு வரி இல்லை.

நீண்டகால மூலதன லாப வரிக்கான கால வரம்பை ஓராண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படியானால், வரி விலக்கு பெற விரும்புவோர், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு தாங்கள் வாங்கிய நிறுவனப் பங்குகளை விற்கக் கூடாது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பட்ஜெட் பற்றி மாத ஊதியம் வங்குவோரின் கருத்து என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: