`ஒரே நாடு ஒரே தேர்தல்’: ஆர்.எஸ்.எஸ் திட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுக்கும் முயற்சியா?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அடிக்கடி தேர்தல் நடத்துவது தேசத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பேசினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வாதம் எழுவது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களிலும் இது போன்ற குரல்கள் எழுந்து இருக்கின்றன.

இது சாத்தியமா? உண்மையில் இது தேசத்தின் வளர்ச்சிக்கு பலன் தருமா?

இந்தியா போன்ற பன்முகதன்மைக் கொண்ட நாட்டில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் வெவ்வேறு காலக்கட்டத்தில் தேர்தல் நடத்துவது நல்லது. அதுதான் ஜனநாயகமும் கூட என்கிறார் அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான ஆழி செந்தில்நாதன்.

இயல்பானது ஒன்று’

இது குறித்து விவரித்த அவர், "தேர்தல் முறை இந்தியாவில் தொடங்கியபோது மாநிலத்துக்கும், ஒன்றியத்துக்குமான தேர்தல் ஒரே சமயத்தில்தான் நடந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்துவந்தது. அதன்பின் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ தன் முழு பதவிக்காலத்துக்கு முன் கவிழ்ந்த போது, அந்த தேர்தல் முறையில் மாற்றம் வந்தது.அதாவது ஆட்சி கவிழ்ந்த அல்லது கலைக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் ஆறு மாதகாலத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஜனநாயக ரீதியான நடவடிக்கையின் காரணமாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதனால் இயற்கையாக நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்படும் காலம் வேறுபடத் தொடங்கியது. இது இயல்பான ஒன்று." என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் அவர், "அறுபதுகளுக்கு பின், மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்தன. அவை சட்டமன்ற தேர்தல்களில் மாநிலத்தின் முதன்மையான பிரச்சனைகளை முன் வைத்தும், , நாடாளுமன்ற தேர்தல்களில் அகில இந்திய பிரச்சனைகளை முன் வைத்தும் பிரசாரம் செய்ய தொடங்கின. இந்தியா போன்ற கூட்டாட்சியாக இருக்கக் கூடிய ஒரு நாட்டில் இரண்டு தேர்தல்களும் பிரிந்து இருப்பதுதான் நல்லது. உள்ளாட்சி தேர்தல்களில் உள்ளூர், அதாவது நம் தெரு பிரச்சனைகளை முன் வைத்துதான் பிரசாரம் செய்யப்படுகின்றன. உள்ளூர் பிரச்சனைகள் விவாதிக்கப்படுகின்றன. இதுதான் ஆரோக்கியமான நடைமுறை சாத்தியமுள்ள ஒரு முறை." என்கிறார்.

தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்று நினைப்பது ஒரு சித்தாந்த திணிப்பு என்கிறார் செந்தில்நாதன்.

சித்தாந்த திணிப்பு

"இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எந்த வித அடையாளமும் இல்லாத வெறும் நிர்வாக அலகுகள் மட்டுமே என்று நினைக்ககூடிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் இது" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

இது குறித்து விவரிக்கும் அவர், "இந்தியா முழுமையையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்கிறது ஆர்.எஸ். எஸ் சித்தாந்தம். அதாவது எந்த பன்முகத்தன்மையையும் அது விரும்புவது இல்லை. இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுவது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு நடைமுறை அரசியல் சாசன வடிவம் கொடுப்பது அன்றி வேறொன்றுமில்லை." என்கிறார்.

நடைமுறை சாத்தியமா?

மத்தியில் இருக்கக் கூடிய ஓர் ஆட்சி, பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தினால், மூன்று ஆண்டுகளில் கவிழுமானால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற காரணத்துக்காக அனைத்து மாநில ஆட்சிகளையும் கவிழ்ப்பார்களா? அல்லது இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தின் ஆட்சி கவிழுமானால் இவர்கள் மத்தியில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆட்சி கவிழ்ந்த மாநிலத்தில் ஆறு மாதத்துக்குள் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயக நடைமுறை. இவர்கள், ஆட்சி கவிழ்ந்த ஏதோ ஒரு மாநிலத்தில், ஒரே சமயத்தில்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்ற யோசனையுடம் `ஒரே தேர்தல்` முறையை முன்வைப்பார்களானால் அது ஜனநாயக படுகொலை என்கிறார்.

ஜனநாயக முதலீடு

தேர்தல் செலவு குறையும் என்ற வாதத்தையும் செந்தில்நாதன் எதிர்க்கிறார்.

"தேர்தல் செலவை குறைக்கிறோம் என்ற காரணத்தை முன்வைத்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துகிறோம் என்று சொல்ல முடியுமா? தேர்தலுக்காக செலவு செய்வது என்பது ஜனநாயகத்துக்கான முதலீடு. இந்தியாவின் மிகப் பெரிய பலம் என்பதே அதன் தேர்தல் முறையில்தான் இருக்கிறது. அந்த தேர்தல் முறையையே ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைப்பதன் தொடக்கம்தான் இந்த `ஒரே தேர்தல்` என்ற வாதம்." என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

இரண்டு தசாப்தவிவாதம்

"பாஜக தனது சித்தாந்தத்தை திணிக்கப் பார்க்கிறது," என்பதை மறுக்கிறார் பாஜகவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன். அவர் " தேவையற்ற தேர்தல் செலவுகளை குறைக்க 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்னும் நடைமுறை உதவும், " என்றும் கூறியுள்ளார் .

"அதுமட்டுமல்லாமல் இது நாளையே அமல்படுத்தப்படப்போவதில்லை. அனைத்துக் கட்சிகளுடனும் அமைப்புகளுடனும் பெரும் விவாதம் நடத்திய பிறகே இதில் உள்ள நல்லது கெட்டது ஆராயப்பட்டு இடர்பாடுகள் கலையப்பட்டபின்பே நடைமுறைக்கு வரும். இது இப்போது தொடங்கியுள்ள விவாதமல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. எல்.கே.அத்வானி கூட இதுகுறித்து பேசியுள்ளார்," என்கிறார் அவர்.

அதன் அரசியல் காரணங்களை கடந்து இதன் சாத்தியம் குறித்து கேட்ட போது, `இது சாத்தியமே` என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

அரசமைப்புச் சட்டம் திருத்தம்

"நாம் இப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்து கொடுத்த தேர்தல் முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதில் `நம்பிக்கை இல்லா தீர்மானம்` கொண்டு வருவதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல, ஒரு மாநிலத்தில் கொண்டு வந்து ஆட்சிக் கவிழும் பட்சத்தில், இப்போது முன்வைக்கப்படுகிற `ஒரே தேர்தல்` முறையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த நேரிடும். இதில் அரசமைப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை கவிழ்க்க முடியாத வண்ணம் திருத்தம் கொண்டு வந்தால், `ஒரே தேர்தல்` என்பது சாத்தியமாகும்." என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,.

மற்றபடி, தேர்தலை நடத்துவதற்கான துணை ராணுவம், ஊழியர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவைப்படுவார்கள். முறையாக முன் திட்டமிட்டால், இந்த இடர்களையும் தவர்க்கலாம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்