சென்னை ஐஐடியில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி - பட்ஜெட்டில் தகவல்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்த செய்திகளே அனைத்து செய்தித்தாள்களின் தலையங்கத்தையும் ஆக்கிரமித்துள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

படத்தின் காப்புரிமை Getty Images

ஐந்தாம் தலைமுறைக்கான கைபேசி தொழில்நுட்பமான 5ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதிப்பதற்கான ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடியில் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நேற்றைய பட்ஜெட் உரையின்போது வெளியிட்டார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை மனதில் கொண்டு விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், தனது மிகப் பெரும் நீண்டகால திட்டங்களாக மத்திய அரசு கூறிய டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்றவற்றின் தற்போதைய நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை என்று தனது தலையங்கத்தில் கூறியுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் மூன்று தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்துள்ளது குறித்த செய்தியை முதற்பக்கத்தில் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா. மேலும், மேற்குவங்கத்தின் இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசே வெற்றிப் பெற்றுள்ளது.

மத்திய தகவல் ஆணையம் மற்றும் அதன் கீழ் செயல்படும் தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதியில் முந்தைய ஆண்டைவிட 63% குறைத்துள்ளது குறித்த செய்தியையும் வெளியிட்டுள்ளது.

தினமணி

முன்னெப்போதும் இல்லாத வகையில் இரயில்வே துறைக்கு மத்திய பட்ஜெட்டில் 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி. மேலும், கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்திற்கு 17,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்குமாறு கட்சியினரிடம் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.

தி ஹிந்து

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து கார்ட்டூனை வெளியிட்டுள்ளது தி ஹிந்து ஆங்கில செய்தித்தாள்.

படத்தின் காப்புரிமை THE HINDU

மேலும் நாளிதழ்களில் வெளியான பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்:

ராகுல் காந்தி

"பாஜக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால், இந்த அரசு இன்னமும் கூட வெறும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நல்ல வேளையாக, இந்த அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டுதான் உள்ளது."

ப.சிதம்பரம்

"நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து எந்தவொரு அம்சமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மத்திய பட்ஜெட் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துவிட்டது. நிதிப் பற்றாற்குறை பிரச்சனையை தீர்ப்பதில் ஏற்பட்ட தோல்வி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடும்."

மு.க. ஸ்டாலின்

"மத்தியில் ஆளும் பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை தமிழகத்துக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ரயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள், ஒக்கி புயல் பேரிடர் நிவாரண நிதி போன்றவை குறித்து நிதிநிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது."

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :