"ஓட்டுகளுக்காக கனவுகளை விற்கும் நிதிநிலை அறிக்கை"

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

2019ம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மனதில் கொண்டு தெளிவில்லாத வாக்குறுதிகளை கொண்ட ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் விவேக் கவுல்.

இந்தியாவின் நிதியமைச்சரான அருண் ஜேட்லி தனது ஐந்தாவது மற்றும் இறுதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு வரை அரசியல் பார்வையாளர்கள் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முன்கூட்டயே நடைபெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது தேர்தலானது இந்த வருடத்தின் இறுதிலேயே நடைபெறும் என்று நம்புகின்றனர்.

இந்த ஆண்டில் 10 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காகவும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது.

இந்தியாவின் பெரும்பாலான மக்கள் இன்னமும் விவசாயத்தையே சார்ந்துள்ள நிலையில், விவசாயத் துறைக்கு ஜேட்லி ஏதாவது செய்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிதியாண்டில் விவசாயத் துறையில் வெறும் 0.91 சதவீதம் மட்டுமே வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அரிசி மற்றும் கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குகிறது. நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படாத இந்த திட்டம் விவசாயிகளுக்கு பலனளிப்பதில்லை. இந்நிலையில், தற்போது விவசாயிகளிடமிருந்து மற்ற பயிர்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குவதற்கும் அல்லது தங்களது பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்க இயலாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் ஜேட்லி உறுதியளித்துள்ளார்.

மிக அதிகளவு செலவு பிடிக்கும் இத்திட்டத்தை அறிவித்துள்ள ஜேட்லி அதை எவ்வாறு செயல்படுத்தப்போகிறார் என்பதை விளக்கவில்லை.

படத்தின் காப்புரிமை AFP/ Getty Images

மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக நுகர்வோர்களிடம் விற்பனை செய்யும் திட்டத்தை செயற்படுத்தவும் 22,000 உள்ளூர் சந்தைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெரியளவிலான கொள்கை மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருந்தது விவசாயத் துறை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளிலுள்ள 25 சதவீத மக்கள் அதாவது கிட்டத்தட்ட 84 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமெனில் விவசாயத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர் என்று கூறுகிறது.

மற்ற நாடுகளில் மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் வேலை கிடைப்பதாக தெரிகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் முதலீட்டுக்கும் இடையேயுள்ள வீதம் கடந்த 11 ஆண்டுகளாக குறைந்துக் கொண்டே வருவதாக கூறுகிறது சமீபத்தில் வெளிவந்த பொருளாதார ஆய்வு அறிக்கை.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

முதலீடுகள் மீண்டும் உயராவிட்டால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. 2018-2019 காலக்கட்டத்தில் 5.1 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பின் மூலம் ஊக்கமளிக்க முயன்றார் ஜேட்லி. இதே அரசாங்கம் இதற்கு முன்பு சாலைகளை அமைப்பதற்கான பெரும் திட்டங்களை அறிவித்திருந்தது, அதில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருந்தன.

அரசாங்கம் தான் அறிவிக்கும் பெரும் திட்டங்களுக்குரிய முழு நிதியையும் அளிக்க இயலாது என்பதால், தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்கு தொழிலாளர், வரி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றில் சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதுடன் அதை சுற்றியுள்ள சட்டங்களை சுலபமாக்குவது அவசியமாகிறது.

ஏனெனில், ஒவ்வொரு மாதமும் வேலையை நோக்கிய தேடலை துவக்கும் பத்து லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பின்மை என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.

கல்வித்துறையில் நிலவும் மோசமான சூழலும் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கம் கல்விக்காக செலவிடும் தொகை 2011-2012ல் இருந்த 3.2 சதவீதத்திலிருந்து 2017-2018ம் நிதியாண்டில் 2.7 சதவீதமாக குறைந்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் 21 வங்கிகளை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் 2009ம் ஆண்டிலிருந்து இதுவரை 1500 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை செலவிட்டுள்ளது. கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளுக்கு செலவிடப்பட வேண்டிய தொகையானது இந்த வங்கிகளுக்கும், நிறுவனங்களுக்கும் செலவிடப்பட்டதாகவே கருத வேண்டும்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

இந்தியாவின் பொதுக் கல்வி திட்டத்தின் வாயிலாக படித்து வரும் மாணவர்களின் கற்றல் திறன் கடந்த பல ஆண்டுகளாக குறைந்தது வருகிறது. இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களால் அடிப்படை கற்றல் தரத்தை கூட அடையமுடியவில்லை.

இதுகுறித்து நிதிநிலை அறிக்கையின்போது குறிப்பிட்ட ஜேட்லி, ஆசிரியர்களின் தரத்தை மேம்பபடுவது குறித்தும் பேசினார்.

ஆனால், இது முன்னரே கூறப்பட்ட ஒன்றுதான். ஆரம்ப கல்விக்கு அதிகமான நிதியை ஒதுக்குவதை விடுத்து, இந்தியப் பள்ளிகளில் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் விதத்தில் மாற்றம் தேவைப்படுகிறது. இதுகுறித்த விடயங்கள்தான் அரசாங்கத்திடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளை கட்டுவதை விடுத்து, பெற்றோர்களுக்கு கல்வி கூப்பன்களை அளித்தால் தங்களுக்கு வேண்டிய பள்ளியில் குழந்தைகளை சேர்த்துக்கொள்வார்கள்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

துறைரீதியான தீர்வை எட்டுவதற்கு எந்த இந்திய அரசாங்கமும் விரும்புவதில்லை.

சுகாதாரத் துறையை பொறுத்த வரையில், அரசாங்கம் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திட்டமொன்றை செயற்படுத்த உத்தேசித்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 500,000 ரூபாய் வரையிலான சிகிச்சையை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துமனைகளில் பெறுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது.

ஆனால், இதுபோன்ற மிகப் பெரிய திட்டத்தை அரசாங்கம் எப்படி செயற்படுத்த போகிறது என்பதை ஜேட்லி விளக்கவில்லை.

சுருங்க சொன்னால், அறிவித்த திட்டங்களை அரசாங்கம் எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதை விளக்காமலே ஜேட்லி கனவுகளை விற்பனை செய்வதற்கு முயற்சித்திருக்கிறார் என்று கூறலாம். இதற்கு முந்தைய நிதிநிலை அறிக்கைகளை போலவே, இதுவும் இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சனையாக உள்ள கட்டமைப்பு சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது.

விவேக் கவுல் "இந்தியா'ஸ் பிக் கவர்ன்மென்ட் - தி இன்ஸ்ட்ரூசிவ் ஸ்டேட் அண்ட் ஹவ் இட் இஸ் ஹர்டிங் அஸ் (India's Big Government - The Intrusive State and How It Is Hurting Us)" என்ற புத்தகத்தின் ஆசிரியராவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :