"ஜிஎஸ்டி இழப்பீடு தமிழகத்துக்கு ரூ.613 கோடி, கர்நாடகத்துக்கோ 3,000 கோடி"

இந்தியாவிலேயே ஜி.எஸ்.டி. வரி அதிகம் வசூலிப்பதில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. வரிக்கான இழப்பீட்டுத் தொகையை பெறுவதில் கர்நாடகம் தமிழகத்தை முந்தி இருக்கிறது. கர்நாடகத்துக்கு ரூ.3,000 கோடி இழப்பீட்டுத் தொகையும், தமிழகத்துக்கு ரூ.613 கோடி இழப்பீட்டுத் தொகையும் அளிக்கிறது மத்திய அரசு. திறமையாக செயல்படும் மாநிலங்களுக்கு இது தண்டனையாக அமைகிறது. என்று கூறியுள்ளார் பேராசிரியர் மு.நாகநாதன்.

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பொருளியல் பேராசிரியரும், தமிழகத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான நாகநாதன், இந்திய பட்ஜெட் குறித்து பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேரலையில் உரையாடியபோது இதைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் வரி வருவாயை அதிகம் அளிக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகம் சிறப்பாக வரிவசூலில் ஈடுபடுவதால் இழப்பீடு குறைவாக இருப்பதாக மத்திய அரசு சொல்கிறது. மத்திய அரசின் இம்மாதிரி செயல்பாடு வரி வசூலில் சுணக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

அந்த உரையாடலில் அவர் கூறியவற்றில் இருந்து...

பட்ஜெட்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஜி.டி.பி. - வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக குறைந்திருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி சொல்லும்போது, இந்தியப் பொருளாதாரம் கடந்த நான்கு ஆண்டுகளாக சராசரியாக 7.5 சதவீதம் என்ற அளவில் வளர்ந்ததாகச் சொல்கிறார்.

படத்தின் காப்புரிமை PUNIT PARANJPE/AFP/Getty Images

கடந்த 15 ஆண்டுகளில் சராசரி எடுத்துப் பார்த்தால் 8 சதவீதம் அளவுக்குக்கூட வளர்ச்சி இருந்ததில்லை. இப்படியான சூழலில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.5 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

விவசாயம், தொழில்துறை, சேவைத் துறை என பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று துறைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்தான் இந்த வீழ்ச்சிக்கு பிரதானமான காரணம்.

இப்போது வேளாண் துறைக்கு புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், மாநில அரசின் அதிகாரத்துக்குள் தலையிடும் வகையில் இதை அறிவித்திருக்கிறார்கள்.

விவசாயத் துறையில் கூட்டுறவு முறையில் சந்தைப்படுத்துதல் என்பது தமிழகத்தில் நீண்டகாலமாக இருக்கிறது. விவசாயிகளுக்கான சிறப்புச் சந்தை, தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்ததுதான்.

படத்தின் காப்புரிமை DOMINIQUE FAGET/AFP/Getty Images

நிதிப் பற்றக்குறை 4.5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகக் குறைந்திருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். பற்றாக்குறை உண்மையில் குறைந்தால் சந்தோஷமடைய வேண்டியதுதான்.

ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு கடன் இருப்பதாக நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். அந்தக் கடன்கள், அவற்றுக்கான வட்டிகளைச் சேர்க்காமல் பற்றாக்குறை குறைந்திருக்கிறது என்று சொல்லக்கூடாது.

இந்தியாவில் வசிக்கும் 120 கோடி பேரில் 4 லட்சம் பேர்தான் பணக்காரர்கள். அதிலும் 4,000 பேர் மிகப் பெரிய பணக்காரர்கள்.

இந்தியாவின் 30 சதவீத செல்வம் இவர்களிடம்தான் இருக்கிறது. இந்தியாவில் 50 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறார்கள். இந்திய அரசின் புதிய பட்ஜெட், இவர்களுக்கென என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கிறது?

அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்கிறார் நிதியமைச்சர். ஆனால், அது சாத்தியமேயில்லை.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

இந்தியாவுக்கு தற்போது வரும் நேரடி அன்னிய முதலீடுகள் எல்லாம், இங்கு உழைப்பு குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்பதால் வருகின்றன.

இந்தியாவின் நிதியமைப்புகள் நீர்க் குமிழியைப் போல இருக்கின்றன என இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக பங்குச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் பெரும் வளர்ச்சி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது ஆய்வறிக்கை.

நிலைமை இப்படியிருக்கும்போது ஒரு வருடத்தில் பொருளாதார வளர்ச்சியில் எப்படி பெரிய மாற்றம் வரும்?

விவசாயம், உற்பத்தித்துறை, சேவைத் துறையில் முன்னோக்கிய பயணம் இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம். ஆனால், இந்தத் துறைகள் தற்போது பின்தங்கி வருகின்றன.

இந்தியாவில் விவசாய விலை ஆணையம் என்று ஓர் அமைப்பு இயங்கிவருகிறது. ஒவ்வொரு மாநிலமும் இதற்கான புள்ளிவிவரங்களை அளிக்கின்றன. இந்த ஆணையம்தான் விளைபொருளுக்கான விலையை நிர்ணயிக்கின்றன.

தமிழகம் போன்ற மாநிலங்கள் இந்த அமைப்பு கூறுவதைவிட அதிக விலையையே நிர்ணயிக்கின்றன.

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN/AFP/Getty Images

இப்போது, இந்த அடிப்படை விலையை அதிகரிக்கப்போவதாகச் சொல்கிறது பட்ஜெட். அப்படி விலை உயர்த்தி அறிவிக்கப்படும்போதுதான், எவ்வளவு உயர்த்தி அறிவிப்பார்கள் என்பது தெரியும்.

கூடுதலாக விலை அறிவித்தால் தானியங்களை அந்த விலையில் கொள்முதல் செய்ய அரசிடம் பணம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சென்ற ஆண்டு கங்கையைத் தூய்மைப்படுத்த (செலவிடப்படும் என்று) சொல்லப்பட்ட பணத்தில் 60 சதவீதம் செலவழிக்கப்படவில்லை.

கறுப்புப் பணத்தைப் பற்றி தொடர்ந்து ஆராய்ந்துவரும் அருண் குமார் என்பவர், இந்தியாவில் 30-40 லட்சம் அளவுக்குக் கறுப்புப் பணம் இருப்பதாகச் சொல்கிறார்.

கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவோம், வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம் என மோதி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தவிர, மோதி அரசு அந்தத் திசையில் வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த அளவுக்கு கறுப்புப் பணம் மீட்கப்பட்டது என்பதையும் இதுவரை அவர்களால் அறிவிக்க முடியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசு இப்போது அறிவித்திருப்பதைப் போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் 2004லிலேயே வந்துவிட்டது.

தவிர, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் இருக்கின்றன.

எல்லா மாவட்டங்களிலும் மிகப் பெரிய அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன.

உயிர் காக்கும் உயர் சிகிச்சைத் திட்டம் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் மேம்படுத்தப்பட்டது.

இந்தியாவில் 50 சதவீதத்திற்கு மேல் தலித்துகள் வசிக்கும் வட்டங்களில் ஏகலைவா மாதிரி சிறப்புப் பள்ளிகளை துவங்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதனை ஒரு தேர்தல் கால அறிவிப்பாகவே பார்க்கிறேன்.

இந்தியாவில் சிறப்பு உட்கூறுத் திட்டம் (ஸ்பெஷல் காம்பொனெண்ட் ஸ்கீம்) என்ற திட்டம் என்ற திட்டம் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. இதிலிருந்து தலித்களின் கல்விக்கு நிதி ஒதுக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் நீண்டகாலமாகவே நிதியைப் பெற்றுவருகின்றன. ஆகவே இதை புதிய திட்டமென்று சொல்ல முடியாது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது நிதி அறிவிப்புகள்தான். செய்யப்பட்ட அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செலவழிக்கப்பட வேண்டும். அதற்கு அரசிடம் நிதி வேண்டும்.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH/AFP/Getty Images)

மத்திய அரசின் நிதி ஆதாரம் சொல்லக்கூடிய அளவுக்குப் பெருகவில்லை. வருமான வரி வசூலைப் பொருத்தவரை 90 ஆயிரம் கோடி வசூலிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 2.5 கோடி பேர் மட்டுமே வரி கட்டுபவர்கள் என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். இது மிக மிகக் குறைவு.

வருமான வரி (வசூல்) என்பது அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இந்த வரியைக் கட்டுபவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள்.

வருமான வரி ஏய்ப்பு போன்ற நேர்முக வரி ஏய்ப்பிலிருந்துதான் கறுப்புப் பணம் வருகிறது. கடுமையான நிர்வாகச் சட்டங்களின் மூலம்தான் இதைச் சரிசெய்ய முடியும். டிஜிட்டல் பரிவர்த்தனையின் மூலமாக இதை அதிகரிப்போம் என்பது வெறும் யூகம்தான்.

மற்றொரு முக்கியமான பிரச்சனை, மத்திய அரசின் திட்டங்களுக்காக மாநில அரசுகள் செலவுசெய்யும்போது, மத்திய அரசு சொன்னபடி பணத்தைத் தருவதில்லை.

கட்டாய கல்விச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களை தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால், தற்போதுவரை மாநில அரசு தனியார் பள்ளிகளுக்குச் செலுத்திய கட்டணம் மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதனைக் கடுமையாக சுட்டிக்காட்டியிருக்கிறார். இருந்தபோதும் பலனில்லை.

Image caption சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர், மாநில திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர் மு. நாகநாதன்.

தற்போதைய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அருண் ஜேட்லியிடம் நிலுவைத் தொகையைக் கேட்டுவருகிறார்.

ஆகவே, இம்மாதிரி மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டுமென அறிவிக்கும்போது இதெல்லாம் மனதில் கொள்ளவேண்டும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :