மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் தீ

  • 2 பிப்ரவரி 2018

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

Image caption தீ விபத்தால் அந்தப்பகுதி புகை மண்டலமாக மாறியது

இந்த விபத்தில் பட கடைகள் தீயில் கருகி சேதமடைந்தன. இந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில் உள்ள கடைகளில் சிலவற்றில் இரவு 9 மணி வாக்கில் திடீரெனத் தீ பிடித்தது. முதலில் மூன்று கடைகளில் பற்றிய இந்தத் தீ, பிறகு மெல்ல மெல்ல பிற கடைகளுக்கும் பரவியது.

சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் இந்த விபத்தில் எரிந்து நாசமாகிவிட்டன.

மேலும் அருங்காட்சியகம் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியும் இந்தத் தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தின் காரணமாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லையென மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பக்தர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

மதுரை நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவில், 5 கோபுர வாசல்களைக் கொண்டது. இவற்றில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இரண்டு வாசல்களையும் ஒட்டி பல கடைகள் அமைந்துள்ளன. இந்தக் கடைகள் சிலவற்றிலேயே வெள்ளிக்கிழமை இரவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கடைகளில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்