கம்யூனிஸ்ட் மாநிலத்தில் பா.ஜ.க வெல்வது எப்படி?

  • அமிதபா பட்டாசாலி
  • பிபிசி
மேற்குவங்க இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு எச்சரிக்கை மணியா அல்லது உற்சாக வரவேற்பா?

பட மூலாதாரம், Getty Images

மேற்குவங்கத்தில் அண்மையில் நடந் ஒரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது. ஆனால், அந்தக் கட்சி தமது வாக்கு விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதும் அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முக்கியமாக கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் இழக்கும் வாக்கு விகிதத்துக்கு இணையாக பாஜக-வின் வாக்கு விகிதம் அதிகரிப்பதாக கருத்துகள் வெளியாகின்றன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் ஒருவர் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே இந்துத்துவ அரசியலின் வேர்கள் மேற்கு வங்கத்தில் ஆழ ஊன்றியிருந்ததாகவும், விடுதலைக்குப் பிறகு ஜனசங்கம் கையில் எடுக்கத் தவறிய சில அரசியல் பிரச்சினைகளைக் கையில் எடுத்ததன் மூலமே கம்யூனிஸ்டுகள் பிரபலம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்டுகளின் இழப்பு, பாஜக-வின் ஆதாயமாக மாறிவருவது எப்படி? இது குறித்து ஆராய்கிறார் பிபிசி செய்தியாளர் அமிதபா பட்டாசாலி.

எதிர்பார்த்தது போலவே சமீபத்தில் நடந்த உலுபேரியா நாடாளுமன்றத் தொகுதி மற்றும் நொபரா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றது.

வெற்றி பெற்ற கட்சியைவிட மிக மிகக் குறைவான வாக்குகளையே பாஜக பெற்றிருந்தாலும், அது அந்த இரண்டு தொகுதியிலுமே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதைவிட முக்கியமாக அக்கட்சியின் வாக்கு வீகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதே விமர்சகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

உலுபேரியாவில், 2014 தேர்தலில் 11.5% வாக்குகள் பெற்ற பாஜக தற்போது 23.29 சதவீத வாக்குகளையும் 2016 நொபரா சட்டமன்றத் தேர்தலில் 13 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற அந்தக் கட்சி தற்போது 20.7 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

ஆனால், அந்த இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் திரிணாமுல் காங்கிரசின் வாக்கு வீதமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், மேற்குவங்கத்தின் முக்கிய எதிர்கட்சிகளான கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரசின் வாக்கு வீதம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இடைத்தேர்தல்களிலோ அல்லது உள்ளாட்சித் தேர்தல்களிலோ பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது இடத்தை பெறுவது சமீப காலத்தில் இது முதல் முறையல்ல.

அரசியல் அறிவியல் பேராசிரியரும், மேற்குவங்க அரசியல் பார்வையாளருமான பிமால் சங்கர் நந்தா, "என்னைப்பொறுத்தவரை பாஜக இரண்டாம் இடத்தை பிடித்ததா இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால், அக்கட்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிதானமாக தனது வாக்கு வீதத்தை அதிகரித்துக்கொண்டு வருவதே முக்கியமானதாகும்" என்று கூறுகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கான்டாய் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில், பா.ஜ.க 30 சதவீத வாக்குகளைப் பெற்றது. கடந்தாண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இதே வாக்கு விகிதத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

"2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகே பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு விகித ஏற்றம் என்பது ஒரு போக்காக மாறத்தொடங்கியது. வெற்றிபெற்ற கட்சியுடன் ஒப்பிடும்போது அதிக வாக்கு வித்தியாசம் இருந்தாலும் பாஜகவால் இரண்டாமிடத்தை பெற முடிந்தது. திரிணாமுல் காங்கிரசின் மீதுள்ள பெரும்பாலான அதிருப்தி வாக்குகளை பாஜக பெறமுடிந்ததே இந்த வாக்கு விகித ஏற்றத்திற்கு காரணமென்று நான் நினைக்கிறேன்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சுபாஷிஷ் மொய்த்ரா.

இதுகுறித்து மேலும் பேசிய மொய்த்ரா "இதற்கு முன்பு திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் இடதுசாரி கட்சிகளுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ சென்றுக்கொண்டிருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மெதுவாக மாறி வருகிறது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இழந்துள்ள வாக்கு விகிதத்தை கணக்கிட்டால் அது கிட்டத்தட்ட பாஜக ஏற்றம் பெற்றுள்ள வாக்கு விகிதத்திற்கு சமமாக இருக்கும்" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

பாஜகவின் வகுப்புவாதப் பிரிவினை தந்திரத்தின் விளைவே இதன் பின்னணியில் உள்ளதென்று கூறி இவ்விவகாரத்தை பொதுமைபடுத்துவதற்கு அரசியல் ஆர்வலர்கள் முயற்சிப்பர்.

"ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அவர்கள் வகுப்புவாதத் தந்திரங்களை கையாண்டு மக்களை திரட்ட முயற்சிக்கிறார்கள். சமீபத்தில் இந்துத்துவ குழுக்களால் நடத்தப்பட்ட சில வகுப்புக் கலவரங்கள் அல்லது பேரணிகளை உற்றுநோக்கும்போது வகுப்புவாத அரசியல் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது தெரிய வரும். ஆனால், தொடர்ந்து அதிகரித்து வரும் பாஜகவின் வாக்கு விகிதத்திற்கு வகுப்புவாத செயல்பாடுகள் மட்டும்தான் ஒரே காரணமென்று கூறமுடியாது" என்று சுபாஷிஷ் மொய்த்ரா கூறுகிறார்.

"இது ராம்மோகன் ராய், வித்யாசாகர் மற்றும் ரவீந்திரநாத் ஆகியோர் வாழ்ந்த நிலமாகும். எனவே, மேற்கு வங்க மக்களை முழுவதும் வகுப்புவாதத்தின் மூலம் பிரிக்க முடியாது. அது நடக்காது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இருந்தபோதிலும், மேற்குவங்கத்தில் அரசியல் இந்துத்துவத்தின் வேர்கள் விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே ஆழமாக ஊன்றி உள்ளதாக பேராசிரியர் நந்தா எண்ணுகிறார்.

"ஜனசங்கம் செய்யத் தவறியதை செய்த கம்யூனிஸ்டுகள்"

"இது புதிதல்ல. விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பெருந்தலைவர்களால் இந்துத்துவக் குறியீடுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. விடுதலைக்குப் பிறகு இந்த வேலையை ஜனசங்கத்தால் தொடர்ந்து செய்ய இயலவில்லை. இந்தியப் பிரிவினை, கிழக்கு வங்கத்தில் இருந்து லட்சக்கணக்கில் தப்பி வந்த அகதிகளின் துயரம் ஆகியவற்றை ஜனசங்கம் கையில் எடுக்கத் தவறியது. ஆனால், அவற்றை கம்யூனிஸ்டுகள் கையிலெடுத்து பெரிய அளவில் பிரபலமடைந்தார்கள்," என்கிறார் அவர்.

மேற்கு வங்க அரசியலில் பாஜக நிலையான வாக்கு விகித அதிகரிப்பை பெறுவது ஒரு போக்காக மாறி வந்தாலும், அந்த அக்கட்சி இன்னும் அடிமட்ட அளவில் அமைப்பை வலுப்படுத்தவில்லை.

கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவதற்கு கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பல காலக்கெடுகளை விதித்திருந்தாலும் அதை செயல்படுத்துவதில் சிரமம் இருப்பதாக மாநில நிர்வாகிகள் நினைக்கின்றனர்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கை பெற்றவராக விளங்கிய முகுல் ராய் பாஜகவில் இணைந்தவுடன், கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்துவார் என்று நம்பினர் பாஜகவின் ஒரு பகுதியினர்.

திரிணாமுல் காங்கிரசை கட்டமைத்ததில் முக்கியமானவராக கருதப்படும் ராய், பாஜகவுக்கு சென்றதும் தனது சொந்த தொகுதியான நொபரா சட்டமன்றத் தொகுதியில் தாம் விரும்பிய ஒருவரை பாஜக வேட்பாளராகக் கூட நிறுத்த முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: