ஆயிரக் கணக்கில் சட்டவிரோதக் கருக்கலைப்பு: திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்கள், மருத்துவமனைக்கு சீல்

திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் மூன்று ஸ்கேன் மையங்களில் கருவில் இருப்பது பெண் குழந்தையா என்று சோதனைகள் நடைபெற்றதாகவும், ஒரு மருத்துவர் பத்து ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் கருகலைப்புகளை செய்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் மூலம், ஒரு தனியார் மருத்துவமனையில் பல பெண்களுக்கு கருவில் பெண் குழந்தையா என்ற சோதனை செய்யப்பட்டதோடு, விதிகளை மீறி கருக்கலைப்பு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று தனியார் ஸ்கேன் மையங்கள் முறையான படிவங்கள் எதையும் பூர்த்தி செய்யாமல் கருக்கலைப்பு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்று ஸ்கேன் மையங்களும் விதிகளை மீறி கருக்கலைப்பில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனையும் சீல் வைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தேடப்பட்டுவருகிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி திருவண்ணாமலையில் கருகலைப்பு செய்ததற்காக போலி மருத்துவர்கள் பலர் கைதாகியிருந்தாலும், தொழில்முறை மருத்துவராக உள்ள ஒருவர் விதிகளை மீறி கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளது இதுவே முதல்முறை என்றார்.

''கருவை ஸ்கேன் செய்யவும், கருக்கலைப்பு செய்யவும் அரசிடம் பதிவு செய்திருக்கவேண்டும். இந்த தனியார் மருத்துவர் அதுபோல எந்தப் பதிவையும் பெறாமல் பத்து ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தியுள்ளார். அதிகாரிகள் சோதனைக்கு சென்ற சமயத்தில் பல ஆவணங்களை அவர் கிழித்துபோட்டதை பார்த்துள்ளனர்.

அவரது அலுவலகத்தில் கிடைத்த ஆவணங்களைப் பார்க்கும்போது ஆயிரக்கணக்கான கருக்கலைப்புகள் நடந்திருக்கும் என்று அறிகிறோம். சோதனையின் போது அந்த மருத்துவர் தப்பிச்சென்றுள்ளார். அவரை தேடும்பணி தொடர்கிறது,'' என்றார் ஆட்சியர் கந்தசாமி.

பெண் குழந்தைக்கு எதிர்ப்பு

மேலும் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான மனோபாவம் இருந்துவருகிறது என்பதை அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் அறியமுடிகிறது என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''தமிழக அளவில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 911 பெண் குழந்தைகள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அந்த சராசரி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 871 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். அதேபோல, ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் விகிதமும் திருவண்ணாமலையில் அதிகமாக உள்ளது,'' என்றார்.

இளம் வயது திருமணம், பெண் குழந்தைக்கு முக்கியத்துவம் இல்லாமை போன்ற காரணங்களால் கருக்கலைப்பு தொடர்ந்து நடைபெறுவதாகவும் ஆட்சியர் கந்தசாமி பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் நடந்துள்ள கருக்கலைப்பு சம்பவங்கள், தமிழகத்தில் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களில் ஆய்வுகள் நடத்தப்படுகிறதா என்று சந்தேகம் எழுகிறது என்கிறார் சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்பிற்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜீவா.

மருத்துவர்களுக்கு கடும் தண்டனை இல்லை

''ஸ்கேன் மையங்களில் விதிகளை மீறி கருகலைப்பு செய்யும் மருத்துவர்கள் மீது இந்திய மருத்துவ கவுன்சில் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் நாற்பது மருத்துவர்கள் கருகலைப்பு மற்றும் கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்று சோதித்து கூறியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

குற்றம் இழைத்த மருத்துவர்களுக்கு, நீதிமன்றத்தில் காலை முதல் மாலை வரை இருந்துவிட்டுப் போகவேண்டும் என்பது போன்ற எளிய தண்டனைகளே வழங்கப்பட்டுள்ளன,'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய மற்றும் மாநில அளவில் சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்பைத் தடுக்க பெருமளவு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற மருத்துவர்கள் தொடர்ந்து செயல்படக் காரணம் என்றும் ஜீவா குறிப்பிட்டார்.

''விதிகளுக்கு மாறாக கருக்கலைப்பு செய்து தண்டனை பெற்ற மருத்துவர் ஒருவர் மருத்துவத்தில் தொடர்ந்து ஈடுபடக்கூடாது என்ற விதிமுறை கொண்டுவரப்படவேண்டும். இதுபோன்ற கருக்கலைப்பால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை அந்தந்த பகுதிகளில் ஆண்-பெண் குழந்தைகளின் விகிதத்தோடு பொருத்திப்பார்த்தல் எத்தனை பெண் குழந்தைகளை நாம் இழந்துள்ளோம் என்று தெரியும்,'' என்று ஜீவா பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :