200 ஆண்டு பழமையான 'பத்மாவத்' காவியத்தின் அரபி கையெழுத்து பிரதி

ராஜபுத்திரர்கள் வணங்கும் பத்மாவதி ராணியின் வரலாறு தவறாக கூறப்பட்டுள்ளதாக வெடித்த போராட்டங்களால் சமீபத்தில் வெளியான 'பத்மாவத்' எனும் இந்தி மொழித் திரைப்படம் பெரும் கவனத்தைப் பெற்றது.

அது 15ஆம் நூற்றாண்டில் மாலிக் முகமது ஜெயசி என்னும் கவிஞர் அதே பெயரில் எழுதிய கவிதைத் தொகுப்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

அதன் சுமார் 200 ஆண்டு பழமையான கையெழுத்துப் பிரதி ஒன்று ஐதராபாத்தில் உள்ள ஜாமியா நிஜாமியா இஸ்லாமிய மதக் கல்லூரியின் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த நூலகத்துக்கு சென்றார் பிபிசி செய்தியாளர் பல்லா சதீஷ்.

அந்த 216 பக்க பிரதி 1823இல் எழுதப்பட்டது. இஸ்லாமிய இலக்கியங்கள் மீது ஆர்வம் மிகுந்த முகமது அன்வருல்லா ஃபரூக்கி இந்த நூலகத்தை 140 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியுள்ளார் என்று அதன் நூலகர் முகமது ஃபைசுதீன் நிஜாமி பிபிசியிடம் கூறினார்.

ஃபரூக்கி ஐதராபாத் நிஜாம்களின் அரசவையில் அமைச்சராக பணி புரிந்தவர். நிஜாம்களாக இருந்த மிர் மஹபூப் அலி கான் மற்றும் மிர் ஒஸ்மான் அலி கான் ஆகியோரின் ஆசிரியராகவும் இருந்தவர்.

அந்த நூலகத்தில் உருது, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளில் சுமார் 2,500 பழங்கால இலக்கியங்களின் பிரதிகள் உள்ளன.

"முந்தைய காலங்களில் சாயம் மற்றும் கருங்கல் பொடி ஆகியவற்றைக் கலந்து எழுதப்பட்டு, பின்னர் அவை காயவைக்கப்பட்டு நூல்களின் பிரதிகள் உருவாக்கப்பட்டன. கையெழுத்து பிரதிகள் தற்போது கணினிமயப்படுத்தப்பட்டு வருகின்றன," என்று கூறினார் பைசுதீன் நிஜாமி.

"பத்மாவத் கவிதைத் தொகுப்பு அவாதி மொழியில் எழுதப்பட்டது. பின்னர் பார்சி மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜாமியா நிஜாமியாவில் உள்ளது அரபு மொழிபெயர்ப்பு," என்று பிபிசியிடம் கூறினார் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைகலைக்கழகத்தின் பேராசிரியர் நசீமுதீன் ஃபாரீன்.

"பத்மாவத் காவியத்தில் வரும் பாத்திரங்கள் பல்வேறு மனித உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. அவற்றை மிகவும் நுட்பமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார் ஜெயசி," என்று கூறினார் ஃபாரீன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்