பாரதியார் பல்கலை. துணைவேந்தர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிறையிலடைப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டிற்காக துணைவேந்தர் கணபதி மற்றும் வேதியல் துறைத்தலைவர் தலைவர் தர்மராஜ் ஆகியோரை லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

துணைவேந்தர் மற்றும் அவருக்கு உதவிய பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் பதவி நியமனத்திற்கு பணம் கேட்டதாக எழுந்த புகாரில் பேரில் பதினோரு மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின்னர் இருவரும் கைதாகினர். அவர்கள் பிப்.16 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரதியார் பல்கலையில் வேதியல் துறையில் பயிற்சி காலத்தில் இருந்த சுரேஷை உதவி பேராசிரியராக , பணி நியமனம் செய்வதற்கு துணைவேந்தர் கணபதி ரூ.30 லஞ்சம் கேட்டதாகவும், அவருக்கு வேதியல் துறை பேராசியர் தர்மராஜ் இடைத்தரகராக செயல்பட்டதாகவும், சுரேஷ் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது என லஞ்சஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை அதிகாரிகள் துணை வேந்தரின் இல்லத்திற்கு நுழையும் சமயத்தில் அவர் 28 புதிய ரூ.2,000 நோட்டுகளை கிழித்து கழிவறையில் போட்டதும் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் கழிவறையில் இருந்த பணத்தை எடுத்ததோடு, தண்ணீர் தொட்டி மற்றும் கழிவுநீர் தொட்டிகளையும் சோதனை செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

படக்குறிப்பு,

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் கணபதி

பாரதியார் பல்கலையில் துணைவேந்தராகப் பணியில் சேருவதற்கு முன்னர் கணபதி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிர்தொழில்நுட்பத் துறையின் தலைவராக பணிபுரிந்தார். கடந்த மார்ச் 2016ல் துணைவேந்தராக பதவிஏற்றுக்கொண்டது முதல் தற்போதுவரை, கணபதி மீது எழுந்த புகார்களின் தொடர்ச்சியாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

விசாரணை முடிந்து நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற சமயத்தில் ஊடகத்தினரிடம் பேசிய கணபதி அவர் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் வெளியூரில் இருந்து வந்து பணிக்கு சேர்ந்துள்ளதால், அவருக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இந்த வழக்கு என்று தெரிவித்தார்.

புகார் அளித்த உதவி பேராசிரியர் சுரேஷை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :